எழுத்தாளர் தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைத்துள்ளதாக தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளரின் புத்தக வெளியீட்டை நடாத்தியமைக்காக கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி தீவிர விசாரணைக்கு தாம் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இவ்வாறு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கலை இலக்கியவாதிகள் மீது மேற்கொள்ளும் இத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத் தீவில் படைப்புச் சுதந்திரம் எதிர்கொண்டுள்ள அவலநிலையைத்தான் காட்டி நிற்பதாகவும் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தீபச்செல்வன் விளக்கம்…
‘பயங்கரவாதி’ நாவல், விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதா எனக் கேட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்னிடம் விசாரணையை முன்னெடுத்திருந்தது.
கிளிநொச்சி பரந்தனில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவில் இன்று இரண்டு மணி நேர விசாரணை இடம்பெற்றது. பயங்கரவாதி நாவல் தொடர்பில் பல கேள்விகளை இதன்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுப்பியுள்ளது.
நாவலில் இடம்பெறும் மாறன் என்ற கதாபாத்திரம் யார்? இப்போது எங்கே உள்ளார்? என்றும் நாவலில் இடம்பெறும் இராணுவக் கதாபாத்திரங்கள் யாரைக் குறித்துள்ளன என்றும் கேட்டார்கள். அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையானவை என்று நான் பதில் அளித்திருந்தேன்.
இதேவேளை இந்த நாவலில் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் கருத்துக்கள் உள்ளனவா என்றும் விசாரணை செய்யப்பட்டது. அப்படியான கருத்துகள் நாவலில் இல்லை என்றும் கடந்த காலத்தில் நடந்த விடயங்களையே நாவல் பேசுவதாகவும் பதில் அளித்தேன்.
போரில் தாய். தந்தையரை இழந்த ஒரு குழந்தை அதிலிருந்து தப்பி கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்வதையும் அங்கு மாணவத் தலைவராகும் அந்த இளைஞன் பின்னர் போரால் கொல்லப்படுவதையும் எனது நாவல் பேசுவதாக விளக்கமளித்தேன்.
யாழ் பல்கலைக்கழகத்தில் சில மாணவத் தலைவர்களும் மாணவர்களும் கொல்லப்பட்ட நிலையில் அந்தப் பின்னணியை வைத்து மாறன் என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டேன்.
பிழையான இராணுவத்தினர் மத்தியில் உள்ள நல்ல இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப்புலிகளால் காப்பாற்றப்பட்ட இராணுவ சிப்பாய்களையும் பற்றி பயங்கரவாதி நாவல் பேசுகிறது என்றும் இதனை சிங்கள மக்கள் வாசித்தால் தமிழர்களை புரிந்து கொள்ள வழி வகுக்குமே தவிர, இன வேறுபாட்டை ஒருபோதும் ஏற்படுத்தாது என்றும் எடுத்துரைத்தேன்.
எந்த சூழ்நிலையிலும் கல்வியை கைவிடாத மாறன் என்ற கதாபாத்திரம் வழியாக இந்த நாவல் கல்வியை பேசகிறது என்றும் இனிவரும் காலத்தில் போரும் மரணங்களும் அழிவுகளும் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த நாவலை நான் எழுதியுள்ளேன் என்றும் தெளிவுபடுத்தினேன்.
இதுவும் ஒரு வகையில் போராட்டம் என்றே உணர்கிறேன். அன்பும் ஆதரவும் தரும் உறவுகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
-தீபச்செல்வன்