சமுகத்தின் அனைத்து தரப்பினருக்குமான ஜனநாயக உரிமைகளை ஒரு ஜனநாயக அரசால் வழங்க முடியவில்லை என்றால் அங்கே சர்வாதிகாரம் மறைமுகமாக ஆட்சி செய்கின்றது என பொருள். ஜனநாயக உரிமைகளை கண்டு அஞ்சுவது யார்?
2006-ல் லிங்டோ கமிட்டியின் பரிந்துரையின்படி, உச்சநீதிமன்றம், இந்தியா முழுமைக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என அனைத்துவிதமான கல்வி வளாகங்களிலும் மாணவர் சங்க தேர்தல்கள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும், பல மாநில அரசுகளும், வேந்தர்களும், துணை வேந்தர்களும் அதை உதாசீனப்படுத்தவே செய்கின்றனர். தனியார் கல்லூரிகள் கூட நியமன வழியில் மாணவர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்து அடையாளமாகவேனும் செயல்படுத்துகின்றனர். ஆனால் இந்த நாட்டின் எதிர்காலமாக மாறக்கூடிய பெருவாரியான மாணவர்கள் பயிலும் அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றில் அரசே மாணவர் சங்க தேர்தல்கள் நடத்தப்படாமல் பார்த்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், மாணவர்களின் எழுச்சியையும் வரலாறு அறியும். இந்தி திணிப்பிற்கு எதிராக 1937 முதற்கொண்டு நடந்தேறிய போராட்டங்களில் மாணவர்களே மாபெரும் ஆற்றல்களாக விளங்கி உயிர்களை ஈகம் செய்து தமிழ்நாட்டிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை விரட்டி அடித்தனர். இந்த உணர்வு அடுத்து வந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது. அதன் பின்னர் 1967 முதற்கொண்டு எழுந்த நக்சல்பாரி எழுச்சியிலும் மாணவர்கள் வீறு கொண்டு பங்காற்றினர். நமது தேசம் சொல்லொண்ணாத் துயரங்களை எதர்கொள்ளும் போதும், மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாத அளவிற்கு தரம் தாழும் போதும் நடக்கும் அநீதிகளுக்கெதிராக முதலில் கிளர்ந்தெழுவது மாணவர் சமுகமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் புதிய சிந்தனைகள், கல்வியாற்றல், விவேகம், வேகம், திரட்சி, உறுதி ஆகிய பண்புகளும், வாய்ப்புகளும் மாணவர் சமுகத்திற்குதான் இருக்கிறது. உலகளவில் அனைத்து தேச விடுதலை போராட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு தவிர்க்கவியலாத அளவில் இருந்திருக்கிறது.
அத்தகைய மாணவர் சமுகம் மீளெழுந்துவிடக் கூடாது என்பதை இன்றைய அரசியலமைப்பு கண்ணும் கருத்துமாக தடுத்து வருகிறது. எந்த மாணவர் சமுகத்தின் எழுச்சியால் அரசியல் மாற்றம் ஏற்பட்டதோ, அந்த மாணவர் சமுகத்தை அரசியல்படுத்திக்கொள்ள அனுமதித்தால் அது தங்களுக்கான ஆபத்தை தாங்களே உருவாக்குவது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துக் கொண்டு, மாணவர்கள் தங்களை அணிதிரட்டிக்கொள்ளவோ, அரசியல் படுத்திக் கொள்ளவோ, சமுக உணர்வு பெறவோ அனுமதிக்காமல் பல்வேறு வகையில் திசைதிருப்பப்பட்டு சீரழிக்கப் படுகின்றனர்.
மாணவர் சங்கத் தேர்தல்கள் நடந்தால் மோதல் ஏற்படுகின்றன என்ற ஒரே காரணத்தை வைத்து தமிழ்நாடு உயர்நீதிமன்றம், அரசு, காவல்துறை மாணவர் தேர்தல்களை நடத்த மறுப்பு தெரிவிக்கின்றன. சட்டமன்ற, நாடளுமன்ற தேர்தல்கள் நடக்கும்போது மோதல், வன்முறைகள் வெடிப்பதில்லையா? அதற்காக தேர்தல்கள் தடை செய்யப்பட்டுவிட்டனவா? தேர்தலுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை போல மாணவர் சங்க தேர்தலுக்கும் விதிக்கப்பட்டால் தீர்வு கிடைத்துவிடும். புதுதில்லியிலும், பல்வேறு பெரிய மாநிலங்களிலும் உள்ள பிரதான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இன்றும் மாணவர் சங்க தேர்தல்கள் நடக்கின்றன. அங்கே நடக்கும் போது தமிழ்நாட்டில் நடத்த மறுப்பது ஏன்? அதுவும் அமைதிப்பூங்காவான நமது மாநிலத்தில்…?
மாணவர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது கல்வியின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், இந்த வாய்ப்பு மாணவர்களுக்கு சமுகத்தை பற்றி அறிந்துக் கொள்ளவும், எதிர்காலத்தை சந்திப்பதற்குரிய பயிற்சியையும், தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் இன்றிமையாதது என்றும், மாணவர்களுக்கு கல்லூரி பயிலும் காலங்களில் இது போன்ற மதிப்பான வாய்ப்பை மறுப்பது அநீதியாகும் என்று சமீபத்தில் உத்தராஞ்சல் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, சட்டக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரியில் பயின்ற போதே அரசியல் களத்தில் ஆர்வத்துடன் பங்காற்றிய பல மாணவர்கள் பின்னர் தமிழ்நாட்டின் சிறந்த அரசியல் தலைவர்களாக உருவெடுத்தது கண்கூடு. மாணவர் பருவத்தில் தான் கற்றுக் கொள்ளும் அனுபவங்களையும், பண்புகளையும்தான் மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை முழுவதும் பின்பற்றுகிறார்கள். அப்படி ஏட்டு கல்வியை மட்டுமல்லாமல் சமுக கல்வி, அரசியல் கல்வி, அமைப்பு அனுபவங்களை பெற வேண்டிய மாணவர்களை அடிமைகளாக நடத்தி, அடிமைகளாக உருவாக்கவே இன்றைய கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களும் முயற்சி செய்கின்றனர். மாணவர் பருவத்தில் தலை குனிபவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் தலைகுனிந்து வாழ தலைப்பட்டு விடுகிறார்கள்.
தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இன்று லட்சங்கள் லஞ்சம் பெற்றும், அரசியல் காரணங்களுக்காகவும் நிரப்பப்படுகின்றன. துணை வேந்தர் பதவி முதல் உதவிப்பேராசிரியர் தொடர்ந்து அலுவலக பணியாளர் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலைக்கு அமர்த்தப்படுவதால், லஞ்சம் கொடுத்து வேலைக்கு வரும் இவர்கள் கல்வி வளாகங்களை கொடுமையான வியாபார சந்தைகளாக மாற்றி வருகிறார்கள். முதலீடு செய்த பணத்தையும், அதற்கான வட்டியையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்களே தவிர மாணவர்களை பற்றியோ, கல்வியின் தரத்தை பற்றியோ, பல்கலைக்கழகம், கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை பற்றியோ அவர்களுக்கு கிஞ்சித்தும் கவலையில்லை. இதைப் பற்றியெல்லாம் மாணவர்கள் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, கேட்டால் அவர்கள் தவறானவர்கள் என்று பழிசுமத்தி, பொய்ப் புகார்களை உருவாக்கி தண்டிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இப்படி மாணவப் பருவத்திலேயே கேள்வி கேட்காதே, கேள்வி கேட்டால் தண்டிக்கப்படுவாய் என்ற பயத்தை உருவாக்கி வாழ்க்கை முழுவதும் அவர்களை அடிமையாக்கி வைக்கும் இந்த புதிய கல்விச் சூழலுக்கு எதிராக மாணவர்கள் செயலற்று இருந்தால் அவர்களது எதிர்கால வாழ்க்கை நாசமாகிவிடும்.
‘தானுண்டு, தன் கல்வியுண்டு’, ‘ படிக்கிற மாணவனுக்கு அரசியல் எதற்கு’ என்றெல்லாம் கேள்வி எழுப்பும் யோக்கியர்களின் உண்மை முகத்தை பார்த்தால் லஞ்சத்தில் திளைத்தும், சாதி- மத வெறியில் ஊறியும், பதவி மோகத்தில் பாதகர்களாக மாறி நின்று, மாணவர்களின் சிந்திக்கும் திறன், தலைமைத்துவ ஆற்றல், அமைப்பாக இணைந்து செயல்படும் தன்மை, அநீதிகளுக்கு எதிராக அச்சமின்றி சமரசமில்லாமல் போராடுவது போன்ற பண்புகளை அழிக்க பல்வேறு வேடங்களை பூண்டு செயல்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று அநேக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. இதன் காரணமாக, துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் வைப்பதே சட்டமாக இருக்கிறது. மாணவர்களின் கோரிக்கையான கல்வியின் தரம், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த கட்டமைப்பு வசதி, விடுதி வசதி, வேலை உத்தரவாதங்கள் போன்றவை நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நிதிகளை பெற்று உரிய வகையில் செலவழிக்காமல் கோடிகளை செலவு செய்து தங்கள் அறைகளை அழகுப் படுத்திக் கொள்வதும், சொகுசு கார்களை வாங்கிக் கொள்வதும், திட்டங்களை ( Projects) சமர்பித்து நிதியை பெற்று, ஒப்பந்தம் கொடுத்து தங்களுக்கான தரகுப்பணத்தை பெற்றுக் கொள்வதும் என அவர்கள் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. தற்போதைய பாஜக அரசு பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் தங்கள் கருத்தியலுக்கு சாதகமாக உள்ளவர்களை துணை வேந்தர்களாகவும், முதல்வர்களாகவும் நியமித்து கல்வி வளாகங்களை முழுமையான ஆர்.எஸ்.எஸ் கூடாரங்களாக மாற்றும் வேலையை திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.
மாணவர்களே, நம்மை நோக்கி பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அவை அரசு, பல்கலைக்கழக நிர்வாகம், அரசியல் கட்சிகள், அதிகார பலமிக்கவர்களால் நன்கு திட்டமிடப்பட்டு செயல்நடத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டுமென்றால் முதலில் நாம் நம்மை அணிதிரட்டிக் கொள்ள வேண்டும். நமது கல்வி உரிமை, வாழ்வுரிமை, சமுக உரிமை, அரசியல் உரிமைகளை பெற்று சிறந்த எதிர்காலத்தை அடைய வேண்டுமென்றால், நாம் ஒருங்கிணைந்து நின்று நமது படை பலத்தை உறுதி செய்து, தலைமைத்துவ பண்பினை நிருபித்து, களமாட வேண்டும். மாணவர் சங்க தேர்தல்கள் மாணவர்களின் உரிமைகளை அடைவதற்கு முக்கியமானதொரு வழிமுறையும், அமைப்பு முறையுமாகும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு கல்வி வளாகத்திலும் தேர்தல் நடத்தி மாணவர்கள், தங்கள் குரல்களை எழுப்புவதற்கான ஜனநாயக அமைப்பை அரசும், பல்கலைக்கழக,கல்லூரி நிர்வாகங்களும் ஏற்றுக் கொள்ளும் வரை உறுதியுடன் போராட வேண்டும்.