பெரியாரின் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக முழு முனைப்போடு உழைத்துக் கொண்டிருப்பவர். திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர்
வாழ்க்கை -குறிப்பு
1948-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20-ஆம் தேதி சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் கொளத்தூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த உக்கம்பருத்திக்காடு என்ற கிராமத்தில்
கொளத்தூர் மணி பிறந்தார்.
இவரின் தந்தையார் செங்கோடன், தாயார் பாவாயம்மாள். செங்கோடன் அவர்கள் விவசாயியாகவும், 1950ஆம் ஆண்டு முதல் வனத்துறை ஒப்பந்ததாரராகவும், நெடுஞ்சாலைத் துறை, கலால் துறை ஆகியவற்றின் ஒப்பந்ததாரராகவும் இருந்தவர்
கல்வி – மற்றும் -பொதுவாழ்வில் நுழைவு
இவர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார். சேலம் அரசினர் கலைக் கல்லூரியில் புதுமுக வகுப்பைத் தொடர்ந்தார். 17 வயதிலேயே பொது வாழ்வில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார். 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். இதனால் புதுமுக வகுப்பில் தேர்ச்சி பெற முடியாமல் 1966ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய இளநிலை எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த கடவுள் படங்களை அகற்றுவதிலும், மூடநம்பிக்கையைப் பரப்பும் ஆயுத பூஜை போன்ற மதப் பண்டிகைகள் கொண்டாடுவதைத் தடுப்பதிலும், உடன் பணியாற்றிய ஊழியர்கள் துணையுடன் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.1971ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து விலகினார்.
வாழ்க்கை – இணையேற்பு
இவர் 10.06.1970இல் கமலம் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள்; நாத்திகராணி, அறிவுச்செல்வி . ஜாதியை ஒழிக்க ஜாதி மறுப்புத் திருமணங்களும் ஒரு வழி என்று சொல்லோடு நில்லாமல் தனது இரண்டு மகள்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து செயலாலும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தன் சொந்த செலவில் 100 இளைஞர்களுக்கு 5 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்தி, அதன் நிறைவு நாளன்று நடந்த பொதுக்கூட்டத்தில் தன் மூத்த மகள் நாத்திகராணியின் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தினார். இரண்டாவது மகள் அறிவுச்செல்விக்கு எளிய முறையில் பதிவுத் திருமணம் செய்து பல்வேறு செய்தித்தாள்களில் விளம்பரமாக அறிவித்தார்.
பொது – வாழ்க்கை
திராவிடர் -கழகம்
உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த புலவர் வேணுகோபால் அவர்களால் பகுத்தறிவு சிந்தனை பெற்றார். அவரது அறிவுரையின்படி,பெரியார் நடத்திய விடுதலை இதழை 1963 முதல் தொடர்ந்து படித்ததன் காரணமாக திராவிடர் கழகத்தில் உறுப்பினரானார்.
1970இல் சேலத்தில் பெரியார் சிலை திறப்பு விழா நடந்தது. பெரியாரும் அவ்விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் கொளத்தூர் மணியும் கலந்து கொண்டார். சேலத்தில்1971ஆம் ஆண்டு திராவிடர் கழகம் நடத்திய இராமனை செருப்பால் அடித்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது ஆம்பூர் பெருமாள், பெண்ணாகரம் நஞ்சையா, தக்கலை எஸ்.கே.அகமது போன்ற பெரியார் தொண்டர்களைச் சந்தித்தார்.1971 மே மாதம் பெரியார் பெருந்தொண்டர் மேட்டூர் டி.கே.இராமச்சந்திரன் உதவியுடன் பெரியாரை அழைத்து வந்து கொளத்தூரில் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினார். அப்போது அப்பகுதியில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்த பெரியாருடன் இருந்து பல்வேறு அய்யங்களைக் களைந்து கொண்டார்.1976 முதல் திராவிடர் கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் முனைப்புடன் பங்கேற்று சிறை சென்றுள்ளார். மேலும் வட்டார அளவில் விவசாய சங்கத் துணைத்தலைவராக இருந்து விவசாயிகள் நலனுக்காகப் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றார்.பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1979 ஆகஸ்ட் 16 இல் குமரியில் தொடங்கி செப்டம்பர் 15 இல் தஞ்சையில் முடிந்த வழிநடை பிரச்சாரப் படைக்குத் தளபதியாக இருந்து சிறந்த முறையில் நடத்தினார்.
இவருடைய முயற்சியின் விளைவாக மேட்டூர் பகுதியில் சொந்த கட்டிடங்களில் ஏழு பெரியார் படிப்பகங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. திராவிடர் கழகம் நடத்தும் மாநாடுகளில் வெள்ளை பேண்ட், கருப்புச் சட்டை சீருடையில் வரும் அணிவகுப்பில் சேலம் மாவட்டம் தொடர்ந்து எட்டு முறை முதலிடம் பெற்றதில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.
மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை சேலை உடுத்துவதை சில ஜாதியினர் ஒரு விதியாக நடைமுறைப்படுத்தியதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டார். ஜாதி வெறி தலைவிரித்தாடும் இப்பகுதியில் அதனை எதிர்த்துப் போராடினார். தனது பகுதியில் பல ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.
அக்டோபர் 2000ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார்.
வகித்தப் பொறுப்புகள்
1974 – கொளத்தூர் நகரத் தலைவர்1977 – சேலம் மாவட்டத் துணைச் செயலாளர்1980 – சேலம் மாவட்டச் செயலாளர்1984 – மண்டல அமைப்புச் செயலாளர்1998 – தமிழக அமைப்புச் செயலாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம்
அரசியல் வேறுபாட்டால் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனித்தனியே இயங்கி வந்த ஆனூர் ஜெகதீசன், விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான பெரியார் திராவிடர் கழகமும் திருவாரூர் தங்கராசு, கோவை இராமகிருட்டினன் ஆகியோர் தலைமையிலான தமிழ்நாடு திராவிடர் கழகமும் இவர் தலைமையில் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி வந்தவர்களும் இணைந்து, ஜூலை 13, 2001லிருந்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் செயல்படத் தொடங்கினர். அப்போது அந்த ஒருங்கிணைந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 11, 2001 அன்று இணைப்பு மாநாடு சென்னையில் நடந்தது. பின்னர் அக்கழகம் பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
திராவிடர் விடுதலைக் கழகம்
சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக, பிரிந்து செல்லும் எவர் ஒருவரும் பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையோடு, பெரியார் திராவிடர் கழகம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் 12.08.2012 முதல் திராவிடர் விடுதலைக் கழகம் என்ற புதிய பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பிற்கு தலைவராக செயல்படத் தொடங்கினார்.
அமைப்பின் நோக்கமும் செயல்பாடுகளும்
இவ்வமைப்பின் நோக்கம், பெரியாரியலின் முக்கியக் கூறுகளான ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பகுத்தறிவு, பொதுவுடமை, தனித் தமிழ்நாடு ஆகியவற்றை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து பெரியார் கனவு கண்ட ஒரு பொது உரிமை கொண்ட பொதுவுடமை தனித்தமிழ்நாட்டைக் காண வேண்டும் என்பதாகும்.
இவ்வமைப்பின் கொள்கை முழக்கம் பார்ப்பன, இந்திய தேசிய, பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளையை முறியடிப்போம் என்பதாகும்.
பெரியாரின் கொள்கையில் உறுதியாக நின்று, எந்தவொரு அரசியல் சார்புமில்லாமல் இன்று வரை இவ்வமைப்பில் செயல்பட்டு வருகிறார்.
பெரியாரின் 40வது நினைவு நாளையொட்டி இவ்வமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட மனுசாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாடும், மனுசாஸ்திர எரிப்புப் போராட்டமும், ஜாதி ஒழிப்பு பரப்புரைப் பயணங்களும் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
தமிழீழ -ஆதரவு
1982ஆம் ஆண்டு ஈழ விடுதலைப் போராளிகளின் அறிமுகம் கிடைக்கப் பெற்றார்.1983 இறுதியில் மதுரையில் நடைபெற்ற ஈழ விடுதலை ஆதரவு மாநாட்டில் பெருமுனைப்புடன் பங்காற்றினார்.
பயிற்சி முகாம் – இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு இராணுவ பயிற்சி அளிக்க அவர்களை இந்தியாவிற்கு வரவழைத்த போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்த மூன்று பயிற்சி முகாம்களில் முதல் பயிற்சி முகாம் 1984 ஜனவரி 5ஆம் நாள் முதல் 1986 நவம்பர் 5 வரை(ஏறத்தாழ 3 ஆண்டுகள்) இவரது சொந்த நிலத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு முகாமிலும் பயிற்சி பெற்ற புலிகளை மதிப்பீடு செய்ய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் 1 வாரம் முதல் அதிகபட்சம் 23 நாட்கள் வரை அங்கு தங்கியிருந்த போது இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு மலர்ந்தது.
தமிழீழத்திற்கு பயணம் – 1989ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் நவம்பர் 27 மாவீரர் நாளாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நவம்பர் 27,1989 அன்று நடக்கவிருந்த முதலாவது மாவீரர் நாளுக்கு மேதகு பிரபாகரனால் அழைக்கப்பட்டிருந்தார். அந்நிகழ்விற்குச் செல்வதற்காக நவம்பர் 21 அன்று இவர் மேற்கொண்ட கடல் பயணம் தடைபட்டதால் திரும்பி வந்து, மீண்டும்1989 டிசம்பர் 9-ஆம் நாளன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் இருந்த வன்னிக்காட்டிலிருந்த பயிற்சி முகாமில் 10 நாட்கள் அவரோடிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிகள் முகாம்கள் உட்பட பல்வேறு இராணுவ முகாம்களைப் பார்வையிட்டார். ஈழத் தமிழர்களின் துயரங்களை நேரில் பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னால் மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வதந்தி நிலவி வந்தது. இவர் பிரபாகரனைச் சந்தித்து வந்ததை புகைப்படத்துடன் அளித்த பேட்டியின் மூலமாகத்தான் மக்கள் அந்த வதந்தி பொய் என்பதை அறிந்தனர்.
ஈழ விடுதலைக்கு ஆதரவாக நடைபெற்ற பல போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை சென்றவர். தொடர்ந்து ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் பல அடக்குமுறைகளைச் சந்தித்தவர்.
ஈழப் போராளிகளுக்கு ஆதரவாகத் தன் சொந்த பணத்தையே செலவழித்திருக்கிறார்…… ஈழப் போராளிகளின் இலட்சியம் நிறைவேறுவதற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்….. -1994 : தமிழக க்யூ பிரிவு காவல் துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையிலிருந்து…..
அதிரடிப்படையின் அட்டூழியங்களுக்கு எதிராக – மனித – உரிமைப் – பணிகள்
பின்னணி
1993,1994 ஆகிய ஆண்டுகளில் வீரப்பனைப் பிடிப்பதாகக் கூறி, நடந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழக கர்நாடக கூட்டு அதிரடிப்படையினர் மலையடிவாரத்திலும் காட்டுப்பகுதி கிராமங்களிலும் பெரும் ஒடுக்குமுறையை ஏவினார். ஏறக்குறைய 100 அப்பாவி மக்கள் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டவர்கள் சித்திரவதையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். சித்திரவதை செய்வதற்கென அதிரடிப்படையினர் மாதேஸ்வரன் மலையில் ‘Workshop’ எனும் சித்திரவதைக் கூடம் ஒன்றை வைத்திருந்தனர். இதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியைச் சேர்ந்த 124 பேர் தடாவில் கைது செய்யப்பட்டு மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 12 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் எதற்காக சிறையில் இருக்கிறோம் என்பது கூட தெரியாத அப்பாவி மக்கள்.
பணிகள்
1993இல் அதிரடிப்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 11 பேரை விடுவிக்க இவர் முயற்சியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (HABEAS CORPUS) தாக்கல் செய்யப்பட்டது. இதனால் 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.1996இல் மதுரையிலுள்ள மக்கள் கண்காணிப்பகம் சார்பில் மனித உரிமைக் குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடைய பாதிப்புகளை அறிக்கைகளாகத் தொகுத்தன. இதற்கு முழு ஆதரவாக நின்றதோடு, கொளத்தூரில் தன் குடும்பத்தினர் பங்குதாரர்களாக இருந்து நடத்தும் திருமண மண்டபத்தில் தங்க வைத்தும், வாகன வசதிகள் ஏற்படுத்தித் தந்தும் மனித உரிமைக் குழுக்களுக்கு உதவினார். அதிரடிப்படையினரின் இந்த கொடிய அடக்குமுறையைக் கண்டித்து ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். பெங்களூரிலும் போராட்டங்களை நடத்தினார்.1999இல் கொளத்தூரில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கேட்டும், மைசூர் சிறையில் தடாவில் வாடிய மக்களை விடுவிக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக- கர்நாடக மனித உரிமை அமைப்பினர், அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அமைப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் அழைத்து மாநாடு நடத்தினார். மக்கள் கண்காணிப்பகம், தமிழ்நாடு பழங்குடிகள் மக்கள் சங்கம், சோகோ அறக்கட்டளை, சிக்ரம் உள்ளிட்ட உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் ஏற்படுத்திய கூட்டுக்குழுவிற்கு ஆதரவாக இருந்து அப்பாவி மக்களுக்கு அதிரடிப்படையினரால் ஏற்பட்ட பாதிப்புகள் வெளி உலகிற்கு தெரிய காரணமாக இருந்தார். இதன் விளைவாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைத்த நீதிபதி சதாசிவா ஆணையத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தார். இந்த ஆணைய விசாரணைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் வந்து சாட்சியம் அளிக்க உரிய சட்ட முயற்சி செய்தார். சதாசிவா ஆணையத்திற்கு எதிராக அதிரடிப்படை அதிகாரிகள் நீதிமன்றத்தில் பெற்ற தடையை நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்து தடை நீங்க காரணமாக இருந்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க கடந்த 2000-ஆம் ஆண்டு மனித உரிமை அமைப்புகள் நடத்திய பாதிக்கப்பட்ட மக்கள் மாநாட்டிற்கு ஆதரவு அளித்து தானே முன்நின்று அதனை நடத்தினார்.மைசூர் சிறையில் 8 ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இல்லாமல் துன்புற்ற மக்களுக்கு வழக்கு நடத்த உரிய ஏற்பாடுகளைச் செய்ததோடு, இதற்கென மனித உரிமை அமைப்புகள் செய்த முயற்சிகளுக்குத் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்தார். இதனால், மைசூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு முடிந்து 124 பேரில் 109 பேர் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டும், 11 பேருக்கு அளிக்கப்பட்ட தண்டனை சிறையிலிருந்த காலத்தை விட குறைவாக இருந்ததாலும் விடுவிக்கப்பட்டனர். தண்டனை பெற்ற மற்றவர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட மூன்றில் இரண்டு வழக்குகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2000ஆம் ஆண்டு வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பிலும் முக்கிய பங்காற்றினார். நக்கீரன் கோபால் மேற்கொண்ட முயற்சி போதிய பலன் அளிக்காததால், தமிழக-கர்நாடக அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவை கோ.சுகுமாரன், நக்கீரன் கோபால் ஆகியோருடன் இணைந்து ராஜ்குமார் மீட்புப் பணியில் ஈடுபட்டார். வீரப்பன் வைத்த நியாயமான கோரிக்கைகளை இருமாநில அரசுகள் நிறைவேற்ற உரிய முயற்சி செய்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபட்டார். கர்நாடகத்தில் அச்சத்தோடு வாழ்ந்த 40 லட்சம் தமிழர்களின் நலனுக்காகவே ராஜ்குமார் மீட்பில் ஈடுபட்டார். இதனால் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 30 ஆண்டுகள் தான் செயல்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார்.
மரண தண்டனை எதிர்ப்பு
சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் வீரப்பன் வழக்கில் மரண தண்டனை பெற்றிருந்த நான்கு தமிழர்களுக்காகவும் மரண தண்டனைக்கெதிரான போராட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். மரண தண்டனைக்கு எதிரான பல போராட்டங்களை முன்னின்று நடத்தியும், பங்கேற்றும் உள்ளார். மரண தண்டனை எதிர்ப்புக் கூட்டமைப்பில் இவரும் ஓர் ஒருங்கிணைப்பாளர் ஆவார். கர்நாடகத்தில் உள்ள மார்ட்டள்ளியிலும், பெங்களூரிலும் நடந்த மரண தண்டனை எதிர்ப்பு மாநாடுகளில் முக்கிய பங்காற்றினார். சென்னையில் பல்வேறு அமைப்புகள் நடத்திய பல மரண தண்டனை எதிர்ப்புப் பொதுக்கூட்டங்களிலிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். பிப்ரவரி 2012இல் சென்னையில் நடந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பேரணியையும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாட்டையும் ஒருங்கிணைத்தார். நெல்லையில் 1500 பேர் கலந்து கொண்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தினார். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பிற்காக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில் மண்டல வாரியாக அணுஉலை எதிர்ப்புப் பொதுக்கூட்டங்களை நடத்தி அதில் பங்கேற்கவும் செய்தார்.
சிறை
இவர் பல போராட்டங்களில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றுள்ளார். நீண்ட காலம் சிறையிலிருந்தவை மட்டும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை:-
8.2.1991 – 27.4.1991 (விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது)28.5.1994 – 2.1.1995 (விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக அடக்குமுறைச் சட்டமான தடா ச்ட்டத்தின் கீழ் கைது)10.9.1995 – 8.9.1996 (வேலூர் சிறப்பு முகாமிலிருந்து சுரங்கம் வெட்டி போராளிகள் தப்பியதற்கு உதவியாதாக போடப்பட்ட வழக்கில் கைது; ஒராண்டு சிறை). இவர், நீதிமன்றத்தில் தானே வாதாடி குற்றமற்றவர் என நிரூபித்து விடுதலையானார்.8.3.2002 – 15.4.2003 (வீரப்பன் வழக்கில் அடக்குமுறைச் சட்டமான தடா ச்ட்டத்தின் கீழ் கைது. ஓராண்டுக்கு மேலாக சிறை)28.2.2009 – 4.5.2009 (திண்டுக்கலில் புலிகள் ஆதரவு உரைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது)2.11.2013 – 15.2.2014 (இலங்கையில் நடைபெறவிருந்த காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதற்காக சேலத்திலும், சென்னையிலும் நடந்த இரு வேறு வன்முறை நிகழ்வுகளில் இவரையும் இணைத்து வழக்கு புனையப்பட்டது. அதனால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது)
நூல்கள்
பெரியார் கருத்துக்கள் தொகுப்புப் பணி
பெரியார் அவர்களால் மே 2 1925 முதல் நடத்தப்பட்ட குடிஅரசு என்ற வார ஏட்டிலுள்ள பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுகளையும் தொகுத்துள்ளார். அப்போது திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பான பிறகு மேல்முறையீடு செய்தார் வீரமணி. அவ்வழக்கும் இவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகியதால், உச்சநீதி மன்றத்துக்கே சென்றார் வீரமணி. ஆனால், அவ்வழக்கை விசாரணைக்குத் தகுதியற்றது எனக் கூறி தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இவ்வழக்கிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக பெரியாரின் எழுத்துக்களும், பேச்சுகளும் மக்கள் சொத்தாக்கப்பட்டன. எனவே, குடிஅரசு 1925 முதல் குடிஅரசு 1938 வரை தான் தொகுத்த 27 தொகுதிகளையும் வெளியிட்டார். மேலும் பெரியாரால் 1928 முதல் 1930 வரை நடத்தப்பட்ட REVOLT என்னும் ஆங்கில வார ஏட்டில் உள்ள கட்டுரைகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.இவை மொத்தம் 11000 பக்கங்கள்…..
இவர்தான்
தோழர் கொளத்தூர் மணி அவர்கள்.