
சங்க இலக்கிய காலத்தில் இருந்து அறியப்பட்ட தொன்மை சான்ற இடம் திருப்பரங்குன்றம். புதிய கற்காலத்தில் விட்டு வாழ்க்கையின் தெய்வமாக கொற்றவை தமிழ்ப்பண்பாட்டில் உருவானது. புதிய கற்காலத்தின் தொடர்ச்சியாய் தோற்றம் இரும்புக் காலத்தில் எழுச்சியுற்ற வேல் வழிபாடும் அதன் தொடர்ச்சியாய் கொற்றவை மகனாய் உருப்பெற்ற முருக வழிபாடு தமிழ்ப்பண்பாட்டின் தனித்துவம் வாய்ந்தது.
முருகன் , வேலன் வழிபாடு பற்றிய குறிப்புகள் குறுந்தொகை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் நிரம்ப உண்டு.
வேலன் வழிபாடு என்பது முதன்மையாக ஆட்டை அறுத்து பலியிடும் வழிபாட்டுச் சடங்கை அடிப்படையாகக் கொண்டது. குறிஞ்சி நிலத்தின் தலைவனாக அறியப்படும் முருகனின் திணை வாழ்க்கையாக வேட்டைப் பொருளாதாரமே இருந்தது.
இத்தகைய வரலாற்றை மறைத்துத் தமிழ்ப் பண்பாட்டில் பார்ப்பன மேலதிக்கமும். சமஸ்கிருத தாக்கமும் கலந்த வட மரபு ஸ்கந்தன் என்ற கந்தனாக முருகனை மாற்றிய கையோடு முருகனை தூய சைவ வழிபாட்டுக்குச் சொந்தாமக்கி நாடகமாடி வருகிறது வைதீக பார்ப்பனியம்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றிவிட்டதாகவும் மலையில் ஆட்டை அறுத்துப் பலியிட்டு இழிவுபடுத்திவிட்டதாகவும் இசுலாமியர்களுக்கு எதிரான கருத்தை இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார இயக்கங்கள் பரப்பி வருகின்றன.
திருப்பரங்குன்றம் மலையை இசுலாமியர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப் போவதாக புதுக் கட்டுக்கதைகளை இந்துமுன்னணி , அனுமன் சேனா உள்ளிட்ட சங்பரிவார – சநாதன இயக்கங்கள் பரப்பி வருகின்றன.
இது உண்மை தானா?
மதுரையில் திருப்பரங்குன்றம் போல எண் பெருங்குன்றங்கள் உள்ளன.இந்தக் குன்றுகள் அனைத்தும் நாட்டார் வழிபாடு , சமண , புத்த சமயங்கள் , வைணவ ,சைவ மதங்கள் , இசுலாமிய , கிறித்தவ சமயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் எந்தவித இடர்களும் சிக்கல்களும் இன்றி மக்களால் அமைதியான முறையில் வழிபட்டு வரப்படுகின்றன.
இவ்வாறு தான் இசுலாமிய இறை மார்க்கத் தூதர்களின் வழிபாட்டு இடங்களில் ஒன்றான அவுலியா சிக்கந்தர்பாதூஷா அடக்கம் செய்யப்பட்ட தர்கா வழிபாட்டு இடம் திருப்பரங்குன்றம் மலை மீது இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.
மதுரா கன்டரி மேனுவல் எனும் நூலில் நெல்சன் அவர்கள் திருப்பரங்குன்றம் மலை மீது இருந்த இசுலாமியர்களின் தர்கா வழிபாட்டை குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றத்திலுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கந்தூரி வழிபாடு எனும் ஆடு அறுத்துப் பலியிடும் வழிபாட்டு முறையும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் வாழும் இசுலாமியர்களால் வழக்காக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இது புது நடைமுறையன்று காலங்காலமாக இருந்து வரும் பழக்கவழக்கத்தின் தொடர்ச்சியேயாகும்.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாட்டு தலமும் தென் கிழக்காக அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன.
அதேபோல மலையடிவாரத்தில் குடைவரை முருகன் கோவிலும் அமைந்துள்ளது.
பிரிட்டீஷ் வருகைக்குப் பிறகு திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள பகுதியை நில அளவை செய்து அதனை இனாம்தாரி நில வகையினமாக அடையாளப்படுத்தி இனாம் நிலங்களுக்கானப் 1863 பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் கிராம நிலங்கள் தர்காவுக்காக இனாமாக வழங்கப்பட்டுள்ளன என்பதை பிரிட்டீசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
1920ல் அப்போதைய முருகன் கோவில் தேவசம் போர்டுக்கும் தர்கா பொறுப்பு நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த சிவில் வழக்கில் 1923 ஆகஸ்ட் 25 ஆம் தேதி தர்கா அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நெல்லித் தோப்பு இசுலாமிய அடக்கத் Anxiety ஆகியவை தர்கா நிர்வாகக் குழுவிற்கு சொந்தம் எனத் தீர்ப்புரைத்தது. இது தொடர்பான மேல்முறையீடு இலண்டன் பிரைவி கவுன்சில் தீர்ப்பிலும் தர்கா அமைந்துள்ள பகுதி தர்காவின் நிர்வாகக் குழுவிற்குச் சொந்தம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டு விடுதலைக்குப் பின் இந்து அமைப்புகள் எனும் பெயரில் சநாதன சக்திகள் தொடர்ந்த 1978 , 1996/,1998 , 2011 என அனைத்து வழக்குகளிலும் தர்கா அமைந்துள்ள இடம் தர்கா நிர்வாகக் குழுவிற்கு சொந்தம் எனத் தீர்ப்புரைத்துள்ளன.
ஆனால் தீர்ப்புகளையோ மத நல்லிணக்கத்தையோ ஏற்றுக் கொள்ளாத இந்துத்துவ அமைப்புகள்
பாபர் மசூதி் இடிப்பிற்குப் பிறகு இசுலாமிய வழிபாட்டு இடங்களைக் குறிவைத்து பொய்களைப் பரப்பி அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த திசம்பர் 25 அன்று கந்தூரி கொடுப்பதற்காக வந்த குடும்பத்தைக் காவல்துறை தடுத்து நிறுத்தியதும் சிக்கல் எழுதி தொடங்கியது.
காலங்காலமாக நடந்த தர்கா வழிபாடு திடீரென தடுத்து நிறுத்தப்பட்டது தான் இன்றைய சிக்கலின் மூல வேர். அதே வேளையில் பல்வேறு பொய்த் தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதும் சட்ட ஒழுங்குச் சிக்கலைக் காரணமாக்கி இசுலாமிய வழிபாட்டுரிமையை நிலையாகப் பறிக்க முயற்சித்து வருகின்றன.
இந்து முன்னணி உள்ளிட்ட சநாதன இயக்கங்களின் கலவரத் திட்டம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள இசுலாமியர்களுக்குச் சொந்தாமான இடத்தில் தீபம் ஏற்றுவோம் என பல கட்டப் பரப்புரையை இந்து முன்னணி 1990 களில் இருந்தே மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவை எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. தற்போது ஒன்றியத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள பாஜக ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு காசி , ஜெய்ப்பூர் உள்ளிட்டு நாடு முழுவதும் உள்ள இசுலாமிய வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு என்ற பெயரில் நீதிமன்றங்களின் மூலம் தலையீடு செய்து வருகின்றன.
1991 இல் இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நடைமுறையில் இருக்கும் போதே அதிகாரத்தைப் பயன்படுத்தி இசுலாமிய வழுபாட்டுத் த லங்களில் இந்து அடையாளங்கள் உள்ளன என பொய்க் கருத்தை நிறுவ முயற்சித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவை இலக்காக வைத்து வெறுப்புப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட பாஜகவை எப்படியாவது வளர்க்க வேண்டும் என்ற திசையில் இந்து வாக்குகளை முசுலீம்களுக்கு எதிராக வெறுப்பு விதைத்து அறுவடை செய்ய பல திட்டங்களைத் தீட்டி வருகின்றன.
கல்வி ,மருத்துவம் போன்ற பல துறைகளில் வளர்ந்துள்ள தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத்தூண்டி அமைதியின்மையை உருவாக்க நினைக்கின்றன. எனவே தாம் இன்றைக்கு இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் சிக்கந்தர் தர்கா சிக்கலைக் கையில் எடுத்துள்ளன.
தமிழர்களின் நலனுக்கானவையா இந்துத்துவ அமைப்புகள்?
நீதிக்கட்சியின் பெரும் முயற்சியால் கொள்ளைபோன கோவில் சொத்துகளைப் பராமரிக்க இந்து சமய அறநிலையத் துறை முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்களில் தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆவதற்கும் தமிழில் அர்ச்சனை செய்வதைத் தடுக்கும் வகையிலும் இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்து தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்குத் தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகின்றன.
இந்து அறநிலையத்துறை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டு்நல்ல முறையில் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிர்வாகத்தைக் கெடுக்கவும் கோயில்களை பார்ப்பன மேலாதிக்க சக்திகளின் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளவும் இந்து அறநிலையத் துறையை கலைக்க பல முனைகளில் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றன.
பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலில் நுழையவும் வழிபாட்டில் சமத்துவத்தை நிலைநாட்டவும் சவார்க்கர் , மதன்மோகன் மாளவியா போன்ற இந்துத் தலைவர்கள் தடையாக இருந்தனர் என்பது வரலாறு. ஆனால் இவர்கள் இந்துக்கள் என்பவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது போல நாடகம் ஆடி வருகின்றனர்.
பறிபோகும் தமிழ்நாட்டின் உரிமையை மடைமாற்றும் உத்தி
மாநிலங்கள் , மக்களின் உரிமையை உரிமையை ஒவ்வொரு நாளும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக பறித்து வருகிறது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு வசதி செய்து கொடுத்துள்ளது.
வேளாண்மையைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வேளாண் சட்டங்களை கொள்ளைப்புற வழியில் நிறைவேற்ற முயற்சிக்கிறது.
மாநிலப் பல்கலைக்கழகங்களை அழிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழி விதிகளைக் கடுமையாகத் திருத்தியுள்ளது.
உயர் மருத்துவப் படிப்பில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50% இட ஒதுக்கீட்டை நீதிமன்றத்தின் வழியாக தடுத்து நிறுத்தியுள்ளது.
நீட் , நெக்ஸ்ட் போன்ற தேர்வுகளை திணிப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட், ஒடுக்கப்பட்ட மாணவர்களை உயர்கல்வியில் நுழைய விடாமல் வடிகட்டி வருகிறது.
ஒன்றிய அரசின் உயர் கல்வி்நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கிறது.
மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநரை வைத்து மக்காளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை முடக்கிப்போட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்குத்தர வேண்டிய பேரிடர் நிதி , வரியில் பகிர்வு ஆகியவற்றில் பாகுபாடு காட்டி வருகிறது.
ஒன்றிய அரசின் இத்தகைய வஞ்சகங்களைத் தமிழ் மக்கள் உணர்ந்தே உள்ளனர். இந்த அரசியல் விழிப்புணர்வை மடைமாற்றும் நோக்கில் சங்பரிவார அமைப்புகள் இசுலாமிய வெறுப்பைத் தூண்டி ஒன்றிய அரசின் தோல்விகளை மடைமாற்ற முயற்சிக்கின்றன . பாஜகவின் ஏவலர்களாக செயல்பட்டு் மத வெறுப்பு அரசியல் செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இந்த உண்மைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மதுரையின் மத நல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம்
மதவெறி் சநாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம் !
வரலாற்றிக் காலந்தொட்டு மதுரை மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் மண். பல சமயங்கள் மதுரைக்கு வந்த போதிலும் அவற்றிற்கு இடமளித்துத் தனது தனித்தன்மையை நிலைநாட்டியிருக்கிறது.
சமண , புத்த சமயங்களாயினும் சரி , வைணவ , சைவ சமயங்களாயினும் சரி , இசுலாமிய கிறத்தவ சமயங்களாயினும் சரி இவை அனைத்திற்கும் மதுரையில் இடமுண்டு என்பதை மெய்பித்து வந்திருக்கிறது.
வைணவத் தலமாக அறியப்படுகிற அழகர் கோவிலின் வாசலில் அமைந்துள்ள பதிணெட்டாம் படி கருப்பணசாமிக்கு இன்று வரை மதுரையைச் சுற்றியுள்ள மக்கள் ஆடு , கோழி அறுத்து படையலிட்டு வருகின்றனர். மதுரையின் தனி அடையாளமாக விளங்கும் மதுரை பாண்டி முனி கோவில் ஆடு அறுத்து பலியிட்டு வழிபடும் தலமாக இன்று வரை இயங்கி வருகிறது. பாண்டிய மன்னர்கள் கோரிப்பாளையம் தர்காவிற்கு இடமளித்து தங்கள் சமயச் சார்பின்மையை நிலைநாட்டியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சாதி , சமய மக்கள் கூடும் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா இன்று வரை எவ்வித சமயச் சண்டைகளுக்கும் இடமளிக்கவில்லை. அதேபோல தெற்குவாசலில் உள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சும் மதுரையின் சமய நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கி வருகின்றன. கோரிப்பாளையம் தர்கா , தெற்குவாசல் பள்ளிவாசல் ஆகியவை பல்வேறு சமயத்தவர் வழிபடும் இடமாக இருந்து வருகின்றன.
இவ்வாறு அமைதியும் , சமய நல்லிணக்கத்தையும் கடைபிடித்து வரும் மதுரை மக்களைப் பிளவுபடுத்தி வட இந்தியாவைப் போல மதக் கலவரத் தூண்டி இரத்தம் குடிக்க சங்பரிவார அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.
இந்தக் கெடு நோக்கத்தை அடையாளம் கண்டு மதுரையின் பன்மைத்துவ பண்பாட்டு அடையாளத்தையும்
சமய நல்லிணக்க மரபையும் உயர்த்திப் பிடிப்போம்!
வெறுப்பை விதைத்து மக்களைப் பிளவுபடுத்த நினைக்கும் இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளைத் தனிமைப்படுத்துவோம்!