
அறப்போர் இயக்கம் 2018 இல் புகார் கொடுத்த சென்னை கோவை மாநகராட்சியில் நடந்த நூற்றுக்கணக்கான கோடி ஊழல் புகாரில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட மற்றவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய ஒரு வருடத்திற்கும் மேலாக தயாராக உள்ளது என்பதும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பதும் ஆனால் ஒரு வருட காலமாக தமிழ்நாடு அரசு நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 8 அரசு பொது ஊழியர்கள் மீது அனுமதி தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது என்பதும் தற்பொழுது தெரிய வந்துள்ளது. நீதிமன்ற விசாரணையின் அனுமதியை ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதித்து அதிமுக அரசின் ஊழலை திமுக அரசு ஏன் காப்பாற்றி வருகிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு விளக்க வேண்டும். இதன் மீதான அனுமதியை உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்கி லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
2014 முதல் 2018 வரை சென்னை கோவை மாநகராட்சி டெண்டர்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு எப்படி ஒப்பந்தங்கள் முறைகேடாக வழங்கப்பட்டது என்பதும் அதில் நடந்த ஊழல் குறித்தும் இதனால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் அறப்போர் இயக்கம் 2018 செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தது. இதன் மீது FIR பதிவு செய்ய அறப்போர் இயக்கம் உயர்நீதிமன்றத்தை நாடி ஆகஸ்ட் 2021 இல் FIR Crime No 16 of 2021 முதல் தகவல் அறிக்கை லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வு குழுவால் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு முன்னாள் அமைச்சர் வேலுமணி உயர்நீதிமன்றத்தை நாடி அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரினார். சென்னை உயர்நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பங்கை லஞ்ச ஒழிப்பு துறை சரியாக விளக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பெயரை மட்டும் முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்கியது. ஆனால் அறப்போர் நிறைய ஆவணங்களை கொடுத்துள்ளது என்றும் முதல் தகவல் அறிக்கையில் முகாந்திரம் உள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடரலாம் என்றும் விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பங்கும் தெரிய வந்தால் அவரை குற்ற பத்திரிக்கையில் சேர்க்கலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் உள்ள மற்ற சில நிறுவனங்கள் 2023 இல் அவர்கள் பெயரை நீக்கக்கோரி நீதிமன்றம் நாடிய போது சென்னை உயர்நீதிமன்றம் அப்பெயர்களை நீக்க அனுமதிக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை அப்பொழுதே குற்றப்பத்திரிக்கை தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. 6 வாரங்களுக்குள் நீதிமன்ற விசாரணைக்கான அனுமதி பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆகஸ்ட் 2023 இல் தீர்ப்பு கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆனால் 25 வாரங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 2024 இல் தொடுத்தது. அப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை தாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் வேலையை துவங்கி விட்டதாக இரண்டு CNR எண்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இதற்குப் பிறகும் பத்து மாதங்களாக இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தற்பொழுது நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கே சி பி இன்ஜினியர்ஸ் சந்திரசேகர் மற்றும் சந்திர பிரகாஷ் இடமிருந்து வழக்கில் இணைத்த கோடிக்கணக்கான பணத்தின் அந்த இணைப்பை மேலும் ஒரு வருட காலம் நீட்டிக்க அனுமதி கோரி இருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 2025-ல் தற்பொழுது வெளிவந்துள்ளது. இதில் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் 8 அரசு பொது ஊழியர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற விசாரணைக்கு தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரி உள்ளது என்ற விவரம் வெளிவந்துள்ளது. மேலும் தீர்ப்பில் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் பொது ஊழியர்கள் மீது இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதை குறிப்பிட்டு நீதிமன்ற விசாரணைக்கான அனுமதிக்காக லஞ்ச ஒழிப்புத்துறை காத்திருப்பதாகவும் தெரிவித்து அந்த இணைப்பின் நீட்டிப்பை அனுமதித்து உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் முதல்முறையாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 2023 லேயே உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது என்று தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை தற்பொழுது வரை நீதிமன்ற விசாரணைக்கு (prosecution sanction) அனுமதி பெற முடியவில்லை என்பது அபத்தமாக உள்ளது. தமிழ்நாடு அரசில் யார் யார் இந்த தாமதத்திற்கு காரணம் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு விளக்க வேண்டும். ஒன்றரை வருட காலத்திற்கு முன்பாகவே குற்றப்பத்திரிகை தயாராக இருந்தும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்ற விசாரணை கோரியும் இன்றுவரை ஊழல்வாதிகளை காப்பாற்றும் நபர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதிமுக அரசின் ஊழல்கள் மீதான நீதிமன்ற விசாரணையை திமுக அரசு அனுமதி தராமல் தாமதிக்கும் நோக்கம் என்ன என்பதை இந்த நேரத்தில் அறப்போர் இயக்கம் கேள்வியாக எழுப்புகிறோம்.
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலில் திமுக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீது மற்றொரு அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு அரசும் லஞ்ச ஒழிப்புத்துறையும் உடனடியாக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் அறப்போர் இயக்கம் உயர்நீதிமன்றத்தை நாடும்.
ஜெயராம் வெங்கடேசன்
ஒருங்கிணைப்பாளர் அறப்போர் இயக்கம்
Ph 9841894700