முதலமைச்சர் மோடி- அதானி நட்பு
ரத்தச் சகதியில் பூத்த நட்பு
” 2001-ல் அடுத்த கட்டத்தை எட்டினேன். அப்போது குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தார். முன் எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் தொழில் வளங்கள் வளர்ச்சி பெற்றன. அதற்கு அவரது ஆட்சியில் கொண்டு வந்த கொள்கைகள் காரணம்.”- அதானி
2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்பட்டது. இந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.
இஸ்லாமியர்கள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்காக அந்த மாநிலத்தின் முதல்வராக அப்போது இருந்த மோடியை `இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry – CII) கண்டித்தது.
இந்தியாவின் வர்த்தக நெட்வொர்க்கின் மிகப்பெரிய கூட்டமைப்பால் மோடி கண்டிக்கப்பட்டபோது, கூட்டமைப்பின் உள்ளிருந்தே அதை எதிர்த்தவர் கௌதம் அதானி. உன் மீது படிந்திருக்கிற ரத்த கறையோடு உன்னை கட்டி தழுவ நான் தயாராக இருக்கிறேன் என்று முதல் நாளாக மோடிக்கு ஆதரவாய் நின்றார்.
குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களுடன் `குஜராத் மறுமலர்ச்சி குழுமம்’ என்ற வர்த்தகக் கூட்டமைப்பைத் தொடங்கிய அதானி, மோடிக்காக சி.ஐ.ஐ கூட்டமைப்பை விட்டு விலகப்போவதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மோடிக்கும், அதானிக்கும் இடையிலான நட்பு அதிகரித்தது.
2003-ம் ஆண்டு, குஜராத் மாநில அரசு நடத்திய `வைப்ரன்ட் குஜராத்’ என்ற தொழிலதிபர்களுக்கான மாநாட்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய்வரை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்து மோடி உடனான நட்பை ஆழப்படுத்தினார்
மோடி ஆட்சி காலத்தில் குஜராத் கட்ச் வளைகுடாவில் முந்த்ரா பகுதியில் துறைமுகம் விரிவாக்கப்பணிக்காக அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியது . ஏறத்தாழ 14 ஆயிரம் ஏக்கர் நிலம் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட்டு நிலம் அளிக்கப்பட்டது.
2005-ம் ஆண்டு, முந்த்ரா கிராமத்தில் கால்நடை மேய்ச்சலுக்காகக் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த 1,200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலம் குஜராத் அரசால் கையகப்படுத்தப்பட்டு, அதானி குழுமத்திற்குச் `சிறப்புப் பொருளாதார மண்டலமாக’ அளிக்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலமாக அளிக்கப்படும் நிலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு, மானிய விலையில் மின்சாரம் முதலான சலுகைகள் உண்டு.
இது மற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை விட மிகவும் மலிவானது. டாடா மோட்டார்ஸ் அதன் நானோ கார் ஆலைக்கு 1,110 ஏக்கர் சனந்தில் (அகமதாபாத் அருகே) ஒரு சதுர மீட்டருக்கு 900 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.
ஃபோர்டு இந்தியா ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 1,100 செலுத்தியது, இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, ஹன்சல்பூரில் உள்ள 700 ஏக்கரை ஒரு சதுர மீட்டருக்கு 670 ரூபாய்க்கு வாங்கியது.
ரஹேஜா கார்ப் ஒரு சதுர மீட்டர் நிலம் ரூ 470 க்கு விற்கப்பட்டது, அதே நேரத்தில் டி.சி.எஸ். ஒரு சதுர மீட்டருக்கு 1,100 ரூபாய் மற்றும் டோரண்ட் பவர் ஒரு சதுர மீட்டருக்கு 6,000 ரூபாய்க்கு செலுத்த வேண்டியிருந்தது. அதை போல் எந்த பிரச்சனையும் இல்லாத நிலமும் வழங்கப்பட்டது.
2012-ல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, முந்த்ரா திட்டத்தின் போது சுற்றுச்சூழல் மீறல்களுக்காக அதானி குழுமத்தின் மீது UPA அரசாங்கம் 200 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை பின்னாளில் மோடி அரசாங்கம் இந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்தது.
ஒரு சதுர மீட்டர் நிலத்தை 1 ரூபாய்க்குப் பெற்ற அதானி, அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அதே நிலத்தை, ஒரு சதுர மீட்டர் 600 ரூபாய் என்ற மதிப்பில் வாடகைக்கு அளித்தார். துறைமுகம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று, அதானியின் சொத்து மதிப்பு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.
2012 காலகட்டத்தில் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிஏஜி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது, குஜராத் அரசு பெட்ரோலிய நிறுவனத்திடமிருந்து இயற்கை எரிவாயுவை வெளி சந்தையில் வாங்கி, வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு அதானி நிறுவனத்திற்கு விற்றது. இதன் மூலம் அந்நிறுவனம் 70.5 கோடி ரூபாய் லாபமடைந்தது. 2009-12 இடையே ஒப்பந்தபடி குஜராத் அரசு மின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை அதானி மின் நிறுவனம் வழங்காததால் 240 கோடி தண்டம் வசூல் செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 79.8 கோடி மட்டுமே மோடி அரசு வசூல் செய்தது.
2009 – 10-ம் ஆண்டில் மட்டும் அதானி தனித் தனி தொழிலுக்கு மொத்தம் 11 கம்பெனிகளைத் தொடங்கினார்.
குஜராத்தில் 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தியை அதானி தொடங்கினார்.
“குஜராத்தில் மோடி ஆண்ட 2002-2014 காலகட்டத்தில் மட்டும் ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ. 40,000 கோடியாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்தது.
அதானியின் தொழில் குஜராத்திற்கு வெளியே, பல மாநிலங்களில் கால் பதிக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் பிரசாரங்களுக்கு, அதானி குழும விமானங்களில் பயணித்து வாக்கு சேகரித்தார்.
2014-ம் ஆண்டு, மே 16 அன்று, பி.ஜே.பியின் வெற்றி அறிவிக்கப்பட்டு, மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில், அதானி குழுமம் ஒடிசாவின் தம்ரா துறைமுகத்தை 6,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதாகப் பெருமையாக அறிவித்தது.
மோடியும் பிரதமர் வேட்பாளரில் இருந்து பிரதமராக பதவி ஏற்றார். அதானியும் உள்ளூர் முதலாளியிலிருந்து உலக கார்ப்பரேட்டாக உருவெடுத்தார்.
(தொடரும்)