அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ” அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளிலிருந்து போலியாக கம்பெனிகளைத் தோற்றுவித்து அதன் பங்குகளை விலை ஏற்றியதாகப் பல்வேறு சான்றுகளை அந்த ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.
அதானி குழுமத்தில் பெரும்பாலான பங்குகள் அந்த நிறுவனத்தின் குடும்பத்தைச் சார்ந்த நபர்களிடம் மட்டும் இருப்பதாகவும் மேலும் , வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை” என பல குற்றச்சாட்டுகளை, அதானி குழுமத்தின் மீது முன்வைத்துள்ளது .
இந்த நிலையில் ஹிண்டன் பர்க் அறிக்கை மூலம் புதன்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை அதானி குழுமம் இழந்து முதலீட்டாளர்களுக்குப் ( பெரும் பணக்காரர்கள் மட்டும் என்று நினைத்து விட வேண்டாம், நடுத்தர வர்க்கமும்) பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதானி குழுமமோ இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தவறான தகவல். இது எங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக வந்த அறிக்கை. எங்களின் வீழ்ச்சியில் ஹிண்டர்ன்பர்க் பலனடைய பார்க்கின்றது. முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைக்க பார்க்கிறது என்று அதானி சார்பில் கூறப்பட்டுள்ளது.
உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடம்பிடித்த அதானி தற்போதைய ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மோடி குஜராத் முதல்வரான பின்புதான், அதானியின் தொழிலும் வணிகமும் உயரப் பறக்கத் தொடங்கிது.குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றபின்பு தான் அவருடைய வளர்ச்சி வேகம் பிடித்தது.
மோடியின் நெருக்கத்தால் மட்டுமே அதானி குழுமம் மீண்டும் மீண்டும் அரசாங்கத்தின் மூலம் பெரும் லாபத்தை கடனாகவும், கடன் தள்ளுபடி மூலமும் பெற்று வருகிறது. எனவே இந்த மோசடியை வெறும் அதானி யோடு மட்டும் பார்க்க கூடாது. ஹிண்டன் பர்க் முன் வைக்கும் மோசடியில் மோடியின் பங்கு முக்கியமானது.
முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையான கூட்டு எல்லோரும் அறிந்தது தான். காங்கிரசுக்கும் அதானிக்கும் கூட கூட்டு உண்டு தான். ஆனால் அதானி – மோடியின் கூட்டு அதற்கும் மேலானது.
குஜராத்தில் 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தியை அதானி தொடங்கி கார்ப்பரேட் உலகில் ஆழமாகக் கால்பதித்தார். நாட்டில் எந்த கம்பெனி விற்பனைக்கு வந்தாலும் அதை அதானி விலைக்கு வாங்க ஆரம்பித்தார்.
2014-ம் ஆண்டு அதானியின் சொத்து 7.1 பில்லியன் டாலராக இருந்தது.
2020-ம் ஆண்டு அதானியின் சொத்து 10 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஆனால், பங்குச் சந்தையில் நடந்த கிடுகிடு வளர்ச்சி காரணமாக அவரின் சொத்து 2022-ம் ஆண்டு 152 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. இந்த வளர்ச்சியை தான் மோசடி என்று ஹிட்டன் பர்க் குற்றம் சாட்டுகிறது.
ஹிட்டன் பர்க் நிறுவனம் சரியானது என்று நாம் கூறவில்லை. ஹிட்டன் பர்க்கின் உள்நோக்கம் குறித்து நாம் கவலை கொள்ளவில்லை. அவர்கள் முன் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டின் தன்மையை நம்முடைய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு இந்தக் கூட்டணி நாட்டை எப்படி திவால் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
அதானியின் வளர்ச்சியை வெறும் மோடியோடு மட்டும் நாம் பார்க்கவில்லை. தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்களின் விளைவு தான் அதானியின் வளர்ச்சி. 1991 களில் காங்கிரஸ் தொடங்கி வைத்த உலகமயமாக்களின் போதே அதானியின் வளர்ச்சியும் , அம்பானி வளர்ச்சியும் தொடங்கிவிட்டது.
மோடி குஜராத் முதல்வராக இருந்த போதும் இந்தியாவின் பிரதமராக உயர்ந்த பின்பும் அதானி எப்படி நடுவன் அரசைக் கைக்குள் வைத்துக்கொண்டு வங்கிகளில் கடன் பெற்று , அரசின் கொள்கையை தனக்கு சாதகமாக மாற்றி உலகக் கோடீஸ்வரராக மாறினார் என்பதும் அதன் மூலம் எப்படி இந்தியா திவாலாகி கொண்டிருக்கிறது என்பதையும் ,ஏழை எளிய மக்கள் கடும் நெருக்கடி சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பழங்குடிகள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் விரிவாக பார்க்கலாம்.
க. இரா.தமிழரசன்
(தொடரும்)