பன்றி கறி சாப்பிடுபவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்று எனக்கு சிறிய வயதிலேயே கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் சாப்பிடுவது வெள்ளை பன்றி. நம் ஊரில் சாப்பிடும் பன்றி மலத்தை திங்கும் பன்றி அதனால் அது தரம் தாழ்ந்தது என்று சொன்னார்கள். பல வருடங்களுக்கு முன்னர் சத்திரம் பேருந்து நிலையத்தின் முன்னால் வரிசையாக பன்றி கறி கடைகள் இருக்கும். அவற்றை தாண்டி தான் காலை மாலை பள்ளிக்கு செல்ல வேண்டும். அந்த கடைகள் எல்லாம் பின்னர் அப்புறப்படுத்த பட்டது. அவர்களுக்கு வேறு எங்கு கடைகள் வைக்க அனுமதி கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளவில்லை. அந்த கடைகளை கடக்கும் பொழுது பெரிதாக அசூசையெல்லாம் இருந்ததில்லை. அப்பாவின் பதின்ம வயதில் அவருக்கு முகத்தில் வடுக்கள் இருக்க , பன்றி கொழுப்பு தடவி தான் சரியானது என்று சொல்லி இருக்கிறார். இப்போது நினைத்து பார்த்தல் அவருக்கு வீட்டில் எப்படி அனுமதி கிடைத்தது, ஒருவேளை யாருக்கும் தெரியாமல் போட்டிருப்பாரா என்றெல்லாம் சிந்திப்பதுண்டு.
சிறிய வயதில் இருந்தே மனிதர்கள் பன்றி கறி உண்பார்கள் என்பது தெரிந்ததால் அது பெரிய விஷயமாக தோன்றியதில்லை. ஆனால் மனிதர்கள் மாட்டு கறி சாப்பிடுவார்கள் என்று தெரிந்த போது ஆச்சரியமாகவே இருந்தது. வெளிநாடுகளில் மாட்டுக்கறி தான் பிரதான உணவு என்பது புதிய செய்தியாகவே இருந்தது. திருமணம் ஆனா புதிதில் அதிகம் சாப்பிடும் கறி கோழி மட்டுமே. ஆடும் மீனும் இறாலும் விருப்ப உணவு கிடையாது. ஒருமுறை இணையர் ஆட்டு கறி என்று சொல்லி மாட்டு கறியை கொடுக்க, அதை சுவைத்த போதே அது ஆட்டுக்கறி இல்லை என்று தெரிந்தது. பின்னர் அது மாட்டுக்கறி என்ற சொன்ன போது , ஏதோ பெரிய பாவம் செய்து விட்டது போல இருந்தது. ஒரு வருடம் கழித்து ஒருமுறை இணையர் steak (வறுத்த மாட்டு கறி , வெள்ளையர்கள் உணவு ) சாப்பிட எனக்கு அந்த வாசனையில் சாப்பிட வேண்டும் போல இருந்தது. ஒரு வாய் சாப்பிட்ட பிறகு மீண்டும் பிடிக்காமல் போக, பிறகு அதை முயற்சி செய்யவில்லை.
இணையர் எப்போதும் மாட்டுக்கறி சாப்பிடுபவராக இருந்த போதிலும் ஒருமுறை கூட வீட்டில் சமைத்ததில்லை. கவின் பிறந்த சமயம் முதன்முதலாக மாட்டுக்கறி சூப் வைத்து அது சரியாக வராததால் அப்படியே விட்டுவிட்டோம்.கவின், செழியன் கொஞ்சம் வளர்ந்த பிறகு மாட்டுக்கறி பர்கர் வாங்குவது சகஜமானது. ஒருமுறை அவர்களுக்கு வாங்கிய பீப் பர்கர் ஒன்று மிச்சமாக, முதன்முறையாக சாப்பிட்டேன். மற்ற மாட்டுக்கறியை போலல்லாமல் , பர்கரில் இருந்த கறி மெல்ல கடினமாக இல்லாததினால் அது பிடித்து போனது. ஆனாலும் மத நம்பிக்கை , அதை மீண்டும் சுவைக்க அனுமதிக்கவில்லை.
சில வருடங்கள் கழித்து 2016ல் ஒரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. பீப் பர்கர் வாங்கிய ஒரு இஸ்லாமியர் சிறையில் இருக்க, திருடனுக்கும் , பாலியல் குற்றம் புரிந்தவனுக்கும் பிணை கிடைக்கிறது. அந்த படம் நிறைய ஆச்சர்யத்தையும் கொஞ்சம் குழப்பத்தையும் கொடுத்தது. அதுவரை இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் என்பது எனக்கு தெரியாது. அது மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது. பீப் சாப்பிட்டால் எதற்கு சிறை செல்ல வேண்டும் என்பது மட்டும் புரியவேயில்லை. அதன் பின்னர் பிஜேபி நடத்திய/நடத்தி கொண்டிருக்கும் மாட்டுக்கறி கொலைகள் அதை உணர்த்தியது. அதுவரை இருந்த மத நம்பிக்கையை அம்பேத்கர் தகர்த்தெறிய, கடவுள் நம்பிக்கையை பெரியார் உடைத்தெறிந்தார்.
எல்லா கறியை போலவும் மாட்டுக்கறி எனக்கு சகஜமாகி போனது. மிக சரியாக அந்த சமயத்தில் எனக்கு ரத்த சோகை ஏற்பட , மருத்துவர் red meatஐ அதிகம் உணவில் சேர்த்து கொள்ள சொன்னார். மாட்டுக்கறி மிகப்பெரிய அளவில் உதவியது. நானும் குழந்தைகளும் மாட்டுக்கறி உண்ண ஆரம்பிக்க , இணையருக்கோ மாட்டுக்கறி வேண்டாத உணவாகி போனது. வீட்டில் பெரியவர்கள் மாட்டுக்கறி சாப்பிட வேண்டாம் , வீட்டிற்கு ஆகாது என்று சொல்ல, அவர் மட்டும் சாப்பிடுவதை நிறுத்தி கொண்டார். முதலில் சில நாட்கள் எங்களையும் அனுமதிக்கவில்லை. பின்னர் நாங்கள் மட்டும் சாப்பிட கடந்த இரண்டு வருடங்களாக அவர் சாப்பிடவேயில்லை.
இவ்வளவு ஆண்டுகள் மாட்டுக்கறி சாப்பிட்டு இருந்தாலும் , அந்த சூப்பை தவிர வீட்டில் மாட்டுக்கறி சமைத்ததில்லை. இந்திய பாரம்பரிய முறையிலும் ஒருமுறை கூட சாப்பிட்டதில்லை.இப்போது சென்னையில் நடந்த உணவு திருவிழாவில் மாட்டுக்கறி சர்ச்சை எழ , ஒருமுறை கூட தமிழ்நாட்டு முறையில் மாட்டுக்கறி சாப்பிடவில்லையே என்று தோன்றியது. இந்த வாரம் வீட்டில் சமைக்க மாட்டுக்கறி வாங்க ‘கொஞ்சம் சேர்த்தே வாங்கு நானும் சாப்பிடுறேன்’ என்று இணையர் கூறினார். முதன்முதலாக பீபி பிரியாணி வீட்டில் சமைத்தோம்(ர்). பிரியாணி என்றாலே முகம் சுழிக்கும் கவின், இன்றைக்கு பள்ளிக்கும் அதையே எடுத்து சென்றிருக்கிறான்.
மாட்டுக்கறி தான் வீட்டில் கொஞ்சம் அரசியல் நடந்ததே தவிர,பன்றிக்கறி மட்டும் திருமணத்திற்கு பின்னர் எப்போதும் சாப்பிடும் உணவாகவே உள்ளது. உணவை வைத்து மனிதர்களை தரம் பிரித்ததை எண்ணுகையில், மற்ற எந்த மாமிசத்தை விடவும், கொஞ்சம் அருவறுப்பாகவே இருக்கிறது.
பசி எடுத்தால் மனிதன் மனிதனையே சாப்பிடுவான் என்பதே நிதர்சனம்.