இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்-3
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றலாகி தற்பொழுது மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் (பொறுப்பு) தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி முரளிதரன் கடந்த மார்ச் 27 அன்று பிறப்பித்த ஆணை, தற்போதைய மோதல்களுக்குக் தூண்டுகோலாக அமைந்துவிட்டது.
“மெய்திக்களை ” பழங்குடிகளாக அறிவிப்பதன் மூலமாக மெய்திக்களின் வாக்குகளைக் கைப்பற்ற பாஜக செய்து வரும் அரசியல் முயற்சிகளுக்குச் சாதகமாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
18-04-2022 அன்று, மெய்தி இன மக்களை பழங்குடிப் பட்டியலில் சேர்க்கக் கோரி, மணிப்பூர் அரசின் தலைமைச் செயலர் உட்பட 12 அதிகாரிகளுக்கு நகலுடன் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சரிடம் மெய்தி இன மக்கள் ஒரு வேண்டுகோளை சமர்ப்பித்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
31.5.2022 அன்று, பழங்குடியினர் விவகார அமைச்சகம், மணிப்பூர் அரசின் செயலாளருக்கு மேற்படி பிரதிநிதித்துவக் கடிதத்தை அனுப்பியது. எவ்வாறாயினும், மேற்படி பிரதிநிதித்துவக் கடிதத்திற்கு பதிலளித்த அரசு பழங்குடி பட்டியலில் மெய்தி மக்களைச் சேர்ப்பது குறித்து பதில் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசின் பரிந்துரை நிலுவையில் உள்ளது என்பது தெளிவாகிறது என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை அரசு மீறுகிறது என்று மனுதாரர்களின் சமர்ப்பிப்புகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தின் 29-05-2013 தேதியிட்ட கடிதத்திற்கு அரசு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, அரசியலமைப்பின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் மைதேய் சமூகத்தை சேர்ப்பது தொடர்பான பிரச்சினை சுமார் பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும் கூறிய மணிப்பூர் உயர் நீதிமன்றம், ” மெய்தி இன மக்களை சேர்ந்தவர்கள் பழங்குடி மக்கள் என்று மத்திய அரசுக்கு மணிப்பூர் மாநில அரசு நான்கு வாரங்களுக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது
மெய்தி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கும் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு எவ்வித அரசியல் அடிப்படையும் இல்லாமல் 10 ஆண்டு காலக் கோரிக்கை என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆணை பிறப்பித்தது மாபெரும் தவறு. மணிப்பூர் உயர் நீதிமன்றம் இந்த விசயத்தில் அடிப்படை விதியை, அதாவது அரசியலமைப்பின் 342 வது பிரிவை முற்றிலுமாக புறக்கணித்ததன் விளைவை மணிப்பூர் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எல்லாப் பாகுபாட்டையும் தடை செய்கிறது.
அனைத்து குடிமக்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் அதே வேளையில், ‘சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு’ இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான சிறப்பு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பின்தங்கியுள்ள சமூகங்களை சுரண்டலுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்வதற்கும் அவர்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் கலாச்சார நலன்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குறிப்பாக பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக இடஒதுக்கீடு நடைமுறையில் இன்றும் உள்ளது. எனவே, இட ஒதுக்கீடு என்பதை வறுமை ஒழிப்புத் திட்டமாகப் புரிந்து கொள்ளக் கூடாது. எனவே தான் இட ஒதுக்கீடு சம்பந்தமான எந்த முடிவுகளாக இருந்தாலும் (இணைப்பது / நீக்குவது) அந்த சமூக மக்களின் சமூக,அரசியல், பொருளாதாரப் பின்புலங்களை ஆய்வு செய்யாமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.
இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இணைப்பது அல்லது நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டிய இடம் எது என மகாராஷ்டிரா மாநிலம் vs மிலிந்த் (2000) தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் திட்டவட்டமாக இது குறித்து விளக்கியுள்ளது.
1949 இந்திய அரசியலமைப்பில் 342(1) பிரிவு (1) எந்த ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், அது ஒரு மாநிலமாக இருந்தால், அதன் ஆளுநருடன் கலந்தாலோசித்த பிறகு, பொது அறிவிப்பின் மூலம், பழங்குடியினர் அல்லது பழங்குடிச் சமூகங்கள் அல்லது பழங்குடிச் சமூகங்களுக்குள் உள்ள பகுதிகள் அல்லது குழுக்களைக் குடியரசுத் தலைவர் குறிப்பிடலாம் என்கிறது.
அதே நேரம், சட்டப்பிரிவு 342(2)ன்படி குடியரசுத் தலைவர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள “பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பட்டியலில் சேர்க்க அல்லது விலக்க” நாடாளுமன்றம் மட்டுமே முடியும். எனவே, ஒரு சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் என்று அறிவிக்க அல்லது பரிசீலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவாகிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் பழங்குடியினப் பட்டியலை உருவாக்க வேண்டும் அல்லது ஏதேனும் அதில் சேர்க்க வேண்டும் என்றால் அது பாராளுமன்றத்தால் செய்யப்பட வேண்டும், ஜனாதிபதியால் அல்ல என்று பேசியுள்ளார். ( அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், செப்டம்பர் 17, 1949).
நீதிபதி முரளிதரனின் உத்தரவு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சால் விவரிக்கப்பட்ட மேற்கண்ட கோட்பாட்டைக் கொஞ்சம் கூட மதிக்காமல், மெத்தி இன மக்களின் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்புலங்களை ஆராயாமல், அரசியல் உள்நோக்கங்களை கண்டும் காணாமல் 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது.
மார்ச் 27-ம் தேதி மணிப்பூர் நீதிமன்றம் அளித்த உத்தரவு “அருவருப்பானது” என்று கூறிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், “உயர்நீதிமன்ற உத்தரவு தவறானது என்று நான் உங்களுக்கு (வழக்கறிஞர்களுக்கு) சொல்கிறேன். மேலும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தியது. மணிப்பூர் உயர் நீதிமன்ற உத்தரவு முற்றிலும் தவறானது என்றும் மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரனை உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் செய்தது.
உயர்நீதிமன்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டாலும் அதனால் உருவான வன்முறை இன்று வரை நின்றபாடில்லை.
மணிப்பூரின் மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு இனக் குழுக்களுக்கு இடையே பரப்பிவிடப்பட்ட இந்த வெறுப்பு வன்முறை, கலவரங்களுக்குப் பின்னால் நீதிமன்ற உத்தரவு மட்டுமல்ல… இன ஒடுக்குமுறை , மத வெறுப்பு, அரசியல், பொருளாதார வளச் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
க.இரா. தமிழரசன்
தொடரும்………