இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 7
மணிப்பூரின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்திய முக்கியமான நிகழ்வு மெய்திக்கள் வைணவ இந்துக்களாக மதம் மாறியது தான். மேலும், திட்டமிட்டு சமஸ்கிருதமயமாக்கல் பள்ளத்தாக்கு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. மொழியியல் மற்றும் இனரீதியாக மெய்திக்கள் தங்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை (ஆரிய அடையாளத்தை) வழங்கிக் கொண்டனர்.
மெய்திகள் இந்துகளாக மாறிய பின்னால் மணிப்பூரிகளின் புனித நூலான புயாஸ் எரிக்கப்பட்ட சம்பவம் மணிப்பூர் சமூகத்தின் கலாச்சாரம், மொழி, மதம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை கடுமையாகத் தாக்கியது.
தூய்மை மற்றும் தூய்மையின்மை பற்றிய கருத்துக்கள் இந்து மதத்துடன் தொடர்பு கொண்டு உருவானது. இது மணிப்பூர் சமூகத்தின் மக்கள் பிரிவுகளை கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியது.
இந்து மதம் வருவதற்கு முன்பு, மணிப்பூரில் உள்ள மக்கள் புனித இடங்கள், புனித நாட்கள் மற்றும் புனித நிகழ்வுகள் என்ற கருத்தை கொண்டிருந்தனர். ஆனால், அது, தீண்டாமை அல்லது சாதி அமைப்பிலிருந்து வேறுபட்டது. மெய்தி சமூகத்தில் சாதி இருப்பு ஒரு போதும் இருந்ததில்லை. மணிப்பூர் மக்கள் இந்த சாதிய முத்திரையை விரும்பியதில்லை.
இந்து மதம் மணிப்பூரில் நுழைந்தவுடன் அதோடு சாதி வந்தது, சாதி இல்லாத மெய்தி சமூகம் இந்து மதத்திற்கு மாறியதன் மூலம் தங்களை இந்து சாதிய படிநிலையின் சத்ரியராக அறிவித்துக் கொண்டது. அவர்கள் சிங் என்ற குடும்பப்பெயரைச் சூட்டிக் கொண்டனர்.
சாதி அடுக்கின் மேல் நிலையில் பஹ்மான்கள் (பிராமணர்கள்) இருந்தனர், பஹ்மான்கள் சடங்குகளைச் செய்யும் பூசாரிகளாக இருந்தனர் அல்லது மெய்தி திருவிழாக்கள் மற்றும் சடங்கு விருந்துகளின் போது உணவு தயாரிக்கும் சமையல்காரர்களாக இருந்தனர். பிராமணர்கள் மணிப்பூர் பெண்களை திருமணம் செய்து அதன் வழித்தோன்றல்களை பிராமணர்களாக மாற்றினர்.
இந்து அல்லாத மலைவாழ் மக்கள் சாதிக்கு வெளியே உள்ள மக்களாக அல்லது தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர். அதாவது ‘முன்னோர்களின் வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்தவர்கள்.
மெய்திகள் இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு புனிதம் என்பது சாதியுடன் கலந்து தீண்டாமை நடைமுறைக்கு வந்தது. தீண்டத்தகாதவர்கள் சமைத்த உணவை பிராமணர்கள் சாப்பிடுவது தடை செய்யப்பட்டது.
பள்ளத்தாக்கு மக்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையிலான திருமணங்கள் மாநிலத்தில் ஒரு சாதாரண நடைமுறை. இது காலங்காலமாக நடந்து வருவது. ஆனால், மெய்திகள் இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பழங்குடியினப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது நிறுத்தப்பட்டது. அதையும் மீறி மெய்தி ஆண்கள் பழங்குடிப் பெண்களைத் திருமணம் செய்தால் தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டனர். அதனால் மெய்தி ஆண்களுக்கு தீண்டாமை கழிக்க சுத்திகரிப்பு விழா நடைபெற்றது.
ஒரு பழங்குடிப் பெண்ணை மணக்கும் மெய்திகள் இரண்டு வழிகளில் சுத்திகரிப்புச் சடங்கு செய்ய வேண்டியிருந்தது. பழங்குடியினப் பெண்களிடம் மாட்டுச் சாணத்தை தண்ணீர் அல்லது பசுவின் சிறுநீரில் கலந்து குடிக்கச் சொல்லும் பழைய சுத்திகரிப்பு நடைமுறை அல்லது பவித்ரா சோரன் என்று அழைக்கப்படும் பிராமணர்களின் பாதங்களைக் கழுவி சேகரிக்கப்படும் நீரை பழங்குடிப் பெண்களிடம் குடிக்கச் சொல்வது மற்றொரு நடைமுறையாகும்.
சுத்திகரிப்பு விழா நடைபெறும் வரை, மெய்தே ஆணும் பழங்குடிப் பெண்ணும் அசுத்தமாகவே இருக்கிறார்கள் என்று கருதப்பட்டது. இப்படி,மணிப்பூரில் தீண்டாமை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது.
இதற்கு கி.பி.15 முதல் 19ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், மணிப்பூரில் குடியேறிய பார்ப்பனர்கள் தான் அடிப்படைக் காரணமாக இருந்தார்கள். அவர்களது ஆக்கிரமிப்புகள் மூலமாக மணிப்பூர் ஆரிய பார்ப்பனிய சனாதனம் வேரூன்றிய நிலமாக மணிப்பூர் மாறியது. இதன் பிறகு, பிற பழங்குடிகளுடனான உள் முரண்கள் பார்ப்பனர்களால் கூர்மை படுத்தப்பட்டது
மணிப்பூரில், அவர்கள் கோவிலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தினர், சடங்குகள் செய்தனர் மற்றும் மாண்டோப் வளாகம் என்று அழைக்கப்படும் கோவிலில் வாழ்ந்தனர். மெய்தி சமுதாயத்தில் திருவிழாக்கள் மற்றும் எந்தவொரு விருந்துக்கும் உணவு சமைப்பது அவர்களின் முதன்மை வேலை. அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட ஊதியம் அதிகமாக வழங்கப்பட்டது.
மெய்தி மத நடைமுறைகள் மைபாஸ் மற்றும் மைபிஸ் பூசாரிகளுக்கு உயர்ந்த இடங்களைக் கொண்டிருந்தன. அவை பிராமண இனத்திற்கான தூய்மையான இரத்தத்தைப் பராமரிக்கும் நடைமுறைகளைப் போலல்லாமல் இருந்தன. மைபாஸ் (ஆண் பூசாரிகள்) மற்றும் மைபிஸ் (பெண் பூசாரிகள்) ஆகியோரின் பங்கு பிறப்பால் வகைப்படுத்தப்படவில்லை. புங்கா, சேகி மற்றும் சாலையின் ஒவ்வொரு உறுப்பினரும் மைபா அல்லது மைபி ஆகலாம்.
பெண் பூசாரிகளின் தீர்க்கதரிசன பாத்திரம் மெய்தி சமூகத்தில் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இது மெய்தி மத மற்றும் சமூக அமைப்பில் பெண்களுக்கு உயர்ந்த இடத்தைப் பரிந்துரைக்கிறது.
இந்து மதம் தோன்றுவதற்கு முன்பு பெண்களும் ஆண்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை. “சதி” மற்றும் “பர்தா” அமைப்புகள் அறியப்படவில்லை. முந்தைய காலங்களில் பொதுவான பலதார மணம் குறைவாகவே உள்ளது. குழந்தை திருமணம் இல்லை. விதவை மறுமணம் சமூக ரீதியாக அனுமதிக்கப்படுகிறது. திருமணங்களில் வரதட்சணை ஒரு முக்கிய அம்சமாக இல்லை. இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட பிறகு குடும்பங்களில் ஆணாதிக்கம் தொடங்கிவிட்டது.
மெய்திக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு தனிக் கடவுள்களை பிரித்து தங்கள் மேலாதிக்கத்தை நிறுவினர்.
ராமாயணத்தை எழுதிய வால்மீகி, துப்புரவுப் பிரிவினருக்குக் கடவுளாக ஆக்கப்பட்டார். இக்கோயில்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மட்டுமே. உயர் சாதியினர் யாரும் அங்கு போக மாட்டார்கள். அதே போல் இறந்த விலங்குகளின் தோலை உரிப்பதைத் தொழிலாகக் கொண்ட சாமர் சமூகத்தினருக்கு சானி தேவ் ஒரு கடவுள். சனிதேவ் சனிக்கிழமைகளில் மட்டுமே வழிபடப்படுகிறார். இந்து வழிபாட்டு முறைகளில் எந்த ஒரு நல்ல வேலைக்கும் சனிக்கிழமை மோசமான நாளாகக் கருதப்படுகிறது. அப்படி சானி தேவ் அசுத்தமான கடவுளாக கருதப்படுகிறார். இப்படி எல்லா வகையிலும் இந்து மதம் மணிப்பூரிகளை குறிப்பாக, மெய்திகளைப் பிரித்தது.
மெய்திகள் இந்துக்களாக மாறுவதற்கு முன்பு அவர்களின் சொந்த வளமான மத வரலாற்றைக் கொண்டிருந்தனர். ‘சனாமாஹி’ என்கிற பழங்குடி வழிபாட்டு முறையை பின்பற்றி வந்துள்ளனர்.
“சனாமாஹி” என்பது முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மூதாதையர் வழிபாட்டு முறையாகும். சனாமஹி நூல்கள் மெய்தி மொழியில் எழுதப்பட்டவை. இவை “புயா” என்று அழைக்கப்படுகின்றன. அவர்கள் இயற்கையை பல்வேறு வடிவத்தில் பல வடிவங்களில் கடவுள்களாக வணங்கினர்
மெய்திக்கள் இந்துக்களாக மாறுவதற்கு முன்பு , ஷிதாபா மாபு (அழியாத உரிமையாளர்), பகாங்பா, லைனிங்தௌ சனாமஹி, இமா லீமரேல் ஷிதாபி,அபோக்பா, இமோயினு, பந்தோய்பி (வீரம் மற்றும் வீரத்தின் தெய்வம் மற்றும் போர்), மார்ஜிங் (விளையாட்டு கடவுள்), தாங்ஜிங் மற்றும் வாங்ப்ரென் (மழையின் கடவுள்) மற்றும் உமங்லாய்களையும் (வனக் கடவுள்கள்/ஆவிகள்) வழிபட்டனர்.
நெருப்பு, சூரியன், சந்திரன், சொரரென் (வானம்), காற்று போன்ற இயற்கையையும் தங்களது குடும்ப முன்னோர்களையும் கடவுள்களாக வழிபட்டனர்.
இந்து மதம் மணிப்பூரில் உருவாவதற்கு முன்பு, கலாச்சார ரீதியாக மெய்திகள், மலைவாழ் மக்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள் அல்ல என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இன்றும் மலைவாழ் மக்களுக்கும் மெய்திகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் மற்றும் உறவுகளின் அடையாளங்கள் காணப்படுகின்றன.
மெய்திகள் மற்றும் மலைவாழ் மக்கள் குழுவிற்கும் இடையே உள்ள ஒற்றுமையின் மற்றொரு பகுதி லோயிஸ் மத்தியில் காணப்படுகிறது, அவர்கள் அசல் மெய்திகளாக இருந்ததாக நம்பப்படுகிறது. இன்று வரை, அவர்கள் பன்றிகளை வளர்க்கிறார்கள், இறைச்சி சாப்பிடுகிறார்கள் மற்றும் அரிசி மற்றும் மது குடிக்கிறார்கள், மெய்திகள் வைணவ இந்துகளாக மாறிய பின்பு மலைவாழ் மக்கள் தூய்மையற்றவர்கள் அல்லது மாசுபட்ட மக்களாகக் கருதப்பட்டனர், அதே சமயம் பள்ளத்தாக்கு மக்கள் தூய்மையானவர்கள் அல்லது இருமுறை பிறந்தவர்கள் என்று தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்தப் பிளவு தான் மெய்திக்களுக்கும் குக்கிகளுக்குமான பெரும் பிளவு. அது இன்று அரசியலில் வன்முறையாக வெளிப்படுகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் கிறித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விளைவாக மாநிலத்தில் உள்ள மலைவாழ் பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறினர். இது அவர்களுக்குள் மேலும் பிரிவினையை உருவாக்கியது. அது இன்று சங்பரிவார் கும்பல்களின் இந்துத்துவ அரசியல் பகடைக்காயாக மாறி நிற்கிறது.
இன்று குக்கிகள் அந்நியர்கள், வந்தேறிகள் என்று மெய்திகளை குக்கிகளுக்கு எதிராகப் போராடும் அளவுக்கு கொண்டு போய் விட்டுள்ளது.
(தொடரும்)