உக்ரைனில் நடக்கும் அழிவுகளுக்கு உலகம் பொறுப்பேற்க வேண்டும்,
இதற்கு மேல் இழப்பதற்கு என்னிடம் உயிர்களும் இல்லை, உணர்வுகளும் இல்லை, இதற்கு மேல் எந்தவித ராஜதந்திர நகர்வுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை, என் நாட்டின் மீது அழிவை திணிக்கும் எந்த அனுசரணைகளும் தேவையில்லை, எதற்கும் உதவாத ஐ.நா மன்றம் கலைக்கப்பட வேண்டும் என நிதர்சனத்திற்கு இறங்கி வந்திருக்கிறார் உக்ரைனிய அதிபர் செலன்ஸ்கி.
ரஷ்யா இக்கட்டான சூழலில் சிக்கியிருப்பதென்பதாக பலர் ஆனந்த கூத்தாடுகின்றனர். ரஷ்யாவை காகிதப்புலி என்னும் அளவிற்கெல்லாம் பலரும் பலவிதமான கருத்துக்களை எழுதி தள்ளுகின்றனர். ஏனென்றால் ரஷ்யா ஒரு ஆக்கிரமிப்பு போரை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதால். ஆனால் ரஷ்யாவிற்கோ அது தற்காப்புப் போர். அமெரிக்கா தொடங்கி மேற்குலகம் முழுவதும் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறார்கள். உக்ரைன் எதுவும் செய்யவில்லை, ஆனால் ரஷ்யா திடீரென்று படையெடுத்து வந்துவிட்டது என்னும் ரகத்தில் BBC துவங்கி CNN வரை நியாய, அநியாயங்களை அலசி உலகத்தின் முன் அப்படியே வைத்துவிட்டனர். ஏனெனில் அவர்கள்தான் என்றும் நியாயவான்கள்.
இந்தப் போருக்கு காரணமான வரலாற்று சூழலை ஆராய்வதற்கு பலருக்கு நேரமில்லை. பனிப்போர் காலத்திய அரசியல் முடிவுக்கு வந்தபின், நேட்டோ கிழக்கு ஐரோப்பாவிற்கு விரிவாக்கப்படாது என்னும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால் அந்த ஒப்பந்தங்கள் தொடர்ச்சியாக மீறப்பட்டு நேட்டோ விரிவாக்கப்பட்டுக் கொண்டே வந்தது.
ரஷ்யாவின் எல்லைப்புறத்தினில் உள்ள நாடுகளும் நேட்டோவில் இணைவதற்கு தூண்டப்பட்டு வந்தன. இப்போது ரஷ்யாவின் மேற்கில் உக்ரைன் மட்டும்தான் மீதம். ரஷ்யா பலவீனமான நிலையில் இருந்ததை பயன்படுத்தி அமெரிக்காவும், மேற்குலகும் இதனை சாதித்தது. மேலும் உக்ரைனையும் இந்த சூழலுக்குள் கொண்டுவர அமெரிக்கா போட்ட திட்டம்தான் இந்தப் போருக்கான பின்னணி.
கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஆட்சியில் இருந்த கம்யூனிச ஆதரவாளர்களை அகற்றி அந்த இடத்தில் முதலாளித்துவ ஆதரவாளர்களையும், கம்யூனிசத்தை பெரும்பகையாக நினைப்பவர்களிடமும், நாஜிக்களை ஆதரித்து வந்தவர்களையும் ஆட்சியில் ஏற்றி அழகு பார்த்தன அமெரிக்கா மற்றும் மேற்குலக முகாமை சேர்ந்த நாடுகள்.
ராணுவ ரீதியாக, பொருளாதார ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ரஷ்யாவிற்கு எல்லாவித தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தன இந்த நாடுகள்.
மீண்டும் செலன்ஸ்கியிடம் வருவோம்.
நாட்டின் முக்கிய நகரங்களையும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும், எல்லாவற்றையும் விட மதிப்புமிக்க பல்லாயிரக்கணக்கான மக்களையும் பலிகொடுத்த பின் இப்போதுதான் அவருக்கு உண்மை புரிய துவங்கியிருக்கிறது.
ரஷ்யாவிற்கு இழப்பு ஏற்படுத்திவிட்டோம் என விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்கும் அதே நேரத்தில், இழப்பு ஏதும் இல்லாமலேயே உக்ரைன் செயலாற்றுகிறதா என்ன?. 3000 வீரர்களை இழந்து 20000 ரஷ்ய வீரர்களை கொன்று விட்டோம் எனக்கூறுகிறது உக்ரைன் அரசு. ரஷ்யாவோ எங்களுடைய இழப்பு 1500- க்குள்தான் என்கிறது.
ரஷ்யாவின் அளவிற்கு அதனால் இந்த இழப்புகளை தாங்கிக் கொள்ள இயலும், மேலும் அது தன்னுடைய தவறை திருத்திக்கொள்ளவும் செய்யும். ஆனால் உக்ரைன் என்ற நாடே சிதைந்துக்கொண்டிருக்கிறதை பற்றி கவலைப்படாமல் வீரவசனங்கள் பேசப்பட்டு வருகின்றன.
ரஷ்யா இப்போது தன்னை நீண்ட கால யுத்தத்திற்கு தயார்படுத்திக்கொண்டிருக்கிறது.
தெற்கு உக்ரைன் நகரமான மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது என்று கூறுகிறார்கள். வெல்லக்கூடிய போர் எது? வெல்ல முடியாத போர் எது? என்பது ஆட்சியாளர்களுக்கு புரிய வேண்டும். முதல் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் ஜெர்மனியுடன் போரை தொடர வேண்டும் என முழங்கிய தேசபக்தர்களுக்கு மத்தியில் லெனின் சமாதானத்திற்கு செல்லுங்கள், இல்லையேல் இதைவிட மோசமான உடன்படிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றார். பின்னர் அவர் சொன்னபடியே நடந்தது.
உக்ரைனில் அப்பாவி மக்கள் பலியாவதை பற்றி எல்லோரும் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவும், மேற்குலகமும் அதிகமாக கவலைப்படுகிறது. பாலஸ்தீனம், ஏமன், ஈராக், சிரியா, லிபியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான் என்று எண்ணற்ற நாடுகளில் அப்பாவி மக்கள் இல்லையா?
யூகோஸ்லாவியா என்றொரு நாடு இருந்ததே, இப்போது அது எங்கே? உலகில் எந்தப்பகுதியில் போர் மூண்டாலும் அதற்குப் பின் அமெரிக்காவும், மேற்குலகும் இருக்கும். அவர்களுடன் இணங்காதவர்களை அழித்துவிட்டுத்தான் அவர்களுக்கு மறுவேலை.
இவர்கள் கொடுத்த ஊக்கத்தில்தான் உக்ரைன் எண்ணற்ற ரஷ்ய எதிர்ப்பு பரப்புரையிலும், நடவடிக்கையிலும் ஈடுபட்டது. உக்ரைனின் ஆட்சியில் இருந்தவர்களை ஓரு கிளர்ச்சியை உருவாக்கி தனக்கு சாதகமானவர்களை அமர்த்தியது அமெரிக்கா. அதற்குபின் வந்தவர்கள் , ரஷ்யர்கள் கணிசமாக உக்ரைனில் வசித்த போதும், ரஷ்யமொழி பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் அளவிற்கு சென்றார்கள். கிரிமீயாவை ரஷ்யர்கள் கைப்பற்றும் அளவிற்கு நிலைமையை உருவாக்கியவர்கள் யார்?
இருபெரும் முகாம்களுக்கிடையில் இறுதி அரணாக இருக்கும் நாடுகள் ராஜதந்திரத்தில் சிறப்புற்று விளங்க வேண்டும். அவ்வாறு தவறினால் கடுமையான இழப்புகளை சந்திப்பதை தவிர்க்க இயலாது. ரஷ்யா சில வருடங்களில் தன் இழப்புகளை சரி செய்துக் கொள்ளும். ஆனால் உக்ரைனுக்கோ சில பத்தாண்டுகள் ஆகும்.
ரஷ்யாவின் இழப்புகளை ஊதிப்பெருக்கியும், உக்ரைனின் வீரத்தை மிகைப்படுத்தியும் இன்னமும் உக்ரைனுக்கு ஆதரவு என்னும் பெயரில் ஆயுதங்களை வழங்கி வரும் அனைத்து நாடுகளும் இந்தப் போரில் குற்றவாளிகளே. அமெரிக்க சார்பு உலகத்திற்கும், ரஷ்யாவுக்குமிடையிலான பகை தீர்த்தலுக்கு உக்ரைன் மக்கள் பலியாகிக் கொண்டிருப்பதை உக்ரைன் மக்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் செலன்ஸ்கி புரிந்துக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார் எனத் தெரிகிறது. ஆனால் நாடு பாதி அழிந்த பிறகு.
ரஷ்யா நிச்சயம் இழப்புகளை சந்தித்திருக்கிறது. ஆனால் அந்த இழப்புகள் ரஷ்யாவின் பலத்தில் சிறிய இழப்பே.. ஆனால் அது பெற்றிருக்கும் சாதகமோ பல. உலகத்தில் அமெரிக்க முகாம் தொடர்ச்சியாக பல கட்டுபாடுகளையும், தடைகளையும் ரஷ்யா மீது விதித்துக் கொண்டே இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள ரஷ்யாவின் சொத்துக்கள் , முதலீடுகளையும் முடக்குகிறது. அமெரிக்காவும், மேற்குலகும் எதிர்பார்த்தது இதைத்தான்.
உலக அளவில் ரஷ்யாவின் பிம்பம் உடைபட்டிருப்பதோடு, அமெரிக்க- ஐரோப்பிய பிம்பமும் உடைபட்டிருக்கிறது.
ரஷ்யா மிகவலிமையான நாடு என்ற பிம்பம் உடைபட்டிருக்கிறது, அதே நிலைதான் அமெரிக்காவிற்கும் ஏற்பட்டிருக்கிறது. அதன் அடிமை ஒன்று தாக்கப்படும்பொழுது நேரடியாக அதனால் எதுவும் செய்ய இயலவில்லை என்பது உலக அரங்கில் அமெரிக்காவின் ஒற்றை அதிகாரத்திற்கு சவால் விடுகிறது. சீனா உறுதியாக ரஷ்யாவின் பக்கம் நிற்கிறது. ஏனெனில் இப்போது இருவருடைய எதிரிகளும் ஒரே முகாமை சேர்ந்தவர்கள்.
ரஷ்யா இதனின்று பாடம் கற்றுக் கொள்ளும். தன் ஐரோப்பிய சார்புத்தன்மையை உடைத்துவிட்டு சீனா, கிழக்காசியா, இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென்னமெரிக்காவில் தனது கவனத்தை செலுத்தும். அதற்கு சீனாவும் துணை நிற்கும். உண்மையில் இந்தச்சூழல் சீனாவிற்குத்தான் மிகவும் சாதகம். பொருளாதாரம், ராஜதந்திரம், இராணுவம், பாதுகாப்பு என அனைத்து துறையிலும் சீனாவிற்கு இனி ரஷ்யா உதவியும் ஆகவேண்டும், சார்ந்தும் இருக்க வேண்டும். இந்தியா, துருக்கி போன்ற நாடுகளும் இந்த சூழலை சரியாக பயன்படுத்திக் கொண்டு்வருகின்றன. மேற்குலகத்திற்கு எதிராக கிழக்குலகம் ஒன்று கட்டப்பட்டால் அது வரலாற்று சிறப்பான நிகழ்வாக அமையும்.
உக்ரைனிய போர் உண்மையில் உலக ஒழுங்கை மாற்றிவருகிறது. அதனால்தான் அமெரிக்காவும், மேற்குலகும் இந்தளவு பதறுகின்றன.ஒருபக்கம் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிக்கொண்டும், ரஷ்யாவிற்கு எதிராக அழுத்தங்களை அதிகரித்துக்கொண்டும் இருக்கின்றன. ஆனால் ரஷ்யா நிதானமாக அணுகுகிறது. போரில் தன் இலக்குகளை மாற்றிக் கொண்டு வருகிறது. கிழக்கு பகுதியை முற்றிலுமாக கைப்பற்றியப் பின் அது கீவை நோக்கி அது நகரும்.
இந்த நேரத்திலும் அமெரிக்காவும், மேற்குலகும் உக்ரைனுக்கு உதவிகள் அல்ல, கடன்களையே வழங்கிக் கொண்டிருக்கிறது.அதனை காரணமாக வைத்துக்கொண்டு பின்னர் உக்ரைனில் பங்கு கேட்கும். உக்ரைனின் நீர்வளங்கள், நிலவளங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பகுதிகள் அனைத்தும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாயிற்று.. போர் முடிந்தாலும் உக்ரைன் மீண்டெழும்ப அமெரிக்க- மேற்குலக கடன்கள் அனுமதிக்காது. மற்றுமொரு ஏழை ஐரோப்பிய நாடாகவே அது நீடிக்க வாய்ப்பிருக்கிறது.
ஏகாதிபத்தியங்களுக்குள் நடக்கும் போட்டியினில் பங்கேற்க விரும்பும் சிறிய நாடுகள், தங்கள் சூழ்நிலைமைகளுக்கு தாங்களே காரணமாக அமைகின்றன.
மேலும் மிகப்பெரிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருவாகும் மற்றொரு ஏகாதிபத்தியத்தை தவிர்க்க இயலாமல் ஆதரிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. எல்லா ஏகாதிபத்தியங்களையும் ஒருசேர எதிர்க்கும் வல்லமை கொண்ட ஒரு நாடோ அல்லது முகாமோ இன்றைய சூழலில் இல்லை, நமது வாய்சவடாலில் வேண்டுமானால் சாத்தியப்படலாம். பலமற்றவர்களின் நியாயங்கள் எடுபடுவதில்லை. பலமற்றவர்கள் எப்போதும் நியாயமானவர்கள் என்பதும் இல்லை, அவர்கள் அவர்களை விட பலவீனமானவர்களிடம் ஏகாதிபத்திய மனநிலையையே காண்பிக்கின்றனர். உக்ரைனின் டொனெட்ஸ்க்- லுகான்ஸ்க் நடவடிக்கையும் அப்படிப்பட்டதுதான். டான்பாஸ் பகுதியில் உக்ரைன் தேசியவாதத்தின் அத்துமீறல்களை கண்டு பதறாதவர்கள், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும்போது பதறுகிறார்கள். ஆனால் மெய்யாக ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டியில் சிறிய நாடுகள் இருவரையும் பயன்படுத்திக் கொள்ள முயலுமானால் அவை தங்களை வளப்படுத்திக்கொள்ள இயலும்.
விரைவில் போர் கீவ் நோக்கி நகரும் என செசன்ய தலைவர் ரம்சான் கதிரோவ் கூறுகிறார். ரஷ்யா நீண்ட கால யுத்தத்திற்கு தயாராகி வருகிறது. அமெரிக்காவிற்கும், மேற்குலகத்திற்கும் தங்கள் ஆதிக்கத்தை தொடர, மற்றவர்கள் வளர்ச்சியை தடுக்க, அவர்களை தாக்க சில காரணங்கள் தேவைப்படுகின்றன. அக்காரணங்களை உருவாக்க மதத்தலைவர்களோ, ராணுவத்தலைவர்களோ தேவைப்படுவர் சிலசமயம் அவர்கள் நகைச்சுவை நடிகர்களாகவும் இருப்பர். இந்த செலன்ஸ்கிக்களை உலகம் அறிந்துக் கொள்ள காலங்கள் தேவைப்படும்.
ஆனால் அதற்கான விலையோ லட்சக்கணக்கான அப்பாவி உக்ரைன் மக்களின் உயிரும், உடைமையும், வாழ்வும். செலன்ஸ்கி உக்ரைனுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அது ரஷ்யாவுடன் சமாதானத்திற்கு முயற்சி செய்வதே அது.
ஆனால் அவருடைய எஜமானர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.
இளந்திரையன்.