தமிழ்த்தேசியம் என்றொரு உயர்வான உணர்வை, ஒன்றுபட்ட சமூக நிலையை எட்ட சாதியை ஒழிப்பது தவிர்க்க முடியாத முன்நிபந்தனை ஆகிறது.
தமிழ்த்தேச விடுதலைக்கு சாதி ஒழிப்பின் உடனடி அவசியம் குறித்து கட்சிகளும், இயக்கங்களும் பல்வேறு ஆய்வுகளுடன் தெளிவாக முன்வைத்திருக்க அதனை தவிர்த்து விட்டு அதற்கு நேர் எதிரான பெங்களுரு குணாவின் இனவெறி சாதிய தேசியத்தை தூக்கிபிடித்துக் கொண்டு, இன்று இதுதான் தமிழ்த்தேசியம் என்று ஒரு தரப்பு பறைசாற்றுகிறது. இதிலிருந்து அவர்களுக்கு தமிழ்நாட்டினுள் நிலவும் முரண்பாடுகள் பற்றிய தெளிவோ, தமிழ்த்தேசியத்தின் மீது அக்கறையோ , தமிழ்ச்சமுகத்தின் வளர்ச்சி மீதான பார்வையோ அறவே இல்லை என்பதுதான் உறுதிப்படுகிறது.
தமிழ்நாட்டின் (இந்தியாவிலும்) அடிப்படை முரண்பாடான சாதியை ஒழிப்பது குறித்த கண்ணோட்டம், திட்டம் ஒரு தமிழ்த்தேசிய இயக்கத்திற்கு இன்றியமையாதவை.
சாதியக் கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு மக்கள் ஒன்றுபட்டால் மட்டுமே ஒரு சமூகம் தேசியமாக உருவெடுக்க முடியும் என்றிருக்க, ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ பிற்போக்கு சக்திகளின் திட்டமான சாதியக் கட்டமைப்பை தக்கவைத்தலை தூக்கிபிடித்து தமிழக அரசியல் சூழலை ஓரு நூற்றாண்டுக்கு பின் அழைத்துச் செல்ல முயல்கிறது இந்த ஆபத்தான சாதிய தேசியம்.
தமிழ்த்தேசியம் தமிழர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும், ஓர்மைப் படுத்த வேண்டும் என்றால் அதற்கு தடையாக இருக்கும் சாதியை ஒழிப்பது குறித்து பேசாமல் அதன் ஆதிக்கத்தை முறியடிப்போம் என்கிறார்கள் இந்த சாதிய தேசியவாதத்தை முன்வைப்பவர்கள். ஆதிக்கத்தை முறியடிப்போம் என்றால், ஆதிக்கத்தை மட்டும் அகற்றினால் போதும், சாதிகள் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கான அர்த்தம். அப்போதுதானே ஒருவர் தமிழரா? இல்லையா? என்பதனை கண்டுபிடிக்க முடியும்.
அருவருக்கதக்க சாதிய அமைப்புமுறையை தன்னுடைய பிரதான அடையாளமாக கொள்ளும் ஒரு கருத்துரு முற்போக்கின் அம்சமாக இருக்க வாய்ப்பேயில்லை என்பதோடு, அது நிலவும் சாதிய படிநிலையையும், சாதிப்பெருமைகளையும் தக்கவைக்கவே போராடுகிறது. அது முன்னேற வேண்டிய சமுகத்தை பின்னோக்கி இழுக்கும் பணியை மட்டுமே செய்கிறது. எல்லோரும் சாதிகடந்து தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும், சாதி ஒழிக்கப்படாமல் அகற்றப்படாமல் ஒன்றிணையவேண்டும் என்பது, “இந்துக்களாக ஓன்றிணையுங்கள்” என்று ஆர்.எஸ்.எஸ் சொல்வதை போன்றதாகும்.
கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு சாதிக்கலவரங்கள், சாதிய படுகொலைகள் போன்றவற்றில், சாதிய அடிப்படையில் தமிழ்த்தேசியத்தை அணுகுபவர்களின் நிலைப்பாட்டை பார்த்தாலே தெரியும். இவர்கள் முதலில் கண்டும் காணமலும் இருக்க முயற்சிக்கின்றனர், பின்னர் பட்டும் படாமலும் அதனை கடந்து செல்ல முயற்சிக்கின்றனர். தமிழ் உறவுகள் வெட்டிக் கொல்லப்படும் போது இவர்கள் காக்கும் மௌனம் யாரை காப்பாற்றுவதற்காக என்ற கேள்வி தமிழர் ஒற்றுமையை விரும்பும் ஒவ்வொருவரின் மனதிலும் எழவேண்டும். அப்போதுதான் தமிழ்த்தேசியத்தை நோக்கியதான பண்பு வளர்ச்சியடைகிறது என்பதை நாம் உறுதி செய்ய முடியும்.
தமிழ்த்தேசியம் பேசுவதாக சொல்லிக்கொள்ளும் பெரும்பாலோர் தங்கள் சாதிப்பெருமைகளை விடத் தயாராக இல்லை, சாதிஒழிப்பு அவர்களது எண்ணத்திலும் இல்லை. தமிழ்த்தேசியத்தின் முக்கியமான இலட்சியங்களில் எதனையும் தங்கள் திட்டங்களில் கொள்ளாமல், அறிவியல்பூர்வமான தமிழ்த்தேசிய கோட்பாடுகளை பேசாமல், பகட்டான ஆரவார மேடைப் பேச்சின் மூலமாக தமிழ்த்தேசியத்தின் அடிப்படையான இலக்குகளை மறைத்துவிட்டு போலித்தனமான இலக்குகளை நோக்கி தமிழக மக்களை திசைதிருப்பும் பணியைத்தான் இவர்கள் இந்து ஆளும், அதிகார வர்க்கத்தின் ஆசியுடன் நடத்தி வருகின்றனர்.
தமிழ்த்தேசியம் என்பது அறிவை தேடுவதற்கான தளம். மனிதகுல முன்னேற்றத்தில் தமிழ் நாட்டை இணைப்பதற்கான தளம்.. தொலைநோக்கு பார்வையுடன் ஓரு தேசத்தை படைப்பதற்கான உணர்வெழுச்சி.
பிற்போக்கான கொள்கைகள் மூலமாக அதனை தடைசெய்யும்,தடுத்து நிறுத்தியும் பின்னோக்கி இழுத்துக் கொண்டும் தங்களை தமிழ்த்தேசியவாதிகளாக காட்டிக்கொள்வோரை அடையாளம் காண்பதும், அம்பலப்படுத்துவதும் நமது இன்றியமையாத கடமையாகிறது