நமது நாடு ஒரு கூட்டாட்சி நாடு. அதாவது மத்தியில் ஓர் அரசும் மாநிலத்தில் ஓர் அரசும் என இரண்டு அதிகார அமைப்புகள் நாட்டை ஆள்வதால் நிர்வாகச் சிக்கல்கள் வரக்கூடும்.அதனால், மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்ற சிந்தனை ஏற்பட்டது.
பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை ஆராய்ந்து, அவற்றிலிருந்த சிறப்பம்சங்களை எடுத்து, அதில் நம் நாட்டிற்கு ஏற்றவாறு திருத்தங்களைச் செய்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு ஏழின் கீழ் மத்திய அரசு, மாநில அரசின் அதிகார எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்படி மத்திய அரசின் கீழ் இருக்கும் துறைகளின் அதிகார முடிவுகளை மாநில அரசோ, மாநில அரசின் கீழ் இருக்கும் துறைகளின் அதிகார முடிவுகளை மத்திய அரசோ திருத்த முடியாது.
கல்வியானது பொது பட்டியலுக்கு மாற்றம் :-
பொதுப்பட்டியலில் இருக்கும் துறைகளின் முடிவுகளை மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து எடுக்க சம உரிமை உள்ளது. எனினும் மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. மத்தியப் பட்டியலில் பாதுகாப்பு, அணுசக்தி, பணஅச்சடிப்பு என 97 துறைகள் உள்ளன.அதேபோல் மாநிலப் பட்டியலில் வேளாண்மை, சிறைச்சாலைகள், கல்வி, விளையாட்டு என 66 துறைகள் இருந்தன.
இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த கால கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
ஆனால் 1976இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, நெருக்கடி நிலைக் காலத்தில் கல்வியும் விளையாட்டும் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன.கல்வியுடன் வனம் மற்றும் வன விலங்குகள், பறவைகள் பாதுகாப்பும் பொதுப் பட்டியலுக்கு மாறின.
விளைவுகள் :-
கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் மாநில அரசுகளுக்கும் அதில் மாற்றங்கள் செய்ய சம உரிமை உண்டு. ஆனாலும் மத்திய அரசின் கை ஓங்கி இருப்பதால் மாநில அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலையே உள்ளது.
இந்த அதிகாரதில்தான் நீட் தேர்வில் தொடங்கி தேசிய கல்வி கொள்கை என கல்வி சார்ந்த பல்வேறு விவகாரங்களை மத்திய அரசு முன் நிறுத்துகிறது.
இதனால், கல்வி தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும்போது, மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் தற்போது மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி என்பது அந்தந்த மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நீட் தேர்வை எடுத்துக்கொண்டோம் என்றால் மாநில அரசுக்கு மத்திய அரசின் நீட் தேர்வு சட்டத்தை எதிர்க்க முடியும், கோரிக்கை விடுக்க முடியும், ஏன் சட்டசபையில் தீர்மானம் கூட கொண்டு வர இயலும். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இதுவே கல்வியானது மாநில அரசின் பட்டியலின் கீழ் இருந்தால் மத்திய அரசு கொண்டு வந்த நீட்டை மாநில அரசிடம் இருந்த கல்வி உரிமையை கொண்டு ரத்து செய்து இருக்க முடியும்.
பொதுப்பட்டியலுக்கு எதிராக…
கல்வியைப் பரவலாக்கவும், சமச்சீராக அமைக்கவும், அனைவருக்கும் கட்டாயமாகக் கல்வி தந்திடவும், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநில அரசின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்றி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்களும், திமுக உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சியிகளும் கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி, தி.மு.க., எம்.எல்.ஏ., எழிலன் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 8 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதலில் மாநிலப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும். இதைச்செய்யாமல், தமிழக அரசு தற்போது கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வருவது கல்வித்தரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில்தான், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய திமுக எம்.எல்.ஏ. எழிலனின் தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
கல்வியை மாநில பட்டியலுக்கு ஏன் கொண்டு வர வேண்டும்?
1) கல்வி சம்பந்தப்பட்ட எந்தவிதமான மாற்றம், சீர்திருத்தமாக இருந்தாலும் மாநில அரசு இயற்றும் சட்டமே இறுதியானது என்ற அதிகாரம், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பிக் கொடுப்பதன் மூலம் மாநிலங்களுக்கு கிடைக்கும்.
2) மாநில மக்களுக்கான கல்வித் தேவை, வடிவமைப்பு, விருப்பம் ஆகியவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது சட்டவிரோதமானது. கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது.
3)மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான கூட்டாட்சி முறையாக இருக்கும்.
4)தேசிய கல்வி கொள்கையின் மூலம் மத்திய அரசு மாநில மொழிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளி, இந்தி மொழியை முன்னிலைப்படுத்தி வருகின்றன. இதனால், காலப்போக்கில் மாநில மொழிகள் படிப்படியாக அழிந்துவிடும். பல ஆயிரம் ஆண்டுகளாக மாநில மக்கள் கடைப்பிடித்து வருகின்ற பண்பாடு, பழக்க வழக்கங்களை, இந்தி மொழித் திணிப்பு அழித்துவிடும்.
5) மாநில அரசுகளிடம் இருக்கின்ற கல்வியை, முற்று முழுதாகத் தனியார்மயம் ஆக்குகின்ற வகையில்தான் புதிய கல்விக்கொள்கை இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகள் தாங்கள் ஈட்டுகின்ற லாபத்தை, முதலீடாக மாற்ற வகை செய்கின்றது. கல்விக் கொள்ளை நடைபெற வழி வகுக்கின்றது.
6) 15 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்து இருந்தாலும், அது உயர்கல்விக்கான தகுதி இல்லை என புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. அதன்பிறகு, இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களை வைத்துத்தான் கல்லூரியில் சேர்கப்படுவார்கள் என்பது உயர்கல்விக்கு வழி வகுக்கின்றதா?
7) மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை தன் கையில் எடுத்துவருவதோடு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டும் மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது.
8) கல்வி பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாறினால் மட்டுமே அந்ததந்த மாநிலத்தின் பாரம்பரிய கல்வி முறைகளை பயில முடியும். இல்லையென்றால் ஹிந்தி திணிப்பை போல் மத்திய அரசின் கல்வி கொள்கைகளையே மாணவர்கள் படிக்க முடியும்.
9) மாநில அரசின் கொள்கையானது சட்டங்களாகவும் விதிமுறைகளாகவும் அரசாணைகளாகவும் வடிவம் பெற வேண்டும். சட்டம் இயற்றும் நிலையில், முரண்பாடுகள் எழுந்தால் ஒன்றிய அரசின் அதிகாரமே மேலோங்கி நிற்கும்.
10) எல்லாவற்றையும் தாண்டி மத்திய அரசின் அதிகாரத்தினால் கொண்டு வரப்பட்ட நீர் தேர்வினால் தங்கள் ஒப்பற்ற உயிரை இழந்து வரும் மாணவர்கள், இனியும் தங்கள் உயிரை மாய்க்காமல் தங்கள் கனவை நோக்கி பறக்க இயலும்!!??