இந்தியாவில் 2010-ஆம் ஆண்டில் நீட் கொண்டு வரப்பட்ட போது அதற்காக கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது, மருத்துவக் கல்வியில் வணிக நோக்கத்தை ஒழிப்பது ஆகியவை தான். நீட் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது.
ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மோசடி தடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நீட் தேர்விலேயே தொடர் மோசடிகள் நடைபெற்று வருவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இத்தகைய மோசடிகள் நீட் தேர்வு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகளின் மீதான மாணவர்களின் நம்பிக்கையை முற்றாக தகர்த்து விட்டன. நீட் தேர்வில் முறைகேடுகளும், மோசடிகளும் நடப்பது இது முதல்முறையல்ல. அதற்கான சான்றுகள் பல உள்ளன.
எடுத்துக்காட்டாக,
1) நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை :-
செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் ரூ.35 லட்சத்திற்கு பேரம் பேசப்பட்டு, நூதன முறையில் மோசடி செய்த 18 வயது மாணவி உட்பட 8 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: தேர்வு மைய கண்காணிப்பாளர் ராமன் சிங்கின் நண்பர் நவரத்னா என்பவர் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அவருடைய நண்பர் அனில் யாதவ்வின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுனில் யாதவின் உறவினர்தான் தினேஷ்வரி. தினேஷ்வரி நீட் தேர்வு எழுதும் மையத்தின் கண்காணிப்பாளராக ராமன் சிங் இருந்துள்ளார். இவர்கள் தினேஷ்வரி மாமாவிடம் நீட் தேர்வு விடைகளை சொல்வதற்கு ரூ.35 லட்சம் பேரம் பேசி உள்ளனர். தேர்வு மையத்தில் வினாத்தாள் தரப்பட்டதும் அதை ராமன் சிங் செல்போனில் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்புவார்.
தேர்வு மையத்திற்கு வெளியில் இருப்பவர்கள் மூலம் அந்த வினாத்தாள் வேறொரு நபரிடம் தரப்பட்டு உரிய விடைகள் தயார் செய்யப்படும். அந்த விடைகள் மீண்டும் ராமன் சிங் செல்போனுக்கு அனுப்பப்படும். அவர் தினேஷ்வரி சரியான விடைகளை எழுத உதவுவார். இதுதான் அவர்களின் திட்டம். இதற்காக முன்பணமாக ரூ.10 லட்சத்துடன் தினேஷ்வரின் மாமா தேர்வு மையத்திற்கு வெளியே பணத்துடன் காரில் அமர்ந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த முறைகேடும் நடக்கும் முன்பாகவே 8 பேரும் கைதாகி உள்ளனர். இதுதவிர உபியில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக 2 பேர் கைதாகி உள்ளனர்.
2) ஒவ்வொருவரிடமும் ரூ.50 லட்சம்..
நான்கு தினங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது.இதுதொடர்பாக பயிற்சி மையத்தின் இயக்குநர் பரிமல் கோட்பள்ளிவார் மற்றும் பல மாணவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடம் இருந்தும் ரூ.50 லட்சம் வரை இந்நிறுவனம் வசூலித்துள்ளதாகவும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வை எழுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோச்சிங் சென்டரில் இருப்பவர்கள் மாணவர்களின் விண்ணப்பங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து திட்டமிட்ட தேர்வு மையங்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.
அதேபோல் ஆள் மாறாட்டம் செய்ய ஏதுவாக மாணவர்களின் விண்ணப்பத்தில் இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் மாற்றியுள்ளனர். மாணவர்களின் ஆதார் அட்டையின் தகவல்களைக் கொண்டு போலியாக அடையாள அட்டையைத் தயார் செய்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சில மாணவர்களுக்கு விடை குறித்த தகவல்களை அளித்ததையும் கோச்சிங் சென்டர் தரப்பில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு தேர்வில் மொத்தம் ஐந்து மாணவர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்ய கோச்சிங் நிறுவனம் திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க சிபிஐ அந்த தேர்வு மையங்களில் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முன்கூட்டியே இந்த தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட கோச்சிங் நிறுவனம், அவர்களைத் தேர்வு எழுத மையங்களுக்கு அனுப்பவில்லை. இது தொடர்பாக நேற்று கோச்சிங் சென்டரில் அதிரடி சோதனை செய்த சிபிஐ பலரைக் கைது செய்துள்ளது.
மாஸ்கில் மைக் ( வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் மோசடி’ ) :-
கைதானவர்களிடமிருந்து, சந்தேகிக்கும் வகையில் தைக்கப்பட்டு இருந்த ஏராளமான N-95 மாஸ்குகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில் மாஸ்கிற்கு உட்பகுதியில், தகவல் தொடர்பு சாதனங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், மாஸ்கிற்குள் சாதனங்களை மறைத்து வைத்தால் தேர்வறையில் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதால், ஆன்லைனில் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கி இந்த முயற்சியை மேற்கொண்டதாக கைதானவர்கள் தெரிவித்தார்கள்.
தேர்வு அறைக்கு வெளியே இருப்பவர்களை தொடர்பு கொள்ள மாஸ்கின் உட்பகுதியில் பேட்டரி மூலம் இயங்க கூடிய கருவியை பொருத்தியுள்ளனர். நானோ சிம் கொண்ட இந்த கருவியில் ஒரே பொத்தானை அழுத்துவதன் மூலம், அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வெளியே இருப்பவர்கள் பேசுவதை தேர்வு எழுதுபவர்கள் கேட்க, காதின் உட்பகுதியில் பொருத்தக்கூடிய சிறிய வடிவலான இயர்பீஸ்களையும் பயன்படுத்தியுள்ளது.
ஜெய்பூரில் தேர்வறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட, தினேஷ்வரி குமாரி எனும் மாணவி உட்பட 8 பேரை போலீசார் நீட் தேர்வு நடந்த அன்று கைது செய்தனர். 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வாங்கி கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை சில கோச்சிங் சென்டர்கள் எழுத வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
3) நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – வடமாநிலங்களைச் சேர்ந்த 10 பேரின் புகைப்படங்கள் வெளியீடு :-
கடந்த ஆண்டு நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக, தேர்வு எழுதிய வடமாநிலங்களைச் சேர்ந்த 10 நபர்களின், புகைப்படங்களை, தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டனர்.
4) ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 17 மாணவர்கள் கைது :-
தமிழகத்தில் தேனி மருத்துவக்கல்லூரியில்தான் முதலில் இது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய ரூ.20 லட்சம் கைமாறப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சி.பி. சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா என்பவர் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனும் கைதானார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள 3 மருத்துவகல்லூரிகளில் படித்த மாணவர்கள் பிரவீன், அபிராமி, ராகுல் மற்றும் அவர்களின் தந்தைகளும் கைதானார்கள். கேரளாவில் ‘நீட்’ பயிற்சி மையம் நடத்தி வந்த ஜார்ஜ் ஜோசப் என்பவரும் கைதானார். தேனி மாணவர் உதித் சூர்யாவுக்காக ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வை எழுதிய மாணவர் முகமது இர்பான் என்பவரும் சிக்கினார். இதுபோல மொத்தம்7 மாணவர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீஹர்ஷா (வயது 38) என்ற இடைத்தரகரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வினாத்தாள்கள் ஜெய்ப்பூரில் ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் நீட் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே கசிந்துள்ளன. அதேபோல், ஆள் மாறாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவர்களைப் போல மோசடியாக மாணவர் சேர்க்கை இடத்தைக் கைப்பற்றி இன்னும் எத்தனைப் பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நீட் தேர்வு மோசடிகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை என்பது இன்னுமொரு வேதனை ஆகும். தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட மோசடியில் உண்மையான மாணவர்களுக்கு பதிலியாக தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட பிறகும் கூட அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
நீட் மோசடி செய்பவர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவு இருக்கிறது என்பதையே இந்த தகவல்கள் காட்டுகின்றன. இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. மருத்துவக் கல்வியியின் தரத்தை உயர்த்த வேண்டும்; மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்க வேண்டும் ஆகிய இரு உன்னத நோக்கங்களை நிறைவேற்ற நீட் தவறி விட்டது.இத்தகைய சூழலில் மோசடிகளின் கூடாரமாக நீட் உருவெடுத்திருப்பது தேர்வு சார்ந்த மோசடிகள் அதிகரிக்கவும், மருத்துவக் கல்வியின் தரம் குறையவும் தான் வழி வகுக்கும்.
நீட் தேர்வின் மூலம் வியாபாரம் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் கோடி மதிப்பிலான மோசடி வியாபாரம் கல்லாக் கட்டத் தொடங்கியுள்ளது. அதுவும் நம்முடைய வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், நமக்கான வாய்ப்பை பறித்துவிட்டனர். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தும் இரண்டு முறை, மூன்று முறை என்று நீட் தேர்வு எழுதி, தேர்ச்சியடையாமல் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் ஒரு புறம், 50 லட்சம் வரை பணம் கொடுத்து ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெறும் மாணவர்கள் இன்னொரு புறம்!…. இதற்கு ஏன் நீட் என்ற தேர்வு….மத்திய அரசு நீட் தேர்வு என்பதனை கொண்டு வந்து ஒரு புறம் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுக்கிறது, இன்னொரு புறம் மாணவர்களை 17,18 வயதில் மோசடி செய்ய வைத்து சிறைக்கு அனுப்புகிறது!….
யாழினி ரங்கநாதன்