“பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே ஜாதிய மத பாலின வர்க்க மோதல்களைத் தடுக்க, என்னுடைய பரிந்துரைகள்:
- அனைத்து பள்ளிக்கூடங்களிலும், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் நியமனங்களில் 69% இட ஒதுக்கீடு, முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
- எல்லா பள்ளிகளிலும் SC/ST, மதச் சிறுபான்மை, மொழிச் சிறுபான்மை பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- பள்ளிக்கூட பணியாளர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை, பக்கச்சார்பற்ற முறையில் மாணவர்களை நடத்துவதன் அவசியத்தைக் குறித்து, கருத்தரங்கங்களை அனைத்து பள்ளிகளிலும் நடத்துவதை கட்டாயமாக்க வேண்டும்
- பள்ளி வளாகத்துக்குள் எந்த ஜாதி மத நிறுவனங்களின் (இயக்கங்களின்) நிகழ்வுகளும் நடக்க அனுமதி வழங்கக் கூடாது.
- மாணவர்கள் ஜாதி, மதங்களை குறிக்கும் குறியீடுகளை அணிந்து கொள்வதை தடை செய்ய வேண்டும்.
- பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரைக் கொண்ட மாணவர்களை, தங்கள் பிறப்பு சான்றிதழிலேயே பெயரை மாற்றிக் கொள்ள ஆசிரியர்கள் அறிவுறுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். மாற்றினால் மட்டுமே, அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்ல முடியும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
- ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும், சமூக நீதி, சமத்துவம் குறித்து பாடம் நடத்தி, தேர்வு வைத்து, அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்
- ஒவ்வொரு நாளும், காலையில் பள்ளிக்கு மாணவர்கள் வந்த உடன், பள்ளி மைதானத்தில் வரிசையாக நின்று, “ஜாதி மத பாலின வர்க்க வேறுபாடுகளை கடைபிடிக்க மாட்டேன்; எவ்வித வெறுப்பு பிரச்சாரத்துக்கும் இரையாக மாட்டேன் ” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, வகுப்புகளுக்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
- போலிச்செய்திகள் பரவி, மாணவர்களின் மனங்கள் பாழ்படுவதை தடுக்க, fact checking பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
- ஜாதி மோதல்களுக்கு வித்திட்ட தலைவர்களைப் பற்றிய பாடங்களை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும்.
- மாணவர்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதிலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும்
- மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் சக மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கே ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பணியிடத்தை பிரத்யேகமாக உருவாக்க வேண்டும்
- ஆசிரியர்- மாணவர் உறவில் ஜனநாயகம் இருந்தால் தான், மாணவர் – மாணவர் உறவும் ஜனநாயகபூர்வமாக இருக்கும். “ஆண்டான் – அடிமை” அணுகுமுறை ஆசிரியர் – மாணவர் இடையே இருக்கக்கூடாது. Students Imitate teachers
- காலிப் பணியிடங்களை தாமதிக்காமல் உடனுக்குடன் நிரப்பி, ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைத்தால் தான், மாணவர்கள் மீது ஆசிரியர்களால் போதிய கவனம் செலுத்த முடியும்
- செய்த தவற்றுக்கு, பாதிக்கப்பட்டவரிடம் பாதிப்பை ஏற்படுத்தியவர் மன்னிப்பு கேட்கும் (எழுதும்) பழக்கத்தை சின்னஞ்சிறுவயதில் இருந்தே ஊட்ட வேண்டும். தான் செய்த தவற்றுக்கு தானே பொறுப்பேற்கும் accountability தான் திருந்துவதற்கான முதல் படி.
- வயது ஏற ஏற வெறும் மன்னிப்பு மட்டும் போதாது. தண்டனைகள் தந்து திருத்த வேண்டியது அவசியம்
- பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான moral supportஐ வழங்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழு இயங்க வேண்டும். அந்த குழு தன் பணியைச் செய்யத் தவறினால், மாணவர்கள் தொடர்பு கொள்ள ஒரு பொதுவான helpline number அவசியம் தேவை”
- ம. கி. எட்வின் பிரபாகரன்