கோடியில் மிதக்கும் அதானி
கடனில் மூழ்கும் இந்தியா
அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 3ஆவது பெரிய பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளதாக அறிவிப்பு வந்த தருணத்தில் , 2023 மார்ச்சில் நாட்டின் மொத்த கடன் ரூ.152.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் அறிவிக்கின்றது. இதுதான் இந்தியாவின் நிலை.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மோடி அரசு புதிதாக 50 லட்சம் கோடி ரூபாய் வெளியில் கடனாக வாங்கியுள்ளது. இந்த ஆண்டில் இந்திய அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.16.6 லட்சம் கோடியாக இருக்கும். அதாவது இந்த நிதியாண்டில் ரூ.16.6 லட்சம் கோடியை ஒன்றிய அரசு கடனாக வாங்க போகிறது.
2021-2022 நிதியாண்டில் ரூ.15.9 லட்சம் கோடியையும் 2020-2021ம் நிதியாண்டில் ரூ.18.2 லட்சம் கோடியையும் மோடி அரசு கடனாக வாங்கி உள்ளது.
நேரு காலம் தொடங்கி மன்மோகன் சிங் ஆட்சி காலத்தின் முடிவில் அதாவது 2014ம் ஆண்டு மார்ச்சில் நாட்டின் கடன் சுமை ரூ.53.11 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே மோடி ஆட்சிக்கு வந்த பின் கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட கடன் 3 மடங்கு அதிகரித்து ரூ.152.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 59 விழுக்காடு ஆகும்.
ஒன்றிய அரசு கடனுடன் மாநில அரசுகளின் கடன் தொகையையும் சேர்த்தால் நாட்டின் ஒட்டுமொத்த கடன் பொருளாதார ரீதியில் திவாலான பல நாடுகளுக்கு இணையான கடன் தொகையாகும். இந்திய அரசு தமது வரி வருவாயில் கிட்டத்தட்ட சரி பாதியை அதாவது 9.41 லட்சம் கோடியை கடனுக்கான வட்டியாகவே செலவிடும் நிலை இன்று உள்ளது.
ஒவ்வொரு குடிமகன் மீதான கடன் சுமை 43 ஆயிரத்து 124 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் இது ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 373 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மோடி அரசு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதானிக்கு கடன் மேல் கடன் வழங்க வைக்கிறது.
இதன் பின்னணியில் தான் 2019இல் ஆஸ்திரேலியாவின் க்ரேட் பேரியர் ரீஃப் பகுதியில் கெளதம் அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு இந்திய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தது
2022 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான தரவுகளின் படி அதானி குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்தக் கடன் மதிப்பு ரூ.2.2 லட்சம் கோடி ஆகும்.
நிக்கி நிறுவனத்தின் கணக்கீட்டின்படி,
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களுக்கு 3.39 லட்சம் கோடி ரூபாய் கடன் தற்போது இருக்கிறது. டாலர் மதிப்பில் 41.4 பில்லியன் டாலர் கடன் இருக்கிறது
கடந்த ஆண்டு அதானி வாங்கிய ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் புது தில்லி டெலிவிஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் இதில் அடங்கும்.
இதில் வங்கிகளிடமிருந்து ரூ.80,000 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இதில் எஸ்பிஐ 21,375 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. மேலும் இண்டஸ்இண்ட் வங்கி ரூ.14,500 கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடியும் கடன் வழங்கியுள்ளது, இவையெல்லாமல் ஐடிஎப்சி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் கோடிக்கணக்கான பணத்தை அதானிக்குக் கடனாக வழங்கியுள்ளது.
இது மட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை அதானி பங்குகளில் முதலீடு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.
எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளில் 36,474.78 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும்,
எஸ்பிஐ மற்றும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களான நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா, நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பரேஷன் உள்ளிட்டவைகளும் முதலீடு செய்துள்ளன.
கொரோனா காலத்தில் 2019-ம் ஆண்டில் மட்டும் 32,563 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டில் 37,666 தினக்கூலிகளும், 2021-ம் ஆண்டில் 42,004 தினக்கூலி தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டுவரை மொத்தம் 4.56 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 1.12 லட்சம் பேர் தினக்கூலி தொழிலாளிகள். 66,912 இல்லத்தரசிகள், 35,950 மாணவர்கள், 31,839 விவசாய கூலிகள் பொருளாதார நெருக்கடியில் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அந்த கொரோனா காலகட்டத்தில்
” 2019ஆம் ஆண்டில் விமான நிலைய நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிக்குள் வந்த அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு, அடுத்த இரு ஆண்டுகளில் மும்பை உட்பட நாட்டின் 7 (மும்பை, அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு) முக்கிய விமானநிலையங்களின் நிர்வாக, பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் வழங்கப்பட்டன.
இதுபோக, இந்தியாவின் முக்கியமான 15 துறைமுகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்தது அதானி குழுமம். இதுதவிர மின் விநியோகம், மின் உற்பத்தி, கட்டுமானம், காஸ் உற்பத்தி, பெட்ரோலியம் எனப் பல நிறுவனங்களிலும் அதானி குழுமத்தின் முதலீடு இந்த அசுர வளர்ச்சி கண்டது.
குறிப்பாக, 2021ம் ஆண்டிலிருந்து அதானிக்கு வாரத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளார். அதாவது நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி லாபம் வந்துள்ளது.
2020ம் ஆண்டிலிருந்து அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீ்ன் பங்குகள் 1000 விழுக்காடு உயர்ந்துள்ளன. அதானி என்டர்பிரைசஸ் நிறுனப் பங்கு மதிப்பு 2020ம் ஆண்டிலிருந்து 1400 மடங்கும், அதானி டிரான்மிஷன் 1000 விழுக்காடும் வளர்ந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு மதிப்பு 120 மடங்கு உயர்ந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் அதானி குழுமத்தின் கடன் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் கோடி கடன் பெற்று அடுத்தடுத்த நிறுவனங்களை துவக்கியும், பிற நிறுவனங்களை வாங்கியும் தனது குழுமத்தின் சாம்ராஜ்யத்தை விரிவாக்கி 10 லட்சம் கோடியில் அதானி மிதக்கிறார். 150 லட்சம் கோடி கடனில் இந்தியா மூழ்கிக் கொண்டிருக்கிறது.
(தொடரும்)