
தேசியம் குறித்த வரையறையில் சி பிஎம் கட்சி லெனினிய – ஸ்டாலினிய வரையறையை வறட்டுத்தனமாகப் புரிந்து கொண்டு தான் இதுவரை செயல்பட்டு வருகிறது. தற்போது பாசிசம் குறித்த தனது அரசியல் தீர்மானத்திலும் அதே வறட்டுத் தனத்தைப் பேசுகிறது. தற்போது கல்கத்தாவில் நடந்த சிபிஎம் கட்சி அரசியல் குழு, தற்போதைய மோடி அரசாங்கத்தை பாசிசமாக வகைப்படுத்தாமல், அதன் கூறுகள் / பண்புகள் மட்டும் உள்ளதாக தனது வரைவு அரசியல் தீர்மானத்தில் கூறியுள்ளது. தன் மத்திய குழு முடிவை மாநிலக் குழுக்களுக்கு விவாதிப்பதற்கு அனுப்பியிருக்கிறது.
இதற்கு முன்பு நடந்த இரண்டு மாநாடுகளிலும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) பாசிசப் பண்புகளைக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் திட்டம் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள மோடி அரசு பாசிசப் போக்கை வெளிப்படுத்துகிறது என்று வரையறுத்திருந்தது.
ஆனால், இப்போது மோடி அரசாங்கத்தை பாசிசமாக வகைப்படுத்தாமல் இந்திய அரசை நவ-பாசிசத்தின் கூறுகள் உள்ளதாக மட்டும் கூறியுள்ளது. கடந்த பதினொரு ஆண்டுகளில் தடையற்ற மோடி ஆட்சியில், அரசியல் அதிகாரம் பாஜக-ஆர்எஸ்எஸ் கைகளில் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வலதுசாரிகளின் கைகள் உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டும் தீர்மானம், ஆர்எஸ்எஸ்-பாஜக – கார்ப்பரேட் கூட்டணியை பாசிச ஆட்சி என்று வரையறுக்காமல் நவபாசிசத்தின் கூறுகள் மட்டும் இருப்பதாகக் கூறுகிறது.
பாசிசத்தின் வளர்ச்சியும், பாசிச சர்வாதிகாரமும், வெவ்வேறு நாடுகளில் அதனதன் வரலாறு, சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின்படி வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கின்றன. அத்தேசத்தின் தனித்தன்மை மற்றும் சர்வதேச அளவில் அந்நாட்டிற்கு அளிக்கப்படும் அந்தஸ்து, மதிப்பு இவற்றிற்கேற்ப அது வடிவம் கொள்கிறது.” என்கிறார் டிமிட்ரோவ். அதை சிபிஎம் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
2003 ஆம் ஆண்டில் லாரன்ஸ் ப்ரிட் (Laurence W. Britt) என்பவர் தனது “Fascism, Anyone?” (FI, Spring 2003), எனும் நூலில் அளிக்கிற விளக்கங்களாகும். பாசிசத்தை இனங்காண உதவும் 14 பண்புகளை அவர் அந்நூலில் வரிசைப்படுத்துகிறார்.
அதில் நாம் குறிப்பாக, “அனைத்திற்கும் மேலாக ராணுவத்தை முன்னிறுத்துவது.பெண்களை விட ஆண்களே முக்கியமானவர்களென நாசூக்காக பரப்புரை செய்வது; சில நேரங்களில் பகிரங்கமாகவும் செய்வது.
ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது. ஊடகங்கள் மற்றும் அனைத்து விதமான செய்தி தொடர்பு சாதனங்களெல்லாம் மக்களிடம் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்பதை வரையறுக்கத் தொடங்குவது.
மதத்தோடு அரசாங்கத்தினை நெருக்கமான உறவுகளால் பின்னிப்பிணைப்பது. வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களை கண்ணில் வைத்து பாதுகாப்பது.
தொழிலாளர்களை அடக்கியொடுக்குவது; தொழிற்சங்கங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கியெறிந்து அவர்களை எழுந்து நிற்கக்கூட சக்தியற்றவர்களாக மாற்றுவது.
கலைஞர்கள் அறிவுஜீவிகள் மீது வெறுப்பைக் கக்குவது; அறிவியலாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் இவர்களது சொற்களை மதிக்காதீரென மக்களுக்கு அறிவுறுத்துவது ” போன்றவற்றை எடுத்துக் கொண்டால் ஆயுத பலத்தோடு வளர்ந்து வரும் ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் பின்னணியில் இயங்கும் பா.ஜ.க.வும் எப்படி பாசிசப் போக்கோடு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவற்றை விரிவாக ஆய்வு செய்யாமல், எதிர்கால ஆபத்தை உணராமல் தனது அரசியல் தீர்மானத்தை நிகழும் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் வரைவு செய்யுள்ளது.
இலங்கையில் 2024 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் (ஜே.வி.பி) 55 வயதான அனுர குமார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இந்த முற்போக்கு, இடதுசாரி கூட்டணியை சேர்ந்தவர்கள் என்றும் இது நேர்மறையான வளர்ச்சியாகும் என்று தீர்மானம் முன்மொழிகிறது.
இடதுசாரி என்று பெயர் இருப்பதாலேயே அதை இடது சாரிக் கட்சி என்று கருதும் சிபிஎம் – இன் குருட்டுத்தனத்தை என்னவென்று சொல்வது. ஜேவிபி முழுக்க முழுக்க இனவாதக் கட்சி, இன அழிப்பை எதிர்க்காத கட்சி, புத்தபிக்குகளின் ஆதரவு பெற்ற கட்சி.
மொத்தத்தில் ஜே.வி.பி. ஒரு சிங்கள பேரினவாத சமூக பாசிச இயக்கமாகச் சீரழிந்து போன கட்சி. அக்கட்சியின் ஆட்சியை முற்போக்காக பார்க்கும் குருட்டுத் தனத்தை சி.பி.எம் செய்கிறது.
சிங்களம் நடத்திய தமிழ் இனப்படுகொலையை புரிந்து கொள்ள முடியாத இந்த குருட்டுக் கட்சியால் பாசிசத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும்.
க.இரா. தமிழரசன்