
அறப்போர் இயக்கத்தின் தன்னார்வலர்கள் துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர், சுனாமி நகர் மற்றும் எழில் நகர் குடியிருப்புகளை கள ஆய்வு செய்தனர். சென்னை நகரத்தின் மையப் பகுதியில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள், இந்த குடியிருப்புகளில் வாழும் மக்களுக்குக் கிடைப்பதில்லை. சென்னையில் பல பகுதிகளில் வசித்துக் கொண்டிருந்த மக்களை துரைப்பாக்கம், பெரும்பாக்கம் போன்ற தொலைவான இடங்களில் குடி அமர்த்திய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதையும் சரியாக அமைத்துத் தரவில்லை.
மிகவும் அடிப்படை தேவைகளான சுத்தமான தண்ணீர், பாதுகாப்பான மின்கம்பிகள் ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகளை அரசுக்கு புகார் மூலம் தெரிவித்துள்ளோம். கண்ணகி நகர், சுனாமி நகர் மற்றும் எழில் நகர் பகுதி மக்களும் கிட்டத்தட்ட 800 பேர் கையெழுத்திட்டு நகர்புற மேம்பாட்டு வாரியத்திற்கு தங்கள் புகாரை தெரவித்துள்ளனர்.
1. தினம் வழங்கப்படாத தண்ணீர் – சுனாமி குடியிருப்பில் மூன்றில் இருந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வழங்கப் படுகிறது. அதுவும் திட்டவட்டமான நேரத்தில் வழங்கப் படாமல், திடீரென திறந்து விடப்படுவதால், வீட்டில் இல்லாமல் வேலைக்கு சென்றிருக்கும் மக்கள் நீரை பிடித்து வைத்துக்கொள்ள இயலாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் அவர்களது தினசரி தண்ணீர் தேவைக்குப் பற்றாக்குறை இருக்கிறது.
2. இரண்டு வீடுகளுக்கு ஒரு மேல்நிலை தொட்டி – சுனாமி நகர் மற்றும் எழில் நகர் பகுதியில் இரண்டு வீடுகளுக்கு ஒரு மேல்நிலை தொட்டிதான் உள்ளது. இதனால் தண்ணீர் திறந்து விடும் பொழுது, ஒருவர் வீட்டில் ஆட்கள் வெளியே சென்றிருக்கும் பட்சத்தில், அவர் 2-3 நாட்களுக்குத் தேவையான நீரை சேமித்து வைக்க முடியாத நிலைக்கு தள்ளப் படுகின்றனர். அதே சமயம், வீட்டில் இருப்பவர் முடிந்த அளவு நீரை சேமித்துக் கொள்கின்றனர். இதனால் ஒரு குடும்பத்திற்கு தேவையான நீரைப் பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு அனைத்து வீடுகளுக்கும் சமமாகக் கிடைப்பதில்லை.
3. தரமற்ற குடிநீர் – சுனாமி நகர் பகுதியில் குடிநீரும் தரமற்ற முறையில் இருக்கிறது. ஓரிரு நாட்கள் தேக்கி வைத்து இருக்கும் நீரில் புழுக்கள் நெளிய ஆரம்பிக்கின்றன.
கண்ணகி நகர் பகுதியில் தண்ணீர் தரம் மோசமாக உள்ளது. இந்த தண்ணீரை அப்படியே உபயோகித்தால் அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏராளமான நோய் தொற்றும் தோல் வியாதிகளும் வருவதாக கூறினர். இதனால் முதல் ஒரு மணி நேரத்திற்கு வரும் நீரை திறந்து விட்டுவிட்டு, அந்த துர்நாற்றம் இல்லாமல் நீர் தெளிவாக வருவது தெரிந்த பிறகே உபயோகிக்க தொடங்குகிறார்கள்.
தரமற்ற தண்ணீர் விநியோகிக்கப்படும் காரணத்தினால் அவர்கள் சமைப்பதற்கும் குடிப்பதற்கும் மினரல் வாட்டர் கேன் தண்ணீரை தனியாக செலவு செய்து வாங்கிக் கொள்ளும் நிலையில் உள்ளார்கள்.
4. குறிப்பிட்ட நேரத்தில் நீர் வழங்காதிருத்தல் – தண்ணீர் வழங்கப்படும் அன்றும் ஒரே குறிப்பட்ட நேரத்திற்கு வழங்காமல் திடீர் திடீரென திறந்து விடப்படுவதால், வேலைக்கு செல்லும் பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.
5. பராமரிக்கப் படாத மேல்நிலை நீர்த்தொட்டி, குழாய் மற்றும் வால்வுகள் – கட்டிடங்களின் மாடியில் வைக்கப்பட்டிருக்கும் நீர் தேக்க தொட்டிகளும் குழாய் வால்வுகளும் உடைந்து கிடைக்கின்றன. இதனால் மோட்டாரின் மூலம் நீர் தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படும் நீர் பெரும்பான்மையாக கசிந்து வீணாக்கப்படுவது மட்டுமில்லாமல் கட்டிடங்களிலும் பெரும் சேதத்தை விளைவிக்கின்றன. பல முறை புகார் கொடுத்தும் எந்தத் தீர்வும் காணப்படவில்லை.
6. பராமரிக்கப் படாத கழிவுநீர் கால்வாய்கள் – மேலும் அங்கு மழைநீர் கால்வாயிலும் கழிவுநீர் கால்வாயிலும் அடைப்பு இருப்பதால் பல நேரங்களில் கழிவு நீர் சாலையில் தேங்கி இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களின் தொல்லையும் மிக அதிகமாக உள்ளது. இதனால் நோய் தொற்று அபாயம் அதிகமாக உள்ளது. மேலும் சாலையில் உள்ள கழிவுநீர் மேன்ஹோல்கள் சிதைவுற்று உடைந்தும் இருக்கிறது. இதனால் அடிக்கடி வாகனங்கள் அந்த உடைந்த மேன்ஹோல்களில் சிக்கிக்கொள்கிறது. உடைந்த நிலையில் காணும் அந்த மேன்ஹோல்கள்களால் குழந்தைகளை வெளியே விளையாட விடவும் மிகவும் பயமாக உள்ளதாகக் கூறினர்.
7. ஆபத்தான மின்கம்பிகள் – எழில் நகர் 1வது பிளாக் தொடங்கி 43வது பிளாக் வரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்சாரகேபிள் வயர் மின் இணைப்பு பெட்டிகள் அனைத்தும் சிதலம் அடைந்து திறந்த வெளியில் சரியாக மூடப்படாமல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக பிளாக் 1ல் சமீபத்தில் சிலருக்கு மின்கம்பிகள் தாக்கி ஷாக் அடித்தும் உள்ளது. ஒரு பெரியவரும் இந்த விபத்தில் சிக்கி பிறகு காப்பாற்றப்பட்டார். மக்கள் மட்டும் அல்லாமல் அங்குள்ள விலங்குகளும் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இவ்வாறாக ஆபத்தான முறையில் மின் கம்பிகள் இருப்பதால் தினம் தினம் குழந்தைகள் விளையாடச் சென்று வீடு திரும்பும் வரை மிகவும் பதட்டமாகவே உள்ளதாக அங்குள்ளவர்கள் கவலை தெரிவித்தனர். தினசரி உயிர் பயத்துடனே வாழும் நிலைமையில் அவர்கள் உள்ளார்கள். மேலும், இவ்வாறு ஷாக் அடிக்கும் சமயத்தில் ஒட்டு மொத்த வீடுகளுக்கும் மின் தடை ஏற்பட்டு, நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை உள்ளதாகவும் கூறினர்.
அறப்போர் கோரிக்கை
இந்த குடியிருப்புகளில் இருந்து சுமார் 800 குடியிருக்கும் மக்கள் கையெழுத்திட்டு தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் சென்னை குடிநீர் பொறியாளர்களுக்கும் மேற்கூறப்பட்ட பிரச்சனைகளை உடனடியாக சீர் செய்து தருமாறு கோரிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அறப்போர் இயக்கமும் நமது கள ஆய்வின் அடிப்படையில், தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், செயலர் காகர்லா உஷா IAS, நிர்வாக இயக்குனர் திரு.அன்ஷுல் மிஸ்ரா, சென்னை மேயர் பிரியா, சென்னை நகர வாழ்விட மேம்பாட்டுக்கு குழுவின் தலைவரான சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.குமரகுருபரன் IAS, மற்றும் சென்னை குடிநீர் வாரியத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்து அவர்களுக்கு தினமும் தரமான, நாள்தோறும் உபயோகப் படுத்தும் அளவிற்கு தண்ணீர் வழங்க கோரி உள்ளோம். மின் கம்பிகளை மக்களுக்கு ஆபத்து இல்லாத வண்ணம் பாதுகாப்பாக வைத்து அதை சீர் செய்யவும் கேட்டு உள்ளோம்.
மத்திய அரசு கூறும் அளவுகோளாவது, நகர்புறத்தில் வாழும் ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொரு நாளும் 135 லிட்டர் தண்ணீர் தரப்பட வேண்டும் என்பது தான். ஆனால் சுனாமி நகரில் வாழும் மக்களுக்கு ஒரு மாதத்திற்கே 7-8 நாட்கள் மட்டுமே நீர் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழிவிட மேம்பாட்டு வாரியத்தின் வலைத்தளத்தில் அவர்களது உயரிய நோக்கமாகக் கூறுவது “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்பது தான். ஆனால் அங்கிருக்கும் மக்கள் சிரிப்பதற்குத் தேவையான எந்த ஒரு அடிப்படை வசதியையும் அரசாங்கம் செய்து தரவில்லை என்பதே உண்மை. இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் அரசு தாமாகவே மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து இருக்க வேண்டும். மாறாக இதனை கோரிக்கைளாக மக்கள் கேட்கும் அவல நிலையில் அரசாங்கம் இவர்களை வைத்து உள்ளது. ஒரே நகரில் வசிக்கும் ஒரு பாதி மக்களுக்கு ஒரு கட்டமைப்பும், மறுபாதி மக்களுக்கு வாழத் தகுதியற்ற கட்டமைப்பும் அமைப்பது எந்த மாதிரியான சமூக நீதி?
இந்த மக்களின் மனுவின் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்களின் அழுத்தம் இங்கு வாழும் மக்களின் தினசரி கவலைகள் மற்றும் பயங்களை களைய உதவும் என்று எதிர்பார்க்கிறோம். புகார்களை இத்துடன் இணைத்துள்ளோம்
ஜெயராம் வெங்கடேசன்
ஒருங்கிணைப்பாளர் – அறப்போர் இயக்கம்
Ph: 9841894700