அதானி நிறுவனம் மற்றும் சிலர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூபாய் 6000 கோடி அளவிற்கு செய்த நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து ஏற்கனவே அறப்போர் இயக்கம் 2018 ல் புகார் கொடுத்து அது தற்பொழுது லஞ்ச ஒழிப்பு துறையால் பூர்வாங்க விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த புகாருக்கு வலு சேர்க்கும் விதமாக மேலும் புதிய ஆதாரங்களை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறையில் சமர்ப்பித்துள்ளது . அறப்போர் இயக்கம் அனுப்பிய கூடுதல் ஆதாரங்களை இத்துடன் இணைக்கிறோம்.
அறப்போர் இயக்கம் மூன்று வகையான கூடுதல ஆதாரங்களை இணைத்துள்ளது
- MV கேலியோப்பில் என்னும் கப்பல் மூலமாக அதானி இந்தோனேஷியாவில் இருந்து டிசம்பர் 2013ல் தமிழ்நாடு கொண்டு வந்த நிலக்கரி எப்படி 3500 கிலோ தான் உள்ளது என்பதும் எப்படி வெறும் 33.75 டாலருக்கு ஒரு மெட்ரிக் டன் வாங்கிவிட்டு அதை 6000 கிலோ கேலரி 91.91 டாலர் என்று மோசடி செய்துள்ளார் என்பதற்கான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையில் சமர்ப்பித்துள்ளோம். இந்த ஒரு கப்பலில் வந்த நிலக்கரி மூலமாக மட்டும் மின்சார வாரியம் இழந்த தொகை 25 கோடி என்பதற்கான கணக்கையும் காண்பித்துள்ளோம்.
- ஏற்கனவே மோசடிக்கு பெயர் போன ஜியோகெம் என்னும் நிறுவனத்தை அதானி மோசடி தர சான்றிதழுக்காக பயன்படுத்தி உள்ளது என்பதையும் மின்சார வாரியம் சோதனை செய்த நிலக்கரியையும் இந்த நிறுவனமே சேம்பிள் எடுத்து கொடுத்துள்ளதையும் ஜியோகெம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் எப்படி 3500 கிலோ கேலரி நிலக்கரியை 6000 கிலோ கேலரி என்று தர சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் என்பதற்கான தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக அறப்போர் இயக்கம் பெற்ற ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சமர்ப்பித்துள்ளோம்.
- இதைத் தவிர டெண்டர் முடிவடையும் நேரத்திலேயே மின்சார வாரியம் வாங்குவதாக சொல்லப்படும் 6000 கிலோ கேலரி நிலக்கரிக்கு எப்படி அதன் சந்தை மதிப்பை விட ஒரு மெட்ரிக் டன்னுக்கு 17 டாலர் அதிகமான விலைக்கு டெண்டர்களை அதானி போன்ற நிறுவனங்களுக்கு இறுதி செய்துள்ளார்கள் என்பதற்கான மின்சார வாரியத்தின் ஆவணங்களையே தற்பொழுது அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்று சமர்ப்பித்துள்ளது. ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்கள் கிட்டத்தட்ட 70 டாலர் ஒரு மெட்ரிக் டன்னுக்கு இறுதி செய்துள்ள நிலையில் மற்றும் இந்தோனேசியா மார்க்கெட் விலை மிகக் குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சார வாரியம் இதைவிட மிக அதிகமாக கொடுப்பதற்கான காரணம் ஏதும் இன்றி எப்படி 87 டாலருக்கு 2014 ஜூலையில் டெண்டர்களை அதானி போன்ற நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளார்கள் என்பதற்கான தகவல் அறியும் உரிமை சட்ட ஆவணங்களையும் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமர்ப்பித்துள்ளது. நிலக்கரி டெண்டர் எண் 49 ஆன இந்த டென்டரில் மட்டும் 50 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரிக்கு நாம் இழந்த பணம் 500 கோடியை தாண்டும்.
அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் நேரடியாக ஆஜராகியும் அறப்போர் இயக்கம் தொடர்ந்து சமர்ப்பித்து வந்துள்ள பல்வேறு ஆதாரங்களை குறித்து விளக்க தயாராக இருக்கிறோம். இவ்வளவு ஆதாரங்கள் இருக்கக்கூடிய புகாரில் இன்று வரை லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு FIR கூட பதிவு செய்து விசாரணையை துவங்காமல் இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இனியாவது லஞ்ச ஒழிப்புத்துறை அதானி ஊழல்கள் மீது FIR பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
ஜெயராம் வெங்கடேசன்
ஒருங்கிணைப்பாளர் – அறப்போர் இயக்கம்
Ph 9841894700