இந்தியத்தின், ஆளும்வர்க்க அரசின் சட்டகத்திற்குள்தான் மாநில ஆட்சிகளின் அதிகாரவரம்புகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு,அது நடத்தும் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே மக்களுக்கு பணி செய்ய இயலும் என்பதும், அதனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது மட்டுமே நமது இலட்சியம் என்பதை மட்டுமே ஓரு அரசியல் அமைப்பு இலக்காக வைத்துக்கொள்வது சரியான நிலைப்பாடா?
ஒரு அரசியல் கட்சி அல்லது அமைப்பிற்கு தேர்தல் பங்கேற்பு, புறக்கணிப்பு என்பது உத்தி,சூழல் சார்ந்தது. வெகுமக்கள் போராட்ட வழிமுறை என்பது எல்லா காலக்கட்டங்களிலும் கட்சி,இயக்கங்கள், மக்களிடம் உள்ள மிகவலிமையான ஆயுதம்.வரலாறு நெடுக பல மக்கள் போராட்டங்களின் விளைவாகத்தான் பல்வேறு உரிமைகளை தமிழக மக்கள் (உலகம் முழுவதும் உள்ள மக்களும்)அடைந்திருக்கின்றனர். தேர்தல் மட்டுமே வழிமுறை என்பது அரசுக்கும்,அதிகார வர்க்கத்திற்கும் நெருக்கடியாகவும்,அச்சுறுத்தலாகவும் இருக்கக்கூடிய வெகுமக்கள் போராட்டப் பாதையை நெஞ்சில் ஏந்தி போராடக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர்களை, மக்களை அந்த பாதையிலிருந்து அகற்றும் வேலையை கச்சிதமாக செய்கிறது.இது ஆளும், அதிகார வர்க்கத்திற்கு நேரடியாக உதவி செய்வதாகும்.
தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்வது மூலமாக தமிழ்த்தேசியத்தின் லட்சியங்களை அடைந்துவிட முடியுமா என்றால் நிச்சயம் முடியாது.அப்படி முடியும் என்று யார் சொன்னாலும் அவர்களை சந்தேகப்பட வேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது.ஆனால் தமிழகத்தின் ஆட்சியில் மாறிமாறி அமர்ந்து தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும்,தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக இந்தியத்திற்கு சேவை செய்யும் அரசியல் கட்சிகளிடமே நமது கோரிக்கைகளையும்,போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பதிலாக அங்கே தமிழ்த்தேசிய இலட்சியங்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஆட்சியை அமர்த்துவதை பற்றி நாம் கண்டிப்பாக பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.
அப்படி ஆட்சியில் அமர்ந்து சாதிக்கலாம் என்று சென்று திசைமாறிப்போன பல நிகழ்வுகள் வரலாறாக நம்முன் இருக்கவே செய்கிறது.அவற்றையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறக்கூடாது.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி, அசாமில் அசாம் கண பரிசத் ஆட்சி, தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி போன்றவை கடுமையான தத்துவார்த்த பின்னணியோடும் ,மக்கள் பலத்தோடும் ஆட்சியில் அமர்ந்தவை. சோசலிச, தேசிய, மாநில சுயாட்சி கோரிக்கைகளுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் பின்னர் படிப்படியாக அவர்களின் கொள்கைகள் காலாவதியாகிப் போனதும் வரலாறு.
டாட்டா போன்ற முதலாளிக்காக ஆட்சியை இழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தனது அசாமிய தேசிய கொள்கைகளிலிருந்து நீர்த்துப்போய் இன்று பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து சுகபோகங்களை அனுபவிக்கும் அசாம் கண பரிசத்தும், மாநில சுயாட்சி என முழங்கி பின் இந்திய அரசின் அச்சுறுத்தல்களுக்கு பணிந்து இன்று தானே முதலாளியாக மாறி மாநில சுயாட்சி கோரிக்கையை கைவிட்ட திராவிட முன்னேற்ற கழகம் போன்ற மக்கள் செல்வாக்கு மிகுந்த கட்சிகள் சில முயற்சிகளை செய்து பார்த்தாலும் முதலாளித்துவத்திற்கு முன்னும்,இந்திய அரசுக்கு முன்னும் நிற்க முடியாமல், அதன் கொள்கைகளை எதிர்க்க முடியாமல் பணிந்து இந்திய ஆளும்வர்க்கத்தின் பங்குதாரர்களாக மாறி மக்களுக்கு துரோகமிழைத்தவை . இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் அவ்வாறுதான் தங்கள் கொள்கைகளை துறந்துவிட்டு ஆட்சியை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு மக்கள் விரோத திட்டங்களை இந்தியத்திற்காக மக்கள் மீது திணித்து வருகின்றனர்.
தமிழகத்தின் ஆட்சியில் அமர்வதன் மூலம் தமிழ்த்தேசியத்தின் ,தமிழர்களின் நலனுக்காக செய்யக்கூடியவை என்பதை பார்த்தால் மத்திய அரசிடமிருந்து மாநில உரிமைகளை பெறுவது, தமிழகத்தினுள் தமிழ்த்தேசிய ஓர்மையை வளர்த்தெடுப்பது. ஆனால் இந்த புதிய தமிழ்த்தேசியர்கள் சாதீய, இன வெறி தேசியத்தை முன்வைப்பதால் தமிழ்த்தேசிய ஓர்மையை வளர்ப்பதென்பது சிக்கலான விடயமாக மாறிக்கொண்டிருக்கிறது.
இன்றைய சூழலில், அதாவது ஒரு கட்சி தனது இளம்பருவ காலத்தில் ஆட்சி, அதிகாரத்தை நோக்கி முன்னேறும் காலத்தில் அதனுடைய கொள்கைகளையும், உறுதிப்பாட்டையும்,
நேர்மையையும் ஓரளவு தக்க வைத்துக்கொண்டு போராடும். ஆனால் இங்கேயோ கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி, தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராசன் ஆகியோருடன் இணைந்து சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்து வருபவர்களும், பாரிவேந்தர் போன்ற கல்வித் தந்தைகளுடன் இணைந்து கல்வியை இலவசமாக்க போராடி வருபவர்களும், முந்தைய ஆட்சிகளை விட எடப்பாடி,ஓ.பி.எஸ்- சின் ஆட்சி சிறந்த ஆட்சி என சான்றிதழ் வழங்குபவர்களும், அ.தி.மு.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்- ன் வளர்ப்புப்பிள்ளையாக வலம் வருபவர்களும் இந்தியத்தை எதிர்த்து அதனிடமிருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை பெற இயலுமென்பது வேடிக்கைதான். தமிழ்நாட்டின் சிறு முதலாளிகள் முன்பு கூட திராணியுடன் நிற்க இயலாதவர்கள் (மாறாக விரும்பி கூட்டணி அமைத்து கொள்பவர்கள்) இந்தியப் பெருமுதலாளிகளை ,இந்திய ஆளும்வர்க்கத்தை எதிர்த்து நின்று போராடி நமது உரிமைகளை பெற்று தந்துவிடுவர் என்று நாம் நம்பினால் நம்மை விட முட்டாள்கள் யாருமல்ல.
தமிழ்நாட்டின் ,தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி ,கட்டமைப்பு மேம்பாடு பற்றிய முன்வைப்புகள் கூட பொருளாதார ஆய்வுகள், தரவுகள், புள்ளி விவரங்கள், வல்லுநர்களின் அறிவுரைகள், அறிவியல் விளக்கங்களின்படி இல்லாமல் வழக்கமான வாய்ச்சவடால்களாகவே இருக்கிறது. இவர்களாவது சொல்கிறார்களே, பேசுகிறார்களே என்பதும்,நாங்கள் நம்புகிறோம் என்பதும் இவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதை அன்றி வேறு ஏதுமல்ல. இந்த தமிழ்த்தேசிய அமைப்புகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின் கொடுத்த வாக்குறுதிகளின்படி நடவாமல் போனால் அவர்களை அகற்றிவிடும் அதிகாரமும், அமைப்பும் மக்களிடமும், மக்களுக்காக போராடும் கட்சிகள், அமைப்புகளிடம் உள்ளதா? மற்றொரு துரோகத்திற்கு பின் மீண்டும் இன்னொரு போலியை தேடி ஒடுவதை தொடர வேண்டுமா?
இந்த ஆரவாரமான ஆனால் உண்மையில் வெற்றுத்தனமான அடையாள தமிழ்த்தேசிய அமைப்புகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு சாதிஒழிப்பையும், மார்க்சிய கண்ணோட்டத்தையும் தமிழ்த்தேசியத்தோடு இணைத்து முன்வைப்பவர்களையும்,இனவெறி,மதவெறி,மொழி வெறிக்கு துணை போகாதவர்களையும்,நாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் எதையும் செய்ய முடியும் என்பவர்களுக்கு மாறாக இந்திய தமிழக அரசுகளுக்கு எதிராக, மக்களுக்காக ,உறுதியாக களத்திலே நின்று( மேடையில் அல்ல) போராடும் அமைப்புகளையும்,தலைவர்களையும் கவனித்தெடுத்து ஆட்சியேற்க வகை செய்தால் நமது எண்ணமான தமிழ்நாட்டின் உரிமை மீட்பையும் ,தமிழ்த்தேசிய ஒற்றுமையையும் , இலட்சியங்களையும் சாதிக்க அதன் வரையறையில் என்ன இயலுமோ! அதனை செயல்நடத்த முயற்சிக்கலாம்.
தமிழ்நாட்டு தேர்தலில் வெற்றிப்பெற ஈழவிடுதலை போராட்டத்தின் வெற்றிகளையும் ,துயரங்களையும் கணநேரமும் விவரிப்பவர்களுக்கு
தமிழகத்தில் அறிவியல்பூர்வமான மார்க்சிய அடிப்படையிலான தமிழ்த்தேசியத்தை அதன் கொள்கைகளை மேடைகளில் முழங்குவதற்கு தயக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் ஆயுதந்தாங்கிய தேசிய விடுதலைப்போராட்டத்தின் சாதனைகளையும், வரலாற்றையும் மக்களிடையே பரப்புவதற்கு அச்சமாக இருக்கிறது.
தமிழ்நாடு பொதுவுடமை கட்சி வகுத்த கொள்கைகளும் லட்சியங்களும் தமிழகத்தின், தமிழினத்தின் மீட்சிக்கானதுதானே? தமிழக மக்களுக்காக உயர்ந்த வடிவத்தில் போராட்டத்தை நடத்தி, மக்களுக்காகவே உயிரையும் தியாகம் செய்த தோழர் தமிழரசனையும்,இன்ன பிற தோழர்களையும் பற்றி இவர்கள் இதுவரை ஒரு மேடையிலாவது பேசியதுண்டா? இங்கேதான் தமிழக தமிழ்த்தேசிய தேர்தல் அரசியலின் சந்தர்ப்பவாதம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. வரலாற்றை தங்களின் சிறுகரங்கள் கொண்டு மறைத்துவிட முடியுமென்றே கற்பனையில் வாழ்கிறார்கள் இந்த புதிய தமிழ்த்தேசியர்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கே இவர்களால் இதுவரை எதுவும் செய்ய இயலாத போது தமிழக தேர்தலில் வெற்றி பெற்று தமிழீழத்தை அமைப்பேன் என்று கூறுவது எதற்காக?
தமிழக தேர்தல் அரசியலில் ஈழவிடுதலை குறியீடுகளை பயன்படுத்துவதற்கான காரணமும், தமிழக விடுதலை குறியீடுகளை பயன்படுத்தாமல் இருப்பதற்கும் காரணமும் தமிழகத்தில் இவர்கள் தமிழர்களுக்கு தேவையான காத்திரமான தீர்வுகளை பற்றி விவாதிக்காமல் மக்களை உணர்ச்சியூட்டும் கதைகள் மூலம் திசைதிருப்பி ஆட்சியில் அமர்ந்துவிட திட்டமிடும் முயற்சிக்கு தமிழ்த்தேசியத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஈழவிடுதலைக்காக தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலை முன்னெடுக்கிறோம் என்று சொல்பவர்கள் எப்படி அது சாத்தியம் என்பதை விளக்க வேண்டும் . இல்லை என்றால் தமிழக தேர்தல் அரசியலில் ஈழப்போராளிகளையும், தலைவர் பிரபாகரனையும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.
ஒரு முதல்வராக எம்.ஜி.ஆர் தன்னாலியன்ற உதவிகளை புலிகளுக்கு செய்திருந்த போதிலும் ,ராசீவ்காந்தி அரசு நிலைப்பாடுகளை மாற்றத்துவங்கியபோது எம்.ஜி.ஆர் என்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய இயலாது என்பதை தெரிவித்து விட்டார். கலைஞரும் ஒருகாலத்தில் காத்திரமாக உதவியபோதும் பின்னர் காங்கிரசு அரசின் அழுத்தத்தின் காரணத்தால் தன் ஆட்சியை காப்பாற்றி கொண்டால் போதும் என்று ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் செய்தார். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று விளிக்கப்பட்ட ஈழத்தாய் செயலலிதா சில வெற்றுத் தீர்மானங்களோடு தன் சீரிய பணியை நிறைவு செய்துக் கொண்டார்.
ஒரு முதல்வர் என்றளவில் வரம்புகளுக்கு உட்பட்டு இந்த மிகப்பெரிய ஆளுமைகளே ஏதும் செய்ய முடியாத போது வரம்பில்லாத அளவிற்கு கட்டுக்கதைகளுடன் களமாடும் தமிழ்த்தேசியர்களால் என்னதான் செய்ய முடியும்.
தமிழக முதல்வருக்கு அவ்வளவு அதிகாரம் இருந்தால் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் ஏன் மிகப்பெரிய விடுதலைப்போரை நடத்த வேண்டும்.. இங்கே முதல்வர்களிடம் முறையிட்டு ஈழத்தை பெற்றுவிட முடியும் என்று அவர் அறிந்திருக்கமாட்டார் அல்லவா! அப்படித்தானே அதற்கு அர்த்தம்.
ஒரு அரசு தன் தேசத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதையும் புலிகளின் திட்டத்தில் இருந்து பெரும்பாலானவற்றை எடுத்து அப்படியே தனதாக சொல்லிக்கொள்வதை இவர்கள் புதிதாக சொல்வதாக நம்புபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான்.
அதிலும் வசீகரமான மேடைபேச்சுக்கள் மூலம் இதுகாறும் மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளின் வரிசையில் இப்போது தமிழ்த்தேசியத்தின் பெயரால் கட்சிகள், அவர்களுக்கு வாய்ப்பளித்தீர்களே எங்களுக்கு அளித்தால் என்ன? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.
அவர்களோ ஆட்சிக்கு வந்த பின்னர்தான் பெரும்பாலான தவறுகளை இழைத்தனர், ஆனால் தமிழ்த்தேசிய தேர்தல் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அவர்களையும் தாண்டிய கேடுறுகளை தன்னகத்தே கொண்டிருப்பதானது, அதே பாணியிலான மற்றொரு வாய்வீச்சு அரசியல் வளர்வதை தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு, தமிழீழம் மக்களை ஒருசேர ஏமாற்றும் வெற்று வாய்வீச்சு அரசியலை விரட்டி அடிக்க வேண்டும். யாருமில்லையே என்று இவர்களை கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பது இன்னொரு தவறுக்கு இட்டுச்செல்லுமே தவிர, தமிழ்த்தேசியத்தின் இலக்குகளை அடைய நமக்கு உதவாது.