இவர்களது முழக்கங்கள் என்னென்ன?
“யார் வெளியார்? வந்தேறிகள்..!?”
“யார் வெளியேற வேண்டும்? வந்தேறிகள்..!?”
“யார் வந்தேறிகள்? தெலுங்கர்,கன்னடர்,மலையாளி,வடவர்.”
“தமிழ்த்தேசியத்திற்கு எதிரியாக இருப்பது யார்.? இந்தியம் அல்ல, நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா,கர்நாடகா, கேரளா ஆகியவையே.”????
“நீட் தேர்வு, ஜி.எஸ்.டி வரி, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, உயர்நீதிமன்றத்தில் தமிழ், மற்ற அனைத்து மாநில உரிமைகளுக்காக இந்திய (மத்திய) அரசுக்கு எதிராக போராடுவதை கைவிட்டுவிட்டு அண்டை மாநிலங்களை நோக்கி அல்லது மொழிச்சிறுபான்மையின மக்களை நோக்கி போராடுவோம்.”????
மிகச்சரியாக தமிழ்த்தேசியத்தின் இலக்குகளை மடைமாற்றுவதையே முழுமூச்சான பணியாக எடுத்துக்கொண்டு இந்தியத்திற்கு சேவை செய்ய இவர்கள் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்?
இன்னும் விவரமாக இதனுள் செல்வதற்கு முன் வந்தேறிகள், வெளியார் குறித்து ஒரு பார்வை பார்த்துவிடலாம்.
உண்மையில் இவர்களிடம் வெளியார் யார்? என்பது குறித்த ஒரு தெளிவான வரையறை கிடையாது. திரு.மணியரசன் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பின் வந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்கிறார். மற்றவர்கள் தாய்மொழி தமிழாக இல்லாத பட்சத்தில் அனைவரும் வெளியார்தான் , வந்தேறிகள்தான் என்கின்றனர். இங்கே வாழலாம், ஆளக்கூடாது என்று தோன்றுவதை எல்லாம் பேசுகிறார்கள்.
குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா முதலாளிகளைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் மொத்த பொருளாதாரமும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. அதுபோக மூலைமுடுக்கெல்லாம் அடகுக்கடை, மின்னணு பொருட்கள் விற்பனை போன்று இன்னும் பலவற்றுள் ஏகபோகம் செய்கிறார்கள். தமிழகத்தில் வாழ்ந்து வந்தாலும் சொந்த மாநிலங்களோடு தொடர்பு வைத்துக்கொள்கின்றனர். மண உறவுகளையும் தமிழ்நாட்டுடன் பேணுவதில்லை. இங்கே ஈட்டும் லாபத்தையும் சொந்த ஊரிலே முதலீடு செய்பவர்கள் அதிகம். இவர்கள் தமிழர் பண்பாட்டோடும் ஒத்து போவதில்லை. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் க்கு நேரடியான ஆதரவாளர்களாகவும், நன்கொடையாளர்களாகவும் முகவர்களாகவும் உள்ளனர். இவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால் மற்ற தேசிய இனங்கள் என்று குறிப்பிடும் போது அதில் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக தெலுங்கினை தாய்மொழியாக கொண்டிருந்தவர்களையும், கொண்டிருப்பவர்களையும் சுற்றியே பிரதானமான இனத்துவேசம் கட்டமைக்கப் படுகிறது. அதில் ஒருவர் தெலுங்கு மொழியை கைவிட்டுவிட்டு தமிழை ஏற்றுக்கொண்டு விட்டார். வீட்டில் தமிழே தாய்மொழியாக மாறிவிட்டது. ஆனால் அவரை சாதி அடிப்படையில் தமிழராக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள், குறிப்பிட்ட தமிழ் தேசிய அமைப்புகள்.
அதே போல தமிழர்களை தமிழர்தான் ஆள வேண்டும் என்பதும் சிக்கலுக்குரிய விடயமாக இருக்கிறது. இனத்தூய்மை அடிப்படையில் தேசிய இனத்தை வரையறுப்பது முற்றிலும் தவறாகும். அதே வேளையில் தமிழை தாய்மொழியாக கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த தமிழர் முழக்கம் அந்நியமானதாக உள்ளது. தமிழர்கள் ஆள வேண்டும் என்றால் எந்த தமிழர்கள் ஆள்வார்கள்? அதற்கு எந்த தமிழன் மாளவேண்டும் என்று அவர்களுடைய அனுபவத்திலிருந்து கேள்வியை எழுப்புகிறார்கள். இன்றைய நிலையில் தமிழர்கள் என்பவர் யார்? என்பதையே விவாதித்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டி உள்ளது.
தேசியம்,தேசிய இனம் என்பதின் வளர்ச்சி நவீன காலகட்டத்திற்குரியது என்பதால் 3000 வருடம் பழைமையான இனம் என்ற பழங்கதையெல்லாம் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டின் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நவீன தேசியத்தின் வரையறைகளோடு சாதிய வேறுபாடுகளை ஓழித்துக்கட்டும் திட்டத்தோடும், தமிழ் நாட்டில் வாழும் மொழி, மத சிறுபான்மையினர்களை உள்ளீர்த்தும் ஒன்றுபட்ட தேசியத்தை கட்ட வேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம். நவீன தேசிய கட்டமைப்புக்கான வரையறைகளை நாம் உருவாக்கும்போதே வெளியார் யார்? என்ற தெளிவுக்கும் நாம் எளிதில் வந்தடைந்துவிடலாம்.
உலகம் முழுவதும் வரலாறு நெடுக மக்கள் இடப்பெயர்வு பல்வேறு சூழல்களில், பல்வேறு காரணங்களால் நடக்கிறது. 400 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு 243 ஆண்டுகளுக்கு முன்பு காலனியாதிக்கத்திடமிருந்து விடுதலையை பெற்ற அமெரிக்கா இன்று நவீன தேசமாக, வல்லரசாக உருப்பெற்றிருக்கிறது. பல்வேறு இன, மொழி மக்கள் கலந்து ஓரு புதிய மாதிரியை உலகுக்கு வழங்கியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும் நெல்சன் மண்டேலா அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரவில்லை. தங்கள் மீது அடக்குமுறையை செலுத்தியவர்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு தென்னாப்பிரிக்காவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றினார். தென் அமெரிக்கா முழுவதையும் ஆக்கிரமித்து பரவிய ஸ்பானியர்கள் இன்று பாரம்பரிய தென்னமெரிக்க பூர்வீக மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். மங்கோலியர்கள் தாங்கள் படையெடுத்த நாட்டின் மொழி, பண்பாடு, வாழ்வோடு கலந்துவிட்டனர். யூதர்களும் தாங்கள் தஞ்சம் புகுந்த நாட்டின் மொழியோடு கலந்து போயினர்.
சிங்கப்பூர், மலேசியா, ஃபிஜி, மொரிசியஸ், கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தமிழர்கள் ஆட்சிப் பொறுப்புகளுக்கு வரவே செய்கிறார்கள்.
ஆப்பிரிக்க பின்னணியை கொண்ட ஒபாமாவும், ஜெர்மானிய பின்னணியை கொண்ட டிரம்பும் அமெரிக்க அதிபர்களாகிறார்கள், இவர்களின் கணக்குப்படி பார்த்தால் பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா போன்றவர்களும் கியூபாவிற்கும், அர்ஜென்டினாவிற்கும் வந்தேறிகள்தான்.
இது போன்று உலகம் முழுவதும் நடந்தேறிய இடப்பெயர்வில் தமிழர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
படையெடுத்து சென்றதும் உண்டு, வர்த்தகத்திற்காக சென்றதும் உண்டு , பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவன ஆட்சியின் கீழ் கூலிகளாக பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றதும் உண்டு. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இவர்களின் வரையறைப்படி வந்தேறிகள்தான் ..! அப்படித்தானே.
திரு. மணியரசனின் வரம்பை பரிசீலிப்போம். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1956 ஆண்டை எடுத்துக்கொள்கிறோம் என்றால் அதற்கு முன்வந்தவர்களை பற்றிய விவாதமே தேவையில்லை. அதற்கு பின் வந்தவர்களை வெளியேற்ற வேண்டும். என்பது அவருடைய வரையறை .
கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நம்மவர்கள் 15 ஆண்டுகளில் பச்சை அட்டை, குடியுரிமை போன்றவற்றை பெற முடிகிறது. அவர்களும் அந்த நாட்டின் குடிமகன்களாகி விடுகின்றனர். தமிழகம் இறையாண்மை பெற்ற அரசாக தற்போது இல்லை. அந்த நிலையை அடைந்த பிறகுதான் அது குறித்து தெளிவான நிலைபாட்டிற்கு வர முடியும். அதுவும் மோடி இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்ற முயற்சிப்பது போல இங்கே செய்யப்படும் முயற்சி தமிழ்நாட்டின் நலன்களை கடுமையாக பாதிக்கும்.
திரு.மணியரசனை கூட தமிழரில்லை என்று அந்த இனத்தூய்மை கணக்கெடுப்பு சொல்லிவிடலாம்.
இனவெறி தமிழ்த்தேசியவாதிகள் முதலில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்ற வரையறையை முதலில் முன்வைக்கின்றனர். ஆனால் அதிலிருந்து அப்படியே விலகி சென்று இறுதியில் சாதியைத்தான் அடிப்படையாக வைக்கின்றனர்.. அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் வந்திருந்தால் கூட, ஏன் தமிழையே தாய்மொழியாக கொண்டிருந்தால் கூட நீங்கள் தமிழராக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டீர்கள்.
ஜெர்மனி, ஆஸ்திரியாவில் வாழ்ந்த யூதர்கள் ஜெர்மானிய மொழியையே தங்கள் மொழியாக பாவித்து அதற்கு பாரிய பங்களிப்புகளை வழங்கினர். ஜெர்மானிய மொழியே அவர்களது தாய்மொழியாக இருந்தாலும் அவர்கள் தங்களின் யூத மரபை பின்பற்றி வந்ததால் உயர்ந்த தூய ஜெர்மானிய இனத்தில் அவர்களுக்கு இடமில்லை. அந்த காரணத்தை முன்வைத்தே அவர்களை கொன்றொழித்தான் அங்கே இனவெறி பேசிய கொடுங்கோலன்., ஹிட்லர்.
தமிழ்நாட்டில் 600-700 ஆண்டுகளுக்கு முன் வந்து தன் சொந்த மொழியை கைவிட்டு கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் தமிழ்மொழியை மட்டுமே பேசி, புழங்கி வந்திருந்தாலும் நீங்கள் தமிழராக முடியாது, உங்களின் சாதி தமிழ்ச்சாதி என்று அவர்களால் வரையறுக்கப்பட்டு இருக்கும் பட்டியலில் இல்லையென்றால் நீங்கள் தமிழரில்லை. அதாவது தூய இனத்தில் (சாதியில்) பிறந்தவர்கள் மட்டுமே தமிழராக முடியும். முடிவாக நீங்கள் மொழியின் அடிப்படையில் அல்ல, சாதியின் அடிப்படையில் மட்டுமே தமிழராக முடியும்.
தேசத்திற்கான வரையறையும் ,அதன்பால் எழும் தேசியமும் பெரும்பாலும் ஒரு வரலாற்றுரீதியான பரந்த நிலப்பரப்பில் பேசப்படும் தகைமை கொண்ட மொழியின் அடிப்படையில் உருவானாலும் அது பல்வேறு இணை, துணை மொழிகளையும், இனங்களையும் உள்வாங்கிக்கொண்டு கலப்புகளின் பங்களிப்பையும் இணைத்துக்கொண்டுதான் ஆற்றலுடன் வளர்கிறது. பல்வேறு இனங்கள், சிறுபான்மை மொழிகள் விருப்பத்தோடு தமிழ் மொழியை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லும்போது, இல்லை முடியாது சாதியின் அடிப்படையில்தான் தீர்மானிக்க முடியும் என்று சொல்வது தமிழுக்கும், தமிழ்த்தேசியத்திற்கும் இவர்கள் செய்யும் பெருந்துரோகம். ஆனால் இவர்கள் அப்படி சொல்வதற்கு காரணம் தமிழ்நாட்டு மக்கள் மொழி இன,சாதி தூண்டப்பட்டால் மட்டுமே அந்த பிளவினை பயன்படுத்தி அவர்கள் ஆட்சியை கைப்பற்ற முடியும்.
மொழிப்பற்று, மொழியை காக்கிறோம் என்று வேடம் போடும் தேசியவாதிகளுக்கு உண்மையில் மொழியின் மீது உள்ள அக்கறையை விட சாதியின் மீதான அக்கறையே மிகுந்து இருப்பது இதன் மூலம் நன்கு நிருபணமாகிறது.
தேச உரிமைகளுக்கான போராட்டத்தின் வழியில் இயல்பாகவே சிறுபான்மை மொழிகள் பல பெரும்பான்மை மொழியோடு கலந்துவிடும் அல்லது இணைந்து செயல்படும். இங்கே நூற்றாண்டுகளாக வசிப்பவர்களில் பலர் ஆதியில் தாங்கள் பேசிய தாய்மொழியை விடுத்து தங்களது தாய்மொழியாக தமிழை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.மற்றவர்கள் வீட்டினுள்ளும், அவர்கள் சமுகத்திற்கிடையிலும் தங்கள் தாய்மொழியில் பேசினாலும் கல்வி, வர்த்தகம், வாழ்க்கை என்று அனைத்திற்கும் தமிழைத்தான் பிரதானமாக பயன்படுத்துகின்றனர். அப்படியே அவர்கள் தங்கள் மொழியை பேணிக்காக்க விரும்பினாலும் அதற்கு முழு உரிமை அவர்களுக்கிருக்கிறது, அதை அங்கீகரித்து அவர்களுக்கு அதற்குண்டான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க வேண்டியது பெருந்தேசிய இனத்தின் கடமை.
நவீன தேச அரசுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் உள்ள மொழிச்சிறுபான்மையினரை காப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன. அப்படி இல்லாமல் எங்கெல்லாம் சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கிளர்ச்சிகள் துவங்கவே செய்யும்.நாம் இந்தியத்தை எதிர்த்து போராட ஆயத்தமாக வேண்டுமா அல்லது தமிழ்நாட்டு சமுகங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கி பிளந்து கிடக்க வேண்டுமா?
தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே தமிழீழ போராட்டத்தை தங்களின் போராட்டமாக பார்த்தனர். பல்வேறு மொழி, சமூகம் சார்ந்து இருந்தாலும் தலைவர் பிரபாகரனையும், ஈழவிடுதலை போராட்டத்தையும் தங்களின் போராட்டமாக பாவித்து, உயிரையும் பொருட்படுத்தாது துணைநின்றனர். அவர்களின் பங்களிப்பும், தியாகமும் அளப்பரியது. ஈழப்போராட்டம் நிமித்தம் தமிழகத்தினுள் உருவாக்கப்பட்ட, வளர்த்த பல்தேசிய இன ஒற்றுமையை, குறுகிய இன, சாதி வெறி மூலமாக தகர்க்க விரும்புகின்றனர் இன்றைய போலிகள். தலைவர் பிரபாகரன் கூட சிங்கள மக்களை தவறாக பேசியதே கிடையாது. ஆக்கிரமிக்கும் ஆதிக்க சிங்கள அரசுக்கு எதிராகவே தனது போரை நடத்தி வந்தார். அவர் பெயரை உச்சரித்துக்கொண்டே, சாதி வெறியையும், இனவெறியையும் விதைக்கும், வளர்க்கும் இந்த தமிழ்த்தேசியவாதிகளின் உண்மை முகம் மக்கள் மத்தியில் அம்பலப்படவேண்டும்.
இப்போது இவர்களின் இந்திய விசுவாசத்தை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய அரசை எதிர்த்து நின்று நமது கோரிக்கைகளை வெல்வது என்பது கடினமான பணி. அந்த உயர்ந்த அரசியல் பணிக்கு தமிழகம் முழுவதும் இயன்றவரை ஒற்றுமையை கட்டத்தான் நாம் முயற்சிப்போம். அதற்காக உள்ளே நிலவும் முரண்பாடுகளை [சாதி??] கூடுமானவரை பகை முரண்பாடாக மாற்றாமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்வோம்.
இங்கே நாம் தெலுங்கர்கள், கன்னடர்கள் , மலையாளிகளை பகையாக நிறுத்தி நடத்தும் பரப்புரை ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களிலும் எடுத்துச் செல்லப்படத்தானே செய்யும். அதற்கான எதிர்வினையையும் நாம் எதிர்கொள்ளத்தானே வேண்டும். இந்த முரணை நாமே வலிந்து சென்று அதிகப்படுத்துவதை, தேசியத்தை படைக்க விரும்புவர்கள் தவிர்க்கவே செய்வர்.
ஏற்கனவே இந்திய அரசு தென்மாநிலங்களுக்கிடையே பகையை மூட்டுவதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அவர்களது சூழ்ச்சியை முறியடித்து நம்மை போலவே பாதிக்கப்படும் அண்டை மாநிலங்களுடனான முரணை தணித்துக் கொண்டு ஒற்றுமையை கட்ட வழிவகைகளை ஆராய்ந்து வருகிறோம்.
அடுத்தது தமிழகத்தினுள்ளேயே சாதியின், மதத்தின், மொழியின் பெயரால் துண்டாடவும், இந்திய அரசை எதிர்க்க நாம் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.
இப்போது இந்த தமிழ்த்தேசியவாதிகள் இந்த இரண்டு பணியையும் தங்கள் பொறுப்பாக எடுத்துக்கொண்டு இந்தியத்திற்கு, இந்துத்துவத்திற்கு சேவை செய்வது தெளிவாகிறதல்லவா!
“இந்துவாக ஓன்றிணையுங்கள்!” என்பவர்கள் சமூகத்தை பிளந்து பின்னோக்கி இழுக்கும் சாதியக் கட்டமைப்பை அழித்தொழிப்பது பற்றி பேச மாட்டார்கள்
“தமிழர்களாக ஒன்றிணையுங்கள்!” என்பவர்கள் சமூகத்தை பிளந்து பின்னோக்கி இழுக்கும் சாதியக் கட்டமைப்பை அழித்தொழிப்பது பற்றி பேச மாட்டார்கள்
“இசுலாமியரை வெளியேற்றுவோம்! வந்தேறிகளை வெளியேற்றுவோம்!” என்பவர்கள் மக்களை பிளவுப்படுத்தி தூண்டுவதற்கு ஓரு இலக்கு வேண்டும் என்றுதான் செயல்படுகிறார்கள்.
இந்துத்துவவாதிகளும், பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகளும் சிந்தனையளவில் ஒன்றுபட்டு நிற்பதை அவர்களின் முழக்கங்கள் நமக்கு தெளிவாக விளக்குகிறதல்லவா!
ஒரு குறிப்பிட்ட சமுகத்தை இலக்காக்கி, தனிமைப்படுத்தி, அதன்மீது வெறுப்பையும், வன்மத்தையும் விதைப்பது ஒருபோதும் தேசியமாகாது. தேசிய உணர்வுக்கும், இனவெறிக்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறுகியது.
தேசிய உணர்வென்பது ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் எதிராக கிளர்ந்தெழுவது. அதுவே அடக்குமுறை கருவியாக மாறினால் அங்கே வெறிதான் மிஞ்சும். அப்படி ஓரு பாதையில்தான் தமிழக இளைஞர்களை இன்று தமிழ்த்தேசியம் பேசுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் செலுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
650 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி 300 ஆண்டுகட்கு முன்பு வரை இங்கு குடியேற்றங்கள் நிகழ்ந்ததா? ஆம் நிகழ்ந்தது.அவர்கள் படையெடுப்பாளர்களாக வந்தனர். ஆனால் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களாக நீடித்தனர். இங்கேயே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். அவர்கள் தங்கள் மொழியை தங்களுக்குள் பயன்படுத்தி வருகின்றனர். படையெடுப்பாளர்கள் படையெடுக்கப்பட்ட பகுதியின் மொழியின் ஆளூகைக்குள் வந்துவிடுவதுதான் உலகம் முழுவதும் நடந்தேறியதாக வரலாறு. அவர்கள் கடந்த 650 ஆண்டுகளாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில், தமிழக நிலவுடைமையில், சாதி படிநிலையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இன்றளவும் அது தொடர்ந்து வருகிறது.ஆனால் இந்த ஆண்டைகளிடத்தும், அதிகார வர்க்கத்தினிடத்தும் விலகிப் போய்விட்ட அவர்கள் மொழி பேசும் பரந்துப்பட்ட மக்களையும் ஒரே பார்வையில் பார்ப்பது சரியானதல்ல.அதே போல் இவர்களிடம் ஒட்டி உறவாடி சொந்த தமிழ்மக்களையே கொன்றொழிக்கவும்,அடிமைப்படுத்துவதற்கும் உறுதுணையாக நின்ற தமிழ்குடிகளை பற்றியும் பேச வேண்டுமல்லவா?
தெலுங்கு மொழி பேசும் ஒரு பிரிவினரின் ஆதிக்கம் உண்மையில் மொழியின் பாற்பட்டுத்தான் வெளிப்படுகிறதா?நிச்சயம் அப்படி இல்லை? மொழி கொண்டு அவர்கள் சாதிக்க விரும்பினார்கள் என்றால் விரைவில் அவர்கள் தனிமைப்பட்டுப் போவார்கள். அது அவர்களும் நன்கு அறிந்ததே. அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை, அரசியலை தக்க வைத்துக் கொண்டிருப்பது வர்க்கமாகவும், சாதியமாகவும், மதமாகவும் என்பதுதான் முக்கியமாக பார்க்கப் படவேண்டிய விடயம்.
இந்த வர்க்க, சாதிய ஆதிக்கவாதிகளின் (வெளியார்களின்??) அடியாள் கூட்டமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பாயும், அதேவேளையில் வர்க்க, சாதிய ஆதிக்கவாதிகளிடம் (வெளியாரிடம்) பணியும், முதலாளிகள் இடும் வேலைகளை தண்டனிட்டு நிறைவேற்றுவது யாரென்றால் அவர்களை கடந்த 500 ஆண்டுகளாக காத்து வரும் சாதிப்பெருமை பேசும் பெருமைமிகு இந்த தமிழ்க்குடிகள்தான். இவர்களின் குறுகிய அரசியல் லாபத்திற்காக அவைகளையெல்லாம் மறைத்து பரந்துப்பட்ட மக்கள் மீது, அதாவது அந்த ஆண்டைகளுக்கும், தலைமைகளுக்கும் ,
எந்தவித தொடர்பும் இல்லாத சாமானிய மக்கள் மீது வெளியார் என்று பழிசுமத்தி தன் அரசியல் இலக்குகளை சாதித்து கொள்ள முயல்கிறது இந்த சந்தர்ப்பவாத கூட்டம்.
வரலாறு நெடுக இவர்களை பொறுத்தவரை மொழி ,இனம் என்பதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. சாதி, ஆதிக்கம், அதிகாரம் ஆகியவை மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது. மானம், வீரம் என்பதும் ஒரு பொருட்டேயில்லை.படையெடுத்து வந்தவன் முன் மண்டியிட்டு தன் சொந்த மொழி பேசிய மக்கள் மீது அடக்குமுறை செலுத்தி இதுகாறும் பார்த்த, பார்க்கும் கங்காணி வேலையே அவர்களுக்கு பெருமைக்குரியது.
இந்திய சுதந்திரத்திற்கு பின் தி.மு.க, அ.தி.மு.க ஆட்சியில் தங்களை வளர்த்துக் கொண்ட இந்த ஆதிக்க சாதிகள் தாங்களே அதிகாரத்திற்கு வர விரும்புவதும், அதற்கு தடையாக தங்கள் முன்நிற்கும் முன்னாள், இந்நாள் எசமானர்களை அப்புறப்படுத்தவும் கையிலெடுப்பதுதான் இந்த மொழி, இன வெறி அரசியல்.
நேரடியாகச் சொன்னால் சாதியரீதியாக இதே வர்க்க, சாதீய கும்பலோடு (வெளியார்களுடன்) ஒன்றுபட்டு நிற்கும் இந்த சாதியவாதிகள்தான் தமிழ்த்தேசிய களத்தில் அவர்களை எதிர்ப்பதாகவும் சொல்கின்றனர். இவர்களின் இரட்டை நிலைப்பாடுதான் பெரும்பான்மை தமிழ்மக்களை ஓன்றுபடுத்தாமல் பிளந்து வைத்திருக்கிறது. எப்படி ” வடக்கு வாழ்கிறது ,தெற்கு தேய்கிறது” என சொற்சிலம்பம் ஆடியவர்கள் யாரை எதிர்ப்பதாக சொன்னார்களோ அவர்களிடமே தஞ்சமடைந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார்களோ? அதே போல் இந்த சாதிய தமிழர்களும் இப்போது யாரை எதிர்ப்பதாக சொல்கிறார்களோ அவர்களிடம் எப்போதும், இப்போதும் இரகசிய உறவு வைத்திருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த வர்க்க,சாதிய ஆதிக்கவாதிகளுடன் இணைந்து ஒடுக்கப்பட்ட தமிழக மக்களுக்கு துரோகம் செய்யவே செய்வார்களே தவிர தமிழகத்திற்கு கடுகளவும் இவர்களால் நன்மையிராது.
ஒரு தேசிய இனம் தனக்குள்ளான பலவீனத்தை சரிசெய்துக்கொண்டாலே தன்னை மற்றவர்கள் ஒடுக்குவதிலிருந்து காத்துக்கொள்வதோடு இனிமேல் யாரும் யார் மீதும் ஒடுக்குமுறையை செலுத்தாமலும் பார்த்துக்கொள்ளலாம். அது ஆரோக்கியமான முறையிலே பொறுமையுடன், பக்குவத்துடன், நீண்ட கால இலக்குகளோடு செயல்நடத்தப்பட வேண்டிய விடயமாகும். சிங்கள பேரினவாதம், ஜெர்மானிய பேரினவாதம் போன்றவற்றின் வளர்ச்சியையும், அவைகள் ஏற்படுத்திய அழிவையும் பார்த்த நாம் அதே பாணியில் தமிழகத்திலும் வளரும் கட்சிகளை தடுப்பதும், முறியடிப்பதும், தமிழகத்தை காப்பதும் மார்க்சிய அடிப்படையிலான அறிவியல்பூர்வமான தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொண்டவர்களின் முதற்கடமையாகிறது.
மேற்கண்ட விவாதங்கள் இன்றைய போலித் தமிழ்த்தேசியத்தின் பிரச்சனைகளை பற்றித்தான் குறிப்பாக விவாதிக்க முற்படுகிறதே தவிர அது குறித்த அனைத்து பரிணாமங்களையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த விவாதங்களை வாசித்தபின் பல்வேறு கேள்விகளும், ஐயங்களும், விமர்சனங்களும் எழலாம். அவை வரவேற்கப்படுகின்றன. தேவைப்படுமெனில் அவற்றுக்கான பதில்களும் அது குறித்த விரிவான விவாதங்களையும் அடுத்ததாக வெளியிட காத்திருக்கிறோம்.