பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2009யை மையமாக வைத்து பார்க்கும் போது இலங்கை அரசிற்கு ஒரு அரசியல் தீர்வு அல்லது அதிகாரப் பகிர்வு குறித்த இரண்டு நிலைப்பாடுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பு இல்லை. இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இலங்கை மக்கள் உலக நாடுகளிடம்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தற்போது அதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இத்த கைய சூழலில் ஒரு தேக்க நிலை என்று சொல்லும்பொழுது அரசியலைப் பொறுத்தவரை நீரோட்டம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதன் வேகமும், பாதையும் தான் நாம் பார்க்க வேண்டும். அரசியலுக்கு ஓய்வே கிடையாது.
இன்றைய நிலையில் இலங்கை மக்களின் திசை எவ்வாறு இருக்கின்றது என்றால் உலக நாடுகளை நோக்கியும் அதோடு மட்டுமல்லாமல் ஐக்கிய நாட்டு மனித உரிமை மன்றதை நோக்கியும், ஐக்கிய நாட்டு பாதுகாப்பு குழுமத்தை நோக்கியும், உலக நாடுகளின் மனச்சாட்சி, நீதி, அரசியல் பக்கமும் அவர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. ஆதலால் தேக்க நிலை என்பது பிறரின் மனநிலைதான். எப்பொழுது ஒரு இயக்கம்,ஒரு போராட்டம், ஒரு அதிவேகம் அல்லது உந்துதல் போன்றவற்றின் மூலம் போராட்டங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது தான் என்பதை நாம் மறுக்க முடியாது. காரணங்களும்,கருவிகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நாம் பார்க்கின்ற தளங்கள்தான் மாறுகின்றன.
முன்பை விட இலங்கை மக்கள் தம்முடைய எதிரியாக அது இலங்கை அரசாங்க இருக்கட்டும் அல்லது இலங்கை அரசுக்கு உதவியாக இருந்த நாடுகளாக இருக்கட்டும் அவர்களின் ஒரு ராணுவ ரீதி அல்லது மக்கள் நீதி சார்ந்த செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் தெளிவாக உணருக்கின்றனர். இந்த 70 ஆண்டு போராட்டத்தில் மிகப்பெரிய படிப்பினை என்னவென்றால் இலங்கை மக்கள், இலங்கை அரசாங்கத்திடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்னபதை கேட்பதற்கு முன்பை விட இப்பொழுது தெளிவான நிலையில் இருக்கிறார்கள்.அதை இலங்கை அரசிடம் இருந்துதான் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மிக பெரிய அரசியல் மாற்றம் என்று நினைப்பது என்னவென்றால் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதி இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தான் பெற வேண்டும் என்று 70 ஆண்டுகளுக்கு மேலாக நினைத்து கொண்டிருக்கிறோம்.
கடந்த 15 ஆண்டுகளில் நிறைவேறிய மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால் இலங்கை அரசாங்கத்திடம் மாற்றத்தை வேண்டுவது அவசியமே கிடையாது. ஏனெனில் இலங்கை அரசாங்கமும், இலங்கை சிங்கள பேரினவாதமும் இன்று குற்றவாளிக்கூண்டில் உலகில் நிற்கிறது. ஆதலால் இலங்கை மக்கள் தேடுவது எல்லாம் உலகளாவிய நீதியைதான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதானால் இதை தேக்க நிலை ஒன்று இல்லை.
ஈழ அரசியலில் ( தலைமையில்,இயக்கத்தில் ) ஏதேனும் வெற்றிடம் உள்ளதா?
தலைமையில் நிச்சயமாக வெற்றிடம் இருக்கின்றது. முதலில் இன்றைய நிலையில் ராணுவ ரீதியான ஆயுதப் போராட்டமாகவோ அல்லது அரசியல் போராட்டத் தளத்திலோ ஒரு ஒருங்கிணைந்த அரசியல் தலைமை இல்லை என்பது ஒரு வெற்றிடம் தான். இரண்டாவதாக அத்தகைய தலைமையை உருவாக்க வேண்டிய சூழலில் அது எத்திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை தெளிவாக நம்மால் படம்பிடித்து பார்க்க முடியவில்லை. அதுவும் ஒரு வெற்றிடம்தான். மூன்றாவதாக இலங்கை மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்று பல திசையிலான குரல்கள் இருக்கின்றன. அத்தகைய குரல்களை எவ்வாறு ஒருங்கிணைத்து தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவான ஒரு குரலில் பேசக்கூடிய குரலை அவர்கள் வேண்டி நிற்கிறார்கள்.
ஆதலால் அத்தகைய ஒரு அரசியல் நிலைபாட்டில் ஒரு வெற்றிடம் இருக்கிறது.அதற்கு காரணங்களும் இருக்கின்றன. அதற்கு காரணம் உள்நாட்டு அரசியல். உள்நாட்டு அரசியல் என்று சொல்லும்பொழுது தமிழீழ உள்நாட்டு அரசியல், உள்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு அதோடு மட்டுமல்லாமல் அதன் கட்சிகளின் தலைமையில் இருக்கின்ற தலைவர்கள், பிராந்திய கட்சிகளின் தலைவர்களின் நிலைப்பாடுகள் போன்றவை காரணமாக உள்ளன. பத்து பதினைந்து ஆண்டுகளில் புதியதொரு தலைமை உருவாகாமல் இருப்பதற்கு மிகப்பெரிய ஆச்சரியம். ஒரு தலைமை உருவாகாமல் இருப்பது என்று சொல்லும்போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கட்டும், மற்ற கட்சிகளாக இருக்கட்டும் அவை அனைத்துமே உள்நாட்டு பிரச்சனை என்று சொல்லும் பொழுது அது தேசிய பிரச்சினையாக அவர்கள் ஒரு புறம் பேசுவதும் அல்லது அது தேசிய பிரச்சனை இல்லை இந்தியா இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாக பேசுவது என்பது மிகப்பெரிய ஒரு இடைவெளி. ஆதலால் தலைவர்கள் தங்கள் கட்சிகளுக்குள் எத்தகைய ஒரு கருத்தை முன்வைக்கின்றார்கள் என்பது முக்கியம்.
இலங்கையில் நடந்தது “இனப்படுகொலை” என்று அனைவருமே சொல்லலாம். ஆனால் இதை தேசிய பிரச்சனையாக பேசுவதும் அல்லது உள்நாட்டு அதிகாரப் பகிர்வும் சார்ந்த ஒரு பிரச்சினையாக பேசுவதற்கும் இருக்கின்ற ஒரு இடைவெளி. அதோடு மட்டுமல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் கடந்து இலங்கை மக்கள் எத்தகைய தலைமையை தேடி அவர்கள் நிறுத்த வேண்டும் என்பதையும் அதோடு அதற்கான இயக்கங்கள், அதற்கான கொள்கை சித்தாந்தங்கள் வரைவு என்று சொல்லும்பொழுது புலம்பெயர்ந்த சமூகத்தின் நிலைப்பாடுகளும் மிக மிக முக்கியம். புலம் பெயர்ந்த சமூகம் எத்தகைய சிந்தனையில் இருக்கின்றது என்பது முக்கியம். புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்லும் போது பொருளாதார ரீதிக்காக பிற நாடுகளுக்கு சென்றவர்கள் அல்ல. கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு, வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்ட ஒரு சமூகம். ஆதலால் அவர்களுக்கு இந்த அரசியல் தீர்வில் மிக முக்கிய பங்கு இருக்கிறது.அந்த பங்கை அரசியல் ரீதியாக எவ்வாறு அங்கீகரிக்க வேண்டும்? ஏதோ அவர்களுடைய மேலாண்மைக்காக நிதி உதவி கேட்பதும், வடக்கு கிழக்கு மேலாண்மை என்று சொல்லும் பொழுதும் அல்லது வளர்ச்சிக்கான பணிகளுக்கான ஒரு உதவி என்று கேட்பதும் அதோடு மட்டுமல்லாமல் இலங்கை அரசாங்கம் அவர்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றது அல்லது எவ்வாறு அவர்களை சித்தரிக்க விரும்புகிறது என்று பார்க்கும் பொழுது இலங்கை அரசு புலம் பெயர்ந்த சமூகத்தை எப்பொழுதுமே அயலராகவே பார்க்கிறது.
கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட ஒரு சமுகம் இந்த உள்நாட்டு அரசியலில் அவர்களை வெளிப்புறமாக நிற்க வைத்து அரசியல் பேசுவது என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது. இதற்கு ஈழ தமிழர்கள் அனைவருமே ஒன்று கூடி தீர்வு காண முடியும். ஆதலால் இலங்கை அரசாங்கம் எவ்வாறு புலம் பெயர்ந்த சமூகத்தை தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களாக சித்தரிப்பதில் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஆதலால் தமிழ் தேசிய இனப் பிரச்னையாக பார்க்கும் பொழுது புலம் பெயர்ந்த சமூகமும், தாயகத்தில் வாழ்கின்ற மக்களும், அரசியல் கட்சிகளும், இதனை ஒருங்கிணைந்து பார்வையாக பார்க்கும் பொழுதுதான் இதில் மாற்றமும் நிகழும்.அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டுகின்ற ஒரு அரசியல் நிலைப்பாட்டினை உருவாக்க வேண்டும்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் பணி இருக்கிறது. புலம் பெயர்ந்த சமூகம் என்ன பணி செய்ய வேண்டும் என்பதை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அது அரசியல் பணி ஆகட்டும், ஐக்கிய நாட்டு மன்ற பணிகளாகட்டும். தாயகத்திலிருந்து இருந்தோ, வடக்கு கிழக்கில் இருந்தோ அதை செய்வதற்கான நிறைய தடைகள் இருக்கின்றன. அரசியல் தடைகள் இருக்கின்றன. மனித உரிமை தடைகள் இருக்கின்றன.ஆதலால் இவை அனைத்தையும் இணைத்துதான் ஒரு புதிய அரசியல் பார்வை ஏற்படு முடியும். இவை அனைத்தையும் பற்றி நாம் அலசும் பொழுது தான் அந்த வெற்றித்திற்கான காரணத்தையும்,வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஒரு கோட்பாடுகளையும் கொண்டு செல்லலாம்.
இந்த இரண்டு கோட்பாடுகளில் இருந்து ஈழத்தின் திசை வழி அரசியல் என்பது தேக்க நிலையில் இல்லாமல் ஒரு சீரான பயணத்தில் பயணித்து கொண்டுதான் இருக்கிறது என்பதையும், ஈழ விடுதலை என்பது இந்தியா அல்லது இலங்கை போன்ற நாடுகளின் கையில் இல்லை என்பதும் சர்வதேசத்தை நோக்கி நோக்கி அது நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கான நீதி மற்றும் ஈழ மக்களின் விடுதலைக்கான வேட்கை என்பதை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது என்பதும் ஈழ விடுதலை இனி இலங்கையின் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய தேவையில்லை என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மேலும் இலங்கை அரசியலில் உள்ள வெற்றிடம் என்பதை புலம்பெயர்ந்த மக்களும், ஈழத்தைச் சார்ந்த மக்களும் இணைந்து நிரப்ப வேண்டும் என்பதையும் அவர்கள் இருவரும் இணைந்தால் மட்டுமே இந்த வெற்றிடம் சரியானதொரு தலைமையினால் நிரப்பப்படும் என்பதும் தெளிவாகிறது.