இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர் – 4
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கின் கீழ் உள்ள 36 முதல் 51 வரை பிரிவுகள் மொத்தமாக அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாட்டுகள் (Directive Principles of State Policy) என அழைக்கப்படுகின்றன.
இக்கொள்கைகளின் படி சட்டமியற்றுவது அரசின் கடமையாகும். 46 ஆவது பிரிவில் இட ஒதுக்கீடு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
” சமுதாயத்தின் நலிந்த பிரிவினர், குறிப்பாக பட்டியலின, பழங்குடியின வகுப்பினரின் கல்வி, பொருளாதார நலன்களில் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி ஊக்குவிப்பதுடன், சமூக அநீதியிலிருந்தும், அனைத்து வகை சுரண்டல்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.”
அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாட்டில் ஒன்றான 46 ஆவது பிரிவைப் பின்பற்றி, அரசியலமைப்புச் சட்டத்தின் 15, 16 ஆவது பிரிவுகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடுகளை வழங்குகிறது.
இந்தியா குடியரசு ஆன பிறகு இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள் சட்டப்பிரிவு 341 மற்றும் பிரிவு 342 கீழ் முறையே பட்டியல் சாதிகள் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) என வகைப்படுத்தப்பட்டபோது, மெய்தி சமூகம் அவர்கள் சாதி இந்துக்கள் என்பதால் அவர்கள் எதிலும் சேர்க்கப்படவில்லை.
அந்த நேரத்தில், பழங்குடி பட்டியல் இல்லாதது குறித்து அவர்கள் கவலைப்பட வில்லை. அது அவர்களுக்குத் தேவைப்படவும் இல்லை. அதை விட கூடுதலாக தங்களை ஆதிக்க சமூகமாகக் கருதினர்
வைஷ்ணவத்தை ஏற்றுக்கொண்ட பிறகு,
தாங்கள் தூய்மையான இந்துக்கள் என்று கருதினார்கள். பழங்குடியினரை தூய்மையற்றவர்கள் என்று இழிவாகப் பார்த்தனர். அவர்களை ‘ஹாவோஸ்’ என்று மறைமுகமாக இழிவுபடுத்தும் வகையில் அழைத்தனர். மெய்திகளில் பழைய நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களான சனாமஹி மற்றும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களை இழிவாகக் கருதினர் , அவர்களிடம் தீண்டாமையைக் கடைபிடித்தனர். மெய்திகளில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுபவர்கள் மற்றும் பழைய சனாமாஹியைப் பின்பற்றுபவர்கள் எஸ்சி என வகைப்படுத்தப்பட்டனர்.
1990 களில் மண்டல் கமிஷன் அறிக்கை அமல்படுத்திய பிறகு, மெய்திக்களுக்கு ஓபிசி தகுதி வழங்கப்பட்டது, இதனால் அவர்கள் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெற தகுதி பெற்றனர். மணிப்பூரில், பழங்குடியிருக்கான ஒதுக்கீடு 31% ஓபிசிகள் 17% இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர், மேலும் தாழ்த்தப்பட்டோருக்கு 2% இடஒதுக்கீடு உள்ளது.
மெய்தி சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரில் உள்ள மெய்தி பிராமணர்கள் ( பாமன்ஸ் ) மற்றும் மெய்தி ராஜ்குமார் ஆகியோரும் மத்திய ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் கிரீமி லேயர் அல்லாத ஓபிசி களாக இருந்தால் மட்டுமே அவர்கள் இடஒதுக்கீட்டைப் பெற முடியும். தற்போதைய இடஒதுக்கீட்டுத் திட்டத்தின்படி, மெய்திக்கள் ஏற்கனவே SC (பட்டியலிடப்பட்ட சாதி), OBC (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) மற்றும் EBC (பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்) பிரிவுகளின் கீழ்
அரசு நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் வேலை இடஒதுக்கீடு பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர்
இதற்குப் பிறகும் மெய்திகள் தங்களுக்கும் பழங்குடி பட்டியலில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதில் எந்த நியாயமும் இல்லை. ஒரு வேளை அவர்களை அப்படி பட்டியலில் இணைத்தால் என்ன நடக்கும் ?
தற்போது, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 3.78% இருக்கும் மெய்தி இன எஸ்.சி களுக்கு மாநில அளவிலான வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 2 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மெய்தி இன தாழ்த்தப்பட்டோரை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதன் மூலம், அவர்கள் மட்டும் அனுபவிக்கும் 2 விழுக்காடு இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் வழங்கப்பட்டு இடஒதுக்கீடு நீர்த்துப்போகும். ஆதிக்க சாதி இந்துக்களுடன் போட்டியிட முடியாமல அவர்கள் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
பெரும்பான்மையான மெய்திகள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மாநில அளவிலான வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 17% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இருப்பினும், மெய்தி பிராமணர் மற்றும் ராஜ்குமார் சமூகங்களில் கணிசமான எண்ணிக்கையை உள்ளடக்கிய ஒபிசி களின் கிரீமி-லேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை. அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அவர்களுக்கு எஸ்டி பிரிவில் இட ஒதுக்கீடு கிடைக்கும்.
தற்போது உள்ள இடஒதுக்கீட்டினைப் பயன்படுத்தியே மெய்தி சமூகத்தில் உள்ள மேலாதிக்கப் சமூகங்கள் விளையாட்டு, அரசியல், வணிகம், அரசு வேலைகள் மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவேளை அவர்கள் பழங்குடிகளில் சேர்க்கப்பட்டால் உண்மையான பழங்குடிகள் மேலும் கீழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஏற்கனவே பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் நிரப்பப்படவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
ஏற்கனவே, இடஒதுக்கீடு விசயத்தில், மணிப்பூரின் பழங்குடியினர் இரண்டு பெரிய காரணங்களுக்காக ஏமாற்றமடைந்துள்ளனர் – ஒன்று , அரசு வேலைகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் அவர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு மற்றும் அவர்களின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ற வகையில் நிரப்பப்பட இல்லை. இரண்டு, மாநில மொத்த மக்கள்தொகையில் பாதியாக உள்ள மெய்தி சமூகம் 80% க்கும் அதிகமான அரசாங்க வேலைகள் மற்றும் இடங்களைப் பெற்றுள்ளன.
ராஜஸ்தானில் முன்னேறிய மக்கள் பிரிவினரான மீனாக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது ஏற்கனவே நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை கேலிக்கூத்தாக்கியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் முடிவுகளின் மூலம், இந்த ஒற்றை சமூகம் அனைத்து பழங்குடியினர் இடஒதுக்கீடு பதவிகளிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு மற்றும் அவர்களின் மாநிலத்தில் உள்ள வேலைகளில் பாதியை கைப்பற்றி விடுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எனவே, மெய்திகளைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்பட்டால் மணிப்பூர் மாநிலத்திலும் இதேபோன்ற சூழ்நிலை உருவாகி, தற்போதைய பழங்குடியினர் இட ஒதுக்கீட்டு பலன்களை இழக்க நேரிடும், மேலும் . அவர்களின் கோரிக்கைக்கு இணங்குவது, நாடு முழுவதும் உள்ள பல இடங்களில் இந்த கோரிக்கை எழுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இது பழங்குடி சமூகத்திற்கு மாபெரும் அழிவை ஏற்படுத்தும்.
1965 ஆம் ஆண்டு லோகுர் கமிட்டி பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் எந்தவொரு சமூகமும் ஐந்து நிபந்தனைகளைக் கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும் என்கிறது. இந்த அளவுகோல்களில் பழமையான குணாதிசயங்கள், தனித்துவமான கலாச்சாரம், புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தல், சமூகத்துடன் பெரிய அளவில் தொடர்பு கொள்ள முடியாத நிலை மற்றும் பின்தங்கிய நிலை ஆகியவை அடங்கும். இவை எதுவும் மெய்தி சமூகத்திற்குப் பொருந்தாது. எனவே, மெய்தே சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை , சட்டப்படி செல்லத்தக்கது அல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அந்த உள்நோக்கம் நிலத்தை, மதத்தை அடிப்படையாகக் கொண்டது.
க.இரா. தமிழரசன்
(தொடரும்)