![IMG-20250203-WA0040](https://www.desathinkural.com/wp-content/uploads/2025/02/IMG-20250203-WA0040.jpg)
சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதிக்கு சென்று ‘வாக்கு செலுத்த பணம் வாங்க வேண்டாம்’ என்ற ஒரு சிறிய பைலட் ஆராய்ச்சி பிரச்சாரம் மேற்கொண்டோம். 2026 தேர்தலில் இதை ஒரு பெரிய பிரச்சாரமாக மேற்கொள்ள முடியுமா, மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது, அவர்கள் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்ள ஈரோடு கிழக்கு சென்றோம். வீரப்பன்சத்திரம் மற்றும் BP அக்கிரகாரம் ஆகிய 2 இடங்களில் இந்த ஆய்வு பிரச்சாரத்தை மேற்கொண்டோம். சிறிய குழுக்களாக 8 பேர் சென்று கிட்டத்தட்ட 500 நபர்களை சந்தித்து பேசினோம்!
![](https://www.desathinkural.com/wp-content/uploads/2025/02/IMG-20250203-WA0038.jpg)
ஒவ்வொருவராக சந்தித்து நோட்டிசில் உள்ள 5 கேள்விகளை அவர்களிடம் கேட்டோம். அவர்களையே படித்து டிக் போட சொன்னோம். நாங்கள் கேட்ட கேள்விகள் கீழே படத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 95% மக்கள் இந்த படத்தில் உள்ளது போல் தான் தெரிவித்தார்கள். பணம் வாங்காதவர்கள் தவிர கிட்டத்தட்ட அனைவருமே வாக்குக்கு பணம் வாங்குவதில் தங்களுக்கு குற்ற உணர்ச்சி/ சங்கடம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்கள்.
வீரப்பன்சத்திரத்தில் அன்றைய தினம் (சனிக்கிழமை) காலைதான் ஒவ்வொரு வாக்குக்கும் ரூ 1000 காலை 5 மணிக்கே கொடுக்கப்பட்டுள்ளதாக பலர் தெரிவித்தனர். அன்றைய தினம் மாலை நாங்கள் இதை பற்றி பேசும் பொழுது மக்களின் குற்ற உணர்ச்சியை பார்க்க முடிந்தது.
இதற்கு பிறகு அவர்களிடம் உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது, பணம் வாங்குவது தவறு என்று நீங்கள் நினைத்தால் இதை மாற்றுவது எப்படி என்று கேட்டேன். பெரும்பாலும் மக்கள் சேர்ந்துதான் செய்யவேண்டும் என்றனர். அதன் ஆரம்பபுள்ளி உங்கள் தெருவில் நீங்களாக இருப்பீர்களா என்றும் கேட்டோம். பணம் வாங்குவது தவறு என்று பெரும்பாலான மக்கள் சொல்வதும் குற்ற உணர்ச்சி உள்ளது என்று 99% மக்கள் சொல்வதும் இன்று உள்ள அவல நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தந்தது. சிலர் இது எங்க பணம் தாங்க அதை வாங்குவதில் என்ன தவறு? கொடுக்கறாங்க நாங்க வாங்கறோம் போன்ற பதில்களும் கிடைத்தது. வாங்கவில்லை என்றால் நாளை அரசு சேவைகளில் எனக்கு பிரச்சனை செய்வார்கள் என்ற பயத்தையும் சிலர் வெளிப்படுத்தினர்.
![](https://www.desathinkural.com/wp-content/uploads/2025/02/IMG-20250203-WA0041.jpg)
ஒருவரிடம் பேசி முடித்த பிறகு எங்க இவ்வளவு அவசரமா போறீங்கனு கேட்டேன். தினமும் ரூ 300 மாலை நேரத்தில் தருவாங்க. அதை வாங்கிகொண்டு அவர்களுடன் ஒரு அரை மணி நேரம் இந்த ஊரை பேரணியாக சுற்றி வருவோம் என்றார். அவரிடம் வழி கேட்டு அங்கு சென்றோம். அங்கு தெருவிலேயே லிஸ்ட் போட்டு பணபட்டுவாடா நடந்து கொண்டு இருந்தது. சரி அங்கு கூட்டமாக இருந்த பெண்கள் மற்றும் ஆண்களிடம் நோட்டிஸ் கொடுத்து சிலரிடம் பேசினோம். ஒரு பக்கம் டேபிள் நாற்காலி எல்லாம் போட்டு லிஸ்டுடன் கட்சிகாரர்கள் உட்கார்ந்து இருந்தனர். கொடுப்பவர்களும் நோட்டிசை வாங்கி பார்த்து பணம் கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமா கொடுக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் இருந்தனர். அவர்களுக்குள் கூடி பேசி பிறகு லிஸ்ட் சரி பார்த்து சிலருக்கு பணம் கொடுப்பதையும் பார்த்தேன். பணம் பட்டுவாடா செய்யும் இடத்திலேயே இந்த பிரச்சார ஆய்வு செய்தது சுவாரசியமாக இருந்தது. இங்கு மக்கள் மனதில் சங்கடமும் குற்ற உணர்ச்சியும் கொஞ்சும் அதிகமாகவே இருந்தது.
கடைசியில முடித்துவிட்டு டீ கடையில் டீ குடிக்கும் பொழுது கட்சிதுண்டு போட்ட ஒரு பெரியவர் என்னை பார்த்து நீங்க எங்க இருந்து வந்து இருக்கீங்கன்னு கேட்டாரு. நான் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னேன். அவர் அதற்கு நீங்க பணம் கொடுப்பதை மேற்பார்வை பார்க்க வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். நான் ஆமாம் பணம் எல்லாம் சரியாக பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதா அல்லது நடுவில் யாராவது அடித்து விட்டார்களா என்று பார்க்க வந்தேன் என்றேன். அவர் உடனே கரூர் காரங்க அதெல்லாம் கரெக்டா கொடுத்துட்டாங்க. காலையில 5 மணிக்கு ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்துட்டாங்கன்னு சொன்னார். லோக்கல் ஆட்களை நம்பவில்லை. கரூர் காரங்க சூப்பரா பண்ணிட்டாங்கனு கரூர் தியாகிகளுக்கு சர்டிபிகேட் கொடுத்து விட்டு சென்று விட்டார்.
சரி..எங்கள் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பண பட்டுவாடா பற்றி தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கலாம் என்று போன் போட்டால் 1950 புகார் எண்ணில் யாரும் எடுக்காமல் கட் ஆனது. தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு லீவ் போட்டு விட்டு போய் விட்டார்கள் போல. 1950வில் ஆட்கள் யாரும் தொலைபேசி எடுக்காததையும் வேலை செய்யாததையும் வீடியோ ரெகார்ட் செய்து ஆதாரத்துடன் ட்விட்டரில் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்தால், அவர் இது பொய் செய்தி என்று ட்விட்டரில் சொல்லிவிட்டு போய் விட்டார். தேர்தல் ஆணையம் தூக்கத்தில் இருந்தால் எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று நினைத்துவிட்டு அடுத்த நாள் மீண்டும் கிளம்பினோம்.
ஞாயிறு காலை BP அக்கிரகாரம் பகுதியில் இந்த பிரச்சாரம் மேற்கொண்டோம். பெரும்பாலும் முஸ்லிம்கள் உள்ள பகுதி இது. மக்களின் கருத்துக்களில் முந்தைய நாள் போல் தான் இருந்தது.
என் ஓட்டு விறபனைக்கு அல்ல. நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என்ற ஸ்டிக்கர் சிலது உடன் கொண்டு போய் இருந்தோம். ஓட்டுக்கு நான் பணம் வாங்கியதில்லை, வாங்கவும் மாட்டேன் என்று கொஞ்சும் அதிகமான நபர்களை இந்த ஊரில் சந்திக்க முடிந்தது. ஸ்டிக்கரை ஆர்வத்துடன் அவர்கள் வீட்டில் ஒட்டினார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்னும் கேலிக்கூத்தில் மக்கள் பெரும்பாலும் பணம் வாங்கி இருந்தாலும் அவர்கள் பதில்கள் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. பணம் கொடுப்பவன் திருடன் என்பதில் தெளிவாக உள்ளனர். குற்ற உணர்ச்சி உள்ளது என்பதை தெரிவித்தனர். இதை மக்கள் தான் மாற்ற வேண்டும் என்பதிலும் மக்கள் பெரும்பாலானோர் தெளிவாக உள்ளனர் என்று தான் தோன்றியது. இவை அனைத்தும் நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. ஒருவரை பல முறை சந்திக்கும் அளவிற்கு பிரச்சாரத்தை நாம் வடிவமைத்தாலும் அரசியல் ரீதியாக இதை ஒரு பெரிய பேச்சு பொருளாக மாற்றினாலும் இந்த மாற்றங்கள் சாத்தியம் என்றே தோன்றியது. ஈரோடு கல்லூரி மாணவர்கள் பெருந்தலையூர் போன்ற கிராமத்தில் முன்னெடுத்த பிரச்சார உதாரணங்களும் உள்ளது.
பணம் வாங்குவதை நியாயப்படுத்தும் காரணங்களையும் ஆவணப்படுத்தி உள்ளோம். இது அனைத்தையும் வைத்து 2026 தேர்தலுக்கு முன் ஒரு பெரிய பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. முன்னெடுப்போம்!
ஜெயராம் வெங்கடேசன். ஒருங்கிணைப்பாளர் அறப்போர் இயக்கம்