
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதுகெலும்பு தகவல் ஆணையம். ஆனால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தேங்கி இருக்கும் 48,000 வழக்குகள் குறித்தும், தகவல் ஆணையத்தின் மோசமான செயல்திறன் குறித்தும், அதை சீர் செய்யக் கோரியும், கூடுதல் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட கோரியும் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் தலைமை செயலாளர் , நிதித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், மனித வளத்துறை மேம்பாடு துறை செயலாளர், முதலமைச்சரின் செயலாளர் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணைய தலைமை ஆணையர் அனைவருக்கும் புகார் அனுப்பியுள்ளோம்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஒரு நபர் தகவல் கூறிய பின்பு 30 நாட்களுக்குள் தகவல் கிடைக்காவிட்டால் முதல் மேல் முறையீடு அதே துறையில் செய்யலாம் முதல் மேல்முறையீட்டில் 30 நாட்களுக்குள் (அதிகபட்சமாக 45 நாட்களுக்குள்) தகவல் கிடைக்காவிட்டால் இரண்டாம் வேல்முறையீடு தகவல் ஆணையத்தில் செய்யலாம். ஆனால் இரண்டாம் முறையீடு செய்த பின், எத்தனை நாட்களுக்குள் அவர்கள் வழக்கு தகவல் ஆணையத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற காலகட்டம் சட்டத்தில் இல்லை. தாமதிக்கப்படும் தகவல் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்ட தகவலாகவே கருதப்பட வேண்டும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கேட்ட தகவல் கிடைப்பதில் பெரும்பாலும் பயன் இல்லை. RTI மற்றும் முதல் மேல் முறையீடு போலவே இரண்டாம் மேல்முறையீட்டிலும் 30 நாட்களுக்குள் வழக்கு விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது RTI பயன்படுத்துபவர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.
ஆனால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்திறன் மிக மோசமாக உள்ளது. செப்டம்பர் 2024 படி கிட்டத்தட்ட 48000 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தமிழ்நாடு தகவல் ஆணையம் இணையதளத்தில் இருந்து தெரிகிறது. அதுமட்டுமின்றி அவர்கள் தற்பொழுது விசாரித்து வரும் வழக்குகளை பார்த்தால் பெரும்பாலும் 2022 மற்றும் 2023 விண்ணப்பித்த இரண்டாம் மேல் முறையீடாக உள்ளது.
உதாரணத்திற்கு டிசம்பர் 2024 இல் தமிழ்நாடு தகவல் ஆணையம் மொத்தம் 1317 இரண்டாம் மேல்முறையீடு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கொடுத்துள்ளது. அதில் 8 % வழக்குகள் 2021 அல்லது அதற்கு முன்பாக இரண்டாம் மேல் முறையீடு பதிவு செய்யப்பட்ட வழக்குகள். அதாவது வின்னப்ப்த்தவர்கள் வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பிற்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்துள்ளனர். 47% வழக்குகள் 2022 ல் பதிந்தவை. இதன் அர்த்தம் 47% விண்ணப்பதாரர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் விசாரணைக்காக காத்திருந்துள்ளனர். 33% வழக்குகள் 2023ல் பதிந்தவை மற்றும் இந்த விண்ணப்பதாரர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் விசாரணைக்காக காத்திருந்துள்ளனர். வெறும் 11% விண்ணப்பதாரர்களே 2024 பதிந்தவர்கள் மற்றும் இவர்களுக்கு மட்டுமே ஒரு வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு பதிவு செய்பவர்களுக்கு சராசரியாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஜனவரி 2025-ல் விசாரிக்கப்பட்ட வழக்குகளை பார்க்கும் பொழுது அதுவும் இதே போல் தான் உள்ளது. மேலும் ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை விசாரித்த கிட்டத்தட்ட 14000 வழக்குகளில் 1% க்கும் குறைவான வழக்குகளிலேயே அபராதம், நிவாரணம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை பரிந்துரைத்து உள்ளது தகவல் ஆணையம். தகவல் தராத அதிகாரிகளை தண்டிக்கவும் தகவல் ஆணையம் தயாராக இல்லை என்பது தெரிகிறது.
எனவே இவை அனைத்தும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மோசமான செயல் திறனை குறித்து நமக்கு தெரிவிக்கிறது. இதற்கு மூன்று காரணங்கள் உள்ளது.
1. தகவல் ஆணையர்களின் சோம்பேறித்தனம்:
தகவல் ஆணையர்கள் சராசரியாக ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 10 முதல் 12 வழக்குகளே விசாரித்து வருகின்றனர். அவர்கள் அனைத்து வேலை நாட்களிலும் விசாரணை மேற்கொள்வதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு நாளைக்கு 50 முதல் 100 வழக்குகள் விசாரணை செய்யும்போது ஏன் தகவல் ஆணையர்களால் அது செய்ய முடியவில்லை. இவர்கள் விசாரிக்கும் வேகத்தில் சென்றால் என்றுமே இரண்டு ஆண்டு கால தாமதத்தில் தான் தகவல் ஆணையம் இயங்கும். எனவே உடனடியாக தகவல் ஆணையர்கள் இதை ஒரு அன்றாடம் செய்யும் வேலை போல் பார்க்காமல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதுகெலும்பாக மற்றும் அவர்கள் கடமையாக எண்ணி வேலை செய்வது அவசியம்.
2. இரண்டு தகவல் ஆணையர்கள் ஒரு வருடமாக நியமிக்கப்படவில்லை:
தமிழ்நாட்டில் ஒரு தலைமை தகவல் ஆணையரும் 4 தகவல் ஆணையர்களும் வேலையில் உள்ளனர். இதைத் தவிர 2 தகவல் ஆணையர்கள் காலம் ஒரு வருடத்திற்கு முன்பே முடிந்து இதுவரை அது தமிழ்நாடு அரசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. உச்ச நீதிமன்றம் WP (c) No 436 /2018 வழக்கில் Misc No 1979/2019 இல் ஜனவரி 7, 2025 ஆம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு ஆணையை கொடுத்துள்ளது. அதில் தகவல் ஆணையர் பதவிக்கு யார் யார் விண்ணப்பதாரர்கள் என்பதை ஒரு வாரத்திற்குள் அறிவிக்கவும், தேடுதல் குழுவை ஒரு வாரத்திற்குள் அறிவிக்கவும், அதிலிருந்து ஆறு வாரத்திற்குள் நேர்காணல்களை முடித்து குறுகிய பட்டியலை தயாரிக்கவும் மற்றும் அதிலிருந்து இரண்டு வாரத்திற்குள் மாநில அரசு தகவல் ஆணையரை நியமனம் செய்யவும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு இதை மதிக்கவில்லை.
மேலும் உச்ச நீதிமன்றம் WP (c) No 436 /2018 வழக்கில் தகவல் ஆணையர் தேர்வு வெளிப்படையாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை ஆணையிட்டுள்ளது. அதில் விண்ணப்பதாரர்களின் பட்டியல், விண்ணப்பம் செய்யப்பட்ட தேதி, விண்ணப்பதாரர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் தேடுதல் குழு பற்றிய விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும் என்றும் எதன் அடிப்படையில் தேடுதல் குழு விண்ணப்பதாரர்களில் இருந்து தகவல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குறுகிய பட்டியலை தயார் செய்வார்கள் என்பதனை தெளிவாக விளம்பரத்திலும் இணையதளத்திலும் பதிவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசு ஓய்வு பெற்ற அதிகாரிகளை மட்டுமே தேர்ந்தெடுக்காமல் RTI சட்டத்தில் உள்ளபடி சட்டம் அறிவியல் தொழில்நுட்பம் சமூக சேவை ஊடகம் பத்திரிக்கை நிர்வாகம் போன்ற பலதரப்பட்ட களத்தில் இருந்து தகவல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வழிமுறை கொடுத்துள்ளது.
ஆனால் தமிழ்நாடு அரசு இந்த வழிமுறைகள் எதையும் பின்பற்றுவது இல்லை. கடந்த 2024 ஜனவரியில் தமிழ்நாடு அரசு இரண்டு தகவல் ஆணையர்கள் பதவிக்கு தேடுதல் குழு அமைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டு துறை இணையதளத்திலோ மற்ற இடங்களிலோ விண்ணப்பதாரர்களின் பெயரோ எந்த அடிப்படையில் தேடுதல் குழு தேர்வு செய்வார்கள் என்ற வழிமுறைகளோ தேடுதல் குழு அமைக்கப்பட்ட அரசு ஆணையோ எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னாள் நீதிபதி வாசுகி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜோதி ஜகராஜன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி ஆகியோர் அடங்கிய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு அறிக்கையை மட்டுமே எங்களால் தேடி கண்டுபிடிக்க முடிந்தது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் தேடுதல் குழு தங்களுடைய குறுகிய பட்டியலை அக்டோபர் 2024 லேயே அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி அதிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் தகவல் ஆணையர்களை நியமனம் செய்ய வேண்டிய தமிழ்நாடு அரசு இன்றுவரை எந்த நியமனமும் செய்யவில்லை. தகவல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படை தன்மையும் இல்லை மற்றும் விரைவாகவும் நியமிக்கப்படவில்லை.
3. கூடுதல் 4 தகவல் ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 15 இல் ஒவ்வொரு மாநிலமும் ஒரு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் 10 மாநில தகவல் ஆணையர்கள் வரை நியமிக்கலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு 1 தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் பதவி மட்டுமே அனுமதித்துள்ளது. 48 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ள நேரத்தில் சட்டத்தில் வழிவகை உள்ள மீதி 4 தகவல் ஆணையர்களையும் தமிழ்நாடு அரசு வருகின்ற நிதித்துறை பட்ஜெட்டில் அனுமதித்து நிதி ஒதுக்கி உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. மேலே குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற வழக்கிலேயே மகாராஷ்டிராவில் இதுபோல 40000 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அங்கு ஏன் சட்டத்தில் உள்ளபடி 10 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படக்கூடாது என்றும் இதைக் குறித்து மாநில அரசு உடனடியாக முடிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதே நிலையில் உள்ள தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசு இதை ஊர்ஜிதப்படுத்தி கூடுதலாக நான்கு தகவல் ஆணையர்களுக்கு அனுமதி வழங்கி அவர்களுக்கான நியமனத்தையும் உடனடியாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அறப்போர் இயக்கம் வலுவாக வைக்கிறது.
ஒரு தன்னிச்சையான விரைவான விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்கக்கூடிய தகவல் ஆணையமே தகவல் அறியும் உரிமை சட்டத்தை உயிருடன் வைத்திருக்க முடியும். அதுவே வெளிப்படைதன்மையையும் பொறுப்புடைமையையும் உறுதி செய்ய முடியும். எனவே உடனடியாக தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல் திறனை அதிகரிக்கவும், உச்ச நீதிமன்ற ஆணைப்படி காலியாக உள்ள இரண்டு தகவல் ஆணையர் பதவிகளை வெளிப்படைத்தன்மையுடன் உடனே நியமிக்கவும், கூடுதலாக நான்கு தகவல் ஆணையர் பதவிகளுக்கு அனுமதி கொடுத்து அவர்களை நியமிக்கவும் இன்றைய தினம் அறப்போர் இயக்கம் தமிழ்நாடு அரசுக்கும் மாநில தலைமை தகவல் ஆணையருக்கும் புகார் மனு கொடுத்துள்ளோம். இதன் மீது உடனடி நடவடிக்கை கோருகிறோம்.
ஜெயராம் வெங்கடேசன்
ஒருங்கிணைப்பாளர் – அறப்போர் இயக்கம்.
Ph 9841894700