மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், விடைத்தாள்களை மாற்ற முயற்சி உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தேறியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்தக் குற்றச்சாட்டுகளில் நீட் பயிற்சி மையம் ஈடுபட்டிருப்பது நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை வலுப்படுத்துகிறது. இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
ஆள் மாறாட்டம் எவ்வாறு நடக்கிறது?:
மகாராஷ்டிர மாநிலத்தில் நீட் தேர்வில் மாபெரும் ஆள் மாறாட்ட மோசடி நடைபெற்றுள்ளதாக சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்துள்ளது. 50 லட்ச ரூபாய்க்கு ஆள் மாறாட்டம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாக்பூரில் உள்ள ஆர்.கே. கேரியர் கைடன்ஸ் என்ற நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பி நீட் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களைத் தொடர்புகொள்ளும் இந்த நிறுவனம், ஆள் மாறாட்டம் செய்வதன் மூலம் நீட்டில் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என தெரிவிக்கும். இதையடுத்து, சேர விரும்புவோரின் பெற்றோர் இவர்கள் சொல்லும் தொகைக்கு Post – Dated காசோலையைத் தர வேண்டும். பாதுகாப்பிற்காக அந்த மாணவரின் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு சான்றிதழ்களையும் தர வேண்டும். இதற்கான தொகை சுமார் 50 லட்ச ரூபாய் வரை இருக்கும். நீட் தேர்வுக்கான User Id மற்றும் passwordகள் சம்பந்தப்பட்ட மாணவரிடமிருந்து பெறப்பட்டு, இந்த நிறுவனமே ஒரு குறிப்பிட்ட சென்டர் வருவதுபோல ஏற்பாடு செய்யும். பிறகு சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படம் மார்ஃப் செய்யப்படும். சம்பந்தப்பட்ட மாணவரின் ஆதார் கார்டு பெறப்பட்டு, போலி ஆதார் கார்டு உருவாக்கப்படும். இதற்குப் பிறகு, ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு, இந்த நிறுவனத்தால் ஏற்பாடு செய்பவர்கள் அந்தத் தேர்வை எழுதுவார்கள். தற்போது நடந்து முடிந்த தேர்வில், இதுபோல ஐந்து பேர் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ராஞ்சியில் உள்ள மையத்திலும் மற்றவர்கள் தில்லியிலும் இதைச் செய்துள்ளனர்.
மாஸ்கில் மைக் ( வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் ‘ ) :-
கைதானவர்களிடமிருந்து, சந்தேகிக்கும் வகையில் தைக்கப்பட்டு இருந்த ஏராளமான N-95 மாஸ்குகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில் மாஸ்கிற்கு உட்பகுதியில், தகவல் தொடர்பு சாதனங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், மாஸ்கிற்குள் சாதனங்களை மறைத்து வைத்தால் தேர்வறையில் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதால், ஆன்லைனில் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கி இந்த முயற்சியை மேற்கொண்டதாக கைதானவர்கள் தெரிவித்தார்கள்.
தேர்வு அறைக்கு வெளியே இருப்பவர்களை தொடர்பு கொள்ள மாஸ்கின் உட்பகுதியில் பேட்டரி மூலம் இயங்க கூடிய கருவியை பொருத்தியுள்ளனர். நானோ சிம் கொண்ட இந்த கருவியில் ஒரே பொத்தானை அழுத்துவதன் மூலம், அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வெளியே இருப்பவர்கள் பேசுவதை தேர்வு எழுதுபவர்கள் கேட்க, காதின் உட்பகுதியில் பொருத்தக்கூடிய சிறிய வடிவலான இயர்பீஸ்களையும் பயன்படுத்தியுள்ளது. ஜெய்பூரில் தேர்வறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட, தினேஷ்வரி குமாரி எனும் மாணவி உட்பட 8 பேரை போலீசார் நீட் தேர்வு நடந்த அன்று கைது செய்தனர். 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வாங்கி கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை சில கோச்சிங் சென்டர்கள் எழுத வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் முதலில் முன்வைக்கக் கூடிய விஷயம்:
‘இது ஏழைகளுக்கானதாக இல்லை’ என்பதுதான். லட்சம் லட்சமாக பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்தி படித்தால் மட்டும்தான் இந்த நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலை இருக்கிறது என்ற குற்றச்சாட்டுதான் இதற்கு முக்கியக் காரணம்.
நீட் பயிற்சி மையங்களின் வருமானம் :-
இந்தியாவைப் பொறுத்தவரை, இத்தகைய நீட் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவையாக உள்ளன. கடந்த ஆண்டு நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சிகளைப் பெறுவதாக தங்களது குடும்ப வருமானத்தில் 12% தொகையை இந்தியப் பெற்றோர்கள் செலவிடுகின்றனர் என்ற அதிர்ச்சிகர புள்ளிவிவரம் கூறியுள்ளது. இதிலிருந்தே இந்த நீட் பயிற்சி மையங்களின் வருவாய் – லாப அளவை நம்மால் யூகிக்க முடியும்.
மேலும், CRISIL என்ற அமைப்பு 2020-ல் நடத்திய ஆய்வுபடி, 2021-ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் சுமார் ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம் செய்யும் என கணித்துள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இதுவரை இல்லாத அளவில் 13% அதிகம் என்று கூறப்பட்டடுள்ளது. அதாவது, கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த வர்த்தகம் ரூ.45,000 கோடியாகவே இருந்தது.
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் :-
மிக முக்கியமான 10 இந்த நீட் பயிற்சி வழங்கக் கூடிய மையங்கள் கொடுத்திருக்கக் கூடிய தகவலின்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு நீட் தேர்வில் மொத்தம் வெற்றி அடைந்தவர்களில் 25% பேர் நாட்டின் மிகப்பெரிய 3 நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்கள். 50 சதவிகிதம் மாணவர்கள் முதல் ஐந்து இடத்தில் இருக்கக் கூடிய பயிற்சி மையங்களில் பயின்றவர்கள். முதல் 10 இடங்களில் 9 பேர் இந்தப் பயிற்சிக் கூடங்களில் படித்தவர்கள்தான்.
இதற்காக, இந்த நீட் பயிற்சி மையங்கள் அதிகபட்சம் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். சராசரியாக பார்த்தால் ஒரு மாணவரிடம் இருந்து ரூ.2,94,000 அளவில் நீட் பயிற்சி வழங்குவதற்காக வசூலிக்கப்படுகிறது.
வேறுபடும் கட்டணம் :-
கட்டணங்களை பொறுத்தவரை சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு ஒரு கட்டணம், திருச்சி, செகந்திராபாத், மீரட் போன்ற நகரங்களுக்கு வேறு கட்டணம், கிராமங்களுக்கு தனி கட்டணம் என வெவ்வேறு வகைகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
இந்த முதல் மூன்று இடத்தில் உள்ள நிறுவனங்கள் மட்டும் நீட் பயிற்சி மையங்களை நாடு முழுவதும் சுமார் 544 கிளைகளைப் பரப்பி பயிற்சி கொடுக்கின்றன. இந்த மூன்று நிறுவனங்கள் மட்டும் ஆண்டிற்கு சுமார் ரூ.1000 கோடியில் இருந்து ரூ.1,500 கோடி வரை தனித்தனியாக லாபமாக ஈட்டுகின்றன.
நீட் பயிற்சி மையங்கள் செய்யும் மோசடிகள் :-
இப்படி தங்களுக்குள் உள்ள தொழில் போட்டி, அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நீட் பயிற்சி மையங்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.
வினாத்தாள்களை திருடி தங்கள் பயிற்சி மையத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பது, ஆள்மறாட்டம் செய்வது என தொடங்கி தற்போது விடைத்தாள்கள் ஏமாற்றும் அளவிற்கு இவர்களது விஷக் கைகள் நீண்டு கொண்டிருக்கின்றன.
இதற்கு சாட்சிதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது எழுந்து இருக்கக்கூடிய அதிர்ச்சி தரும் மோசடிகள். இன்னும் வெளியே தெரியாமல் எத்தனை எத்தனை முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதை ஊகிக்க கூட முடியவில்லை. இத்தகைய நீட் பயிற்சி மையங்கள் என்ற பெயரில் மோசடி செய்யப்படுவதால் பல ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்துபோவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் எதிர்கால மருத்துவக் கட்டமைப்பும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.
உண்மை நிலவரங்கள் :-
1) தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும்?
2) ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை.மருத்துவ படிப்பு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும்.
3) பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வு பயிற்சிக்காக அதிகளவில் கட்டணம் ஏன் வசூலிக்கப்படுகிறது?
4) 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் தான் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.இது அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிக குறைவானது.
5) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை?
மாநிலங்களின் கூட்டணி :-
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் வலுமையாக எதிர்ப்பு நீண்டு வரும் நிலையில் இந்த எதிர்ப்பு வட இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மகாராஷ்டிர மாநிலமும் நீட் தேர்வை மறு ஆய்வு செய்வோம் என அறிவித்துள்ளது.