தமிழ்த்தேசியத்தின், தமிழ்த்தேச விடுதலையின் எதிரி இந்தியமாக இருக்க அதனை அங்கிருந்து அகற்றிவிட்டு திராவிடத்தை எதிரியென உள்நுழைத்த பெருமை அறிஞர் குணா என்று சொல்லக்கூடிய பெங்களூரு குணாவையே சேரும்.
வெளிமுரண்பாடு இந்திய ஆளும் வர்க்கமாகவும், உள்முரண்பாடு சாதியமாகவும் இருக்க இரண்டையும் எதிரியாக முன்னிறுத்தாமல் அனைத்து தளத்திலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய பெரியாரின் திராவிட கருத்தியலையும், இயக்கங்களையும் முதன்மை எதிரியாக அடையாளம் காட்டுவதற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்?
எப்படியாவது தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடவேண்டும் என்ற அற்ப ஆசையை தன்னுள் வைத்து, வளர்த்துக்கொண்டிருப்பதே ஆகும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள யாரையும், எவரையும் இழிவாகவும், அவதூறாகவும் பேச துணிந்திருக்கும் இவர்கள் தமிழ்த்தேசிய போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழ்நாட்டு மக்களையும், தமிழீழ மக்களையும் குழப்பவும், துண்டாடவும் முயற்சி செய்து பார்க்கிறார்கள்.
காரணங்கள்;
பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, சுயமரியாதை, சுயசிந்தனை, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்று தமிழ்நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்களுக்கும், சமூகவிடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் வித்திட்ட கருத்தியலான திராவிடத்தின் சாதனைகள் அவர்களின் அறிவுக்கு புறம்பான,பிற்போக்கான கருத்துக்களை பரப்புவதற்கு பெருந்தடையாக நிற்கின்றன. மிகவும் பிற்போக்கான சாதியசமுகத்தின் அதிகாரபீடங்களை அசைத்துப் பார்த்தது திராவிடம்.
ஆட்சி, அதிகாரம் இன்றியே, இயக்க செயல்பாடுகளின் மூலமாக போராட்டங்கள் பல முன்னெடுத்து இந்த மாற்றங்களை, முன்னேற்றங்களை சாதித்தார் பெரியார். இவர்களோ ஆட்சி அதிகாரத்திற்கு வராமல் எதையும் செய்ய இயலாது, ஆட்சிக்கு வந்தால் மட்டுமே எங்களால் எதையும் செய்ய முடியும் எனக் கூறுகின்றனர். ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன செய்தார்கள், செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
நாம் இன்றுள்ள கட்சிகளை வெறுத்தால் கூட, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த கட்சிகள் அனைத்துமே ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கான கோரிக்கைகள், தேவைகளுக்காக பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகங்கள் பல செய்து நம்பகத்தன்மையை உருவாக்கிய பின்னரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை.
இந்த புதிய தமிழ்த்தேசியவாதிகள் மட்டும்தான் ஆட்சிக்கு வருவதற்கு முன் தாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்.ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பவர்கள்.யாருக்கும் பயனில்லாத இவர்களின் வார்த்தைகள் அடுத்தவர்களை மிரட்டுவதன் மூலமும், குறை சொல்வதன் மூலமும் தனக்கான நியாயத்தை கேட்கிறதே தவிர, தாங்கள் நியாயம் என்று சொல்பவைகளுக்காக இவர்கள் களத்திற்கு வருவதேயில்லை. களம் என்பது அவர்களுக்கு மேடையும், சமூக ஊடகங்களும்தான். அதாவது பிரச்சாரம் மட்டும்தான் ஒரே அரசியல். எப்போதாவது சில அடையாளப் போராட்டங்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவுமில்லை.
உண்மையில் பெரியாரை போல உழைக்க மக்களுக்காக தொண்டாற்ற , சிறைப்பட, போராட இவர்கள் முற்றிலும் தயாராக இல்லை, மேலும் இந்த சாதிய தமிழ்த்தேசியவாதிகள் திராவிடம் வலியுறுத்தும் சாதிஒழிப்பு, பெண் விடுதலை, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சமூக நீதி ஆகியவற்றை விரும்பாதவர்கள் ஆவர்.
சாதி தமிழர்களான இவர்கள் சாதியையும், சாதிப்படிநிலையும், பார்ப்பனீயத்தையும் காப்பாற்றுவதற்கு அதிகாரவர்க்கங்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்கின்றனர். அதே சமயம் அதற்கெதிராக போராடுவது போலவும் நடிக்கின்றனர். தங்களின் இரட்டைவேடம் அம்பலப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்தியத்தையும், சாதியத்தையும் எதிர்க்காமல், அவற்றின் விசுவாசம் மிக்க சேவகர்களாக திராவிடத்தின் மீது பகைமை பாராட்டுகிறார்கள்.
இவ்வாறாக தி.மு.க, அ.தி.மு.க ஆகிய தேர்தல் கட்சிகளின் மக்கள் விரோத செயல்பாடுகளைப் பயன்படுத்தி திராவிட கருத்தியல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே பெரியாரின் கருத்தியலிலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டனர். திராவிடக் கொள்கைகளை பெரும்பான்மையாக சமரசம் செய்துக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றிய பின் காலப்போக்கில் நீர்த்துப் போய் ஊழல், லஞ்சம், முதலாளித்துவ அதிகாரவர்க்கத்திற்கு ஊழியம் செய்வது என்றாகிவிட்ட பிறகும், பெரியாரின் திராவிட நிலைப்பாடுகளை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ ஜனநாயக அராஜக ஆட்சியை வழங்கி வந்தாலும், அவர்களுக்கு தார்மீகரீதியாக ஒரு தத்துவார்த்த பலத்தினை பெரியாரின் திராவிடம் வழங்குகிறது அல்லவா? அதற்கு முன் எதிர்நிற்க முடியாமலேயும், தமிழ்நாட்டில் தங்களை நோக்கி ஏராளமான கேள்விகளும், விமர்சனங்களும் தொடர்ந்து வைக்கப்படுவதை எதிர்கொள்ளும் இந்துத்துவம் திராவிடத்தை பகைமையோடு பார்க்கத் துவங்கியது. இதை ஒத்த போக்கு இன்றைய பிற்போக்கு தமிழ் தேசியவாதிகளிடம் இயல்பாகவே காண முடிகிறது.
திராவிட இயக்க வழிவந்த அரசுகள் 69 சதவிகித இட ஒதுக்கீட்டையும், நிலஉச்சவரம்பு சட்டத்தையும் ஓரளவு நிறைவேற்றியது இங்கே மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கு வித்திட்டது.. பெரியாரின் திராவிட கருத்தியலால் உருவாக்கப்பட்ட சமுகவளர்ச்சியின் பலன்களை அனுபவித்துக்கொண்டே அதன்மீது இன்று அவர்கள் காறி உமிழ்கிறார்கள்.
தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகள் அகற்றப்பட வேண்டுமா? என்றால், கண்டிப்பாக அகற்றப்படத்தான் வேண்டும், ஏனென்றால் இன்றைக்கு இந்தக்கட்சிகள் பெருநிறுவனங்களாக மாறிவிட்டதால் இவர்களால் தமிழ்நாட்டை மக்கள் நலவாழ்வு அரசாக தமிழகத்தை அடுத்தக்கட்ட வளர்ச்சி நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் சரியான மாற்று இல்லாமல் கிடைப்பதை எல்லாம் முயற்சி செய்தோமானால் அந்த மாற்று நமக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்து விடக்கூடும். மேலும் அது பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ்-க்கு சேவகம் செய்வதாகவும் அமைந்து விடும்.
ஒவ்வொரு ஆட்சிக்காலத்திற்கு பிறகும் தங்கள் தவறுகளின் எண்ணிக்கையை பெருக்கிக்கொண்டே வந்திருக்கும் தி.மு.க, அ.தி.மு.க வின் தவறுகளை பேசுவதால் மட்டுமே ஒருவர் நியாயவானாகவும், நேர்மையானவனாவும் இருந்துவிட முடியுமா? அப்படி அவதூறுகளை முன்வைப்பதை தாண்டி எதிரியை அழிக்க வேண்டும். எதிரியை அழிக்கவேண்டுமென்றால் அவர்களின் தத்துவத்தை, கோட்பாட்டை அழிக்க வேண்டும் என்பது போன்ற ஹிட்லரிய கோட்பாடுகளை வெளிப்படையாக நியாயப்படுத்தும், சர்வாதிகாரம்தான் தேவை என்று வெளிப்படையாக பேசும் இந்த தமிழ்த்தேசிய சர்வாதிகாரிகள் எல்லா வகையிலும் ஆபத்தானவர்களே.
திராவிடத்தை எப்பாடுபட்டேனும் அழித்தால்தான் இவர்கள் அபிலாசைகள் நிறைவேறும் என்பதால், தமிழ்நாட்டில் திராவிட வழிவந்த அரசியல் கட்சிகளையும் தாண்டி பெரியாரிய இயக்கங்களையும் தங்களின் விமர்சன வரம்பிற்குள் கொண்டுவருவதன் மூலம் திராவிடத்தின் மீதான தங்களின் தாக்குதல்களை இயன்ற அளவிற்கு விரிவுபடுத்த முயற்சிக்கின்றனர்.
விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்ததால் தி.மு.க அழியவேண்டும் என்பவர்கள், பிரபாகரன் அழிய வேண்டும் என்ற செயலலிதாவிற்கு துணை நின்றதும், நிற்பதுமாக முரணியல்புகளை கொண்டவர்கள். புலிகள் இயக்கத்தின் ஒரே முகவர்கள் தாங்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி புலம்பெயர் ஈழச்சமுகத்திடம் மேலும் நிதியை திரட்ட திட்டமிடும் இந்தக் கூட்டம் புலிகளுக்காக உயிரை துச்சமென மதித்து இந்திய, தமிழக அரசின் நெருக்கடிகளை பொருட்படுத்தாமல் தங்கள் சொத்துக்களை இழந்து பல உதவிகளை செய்த, தலைவர் பிரபாகரனே மிகுந்த மதிப்புடன் நடத்திய தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த திராவிட இயக்கத் தலைவர்களையும் அவதூறு செய்வது இவர்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது.ஆனால் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட, அவர்கள் மீது போர்குற்றப் பழியை சுமத்தியவர்களுக்கு அவர்கள் கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்க்கின்றனர்.
ஒட்டுமொத்தத்தில் நேர்மையான வழியில் திராவிட இயக்கங்களின் மீது விமர்சனம் வைக்க முடியாதபோது இனவெறியையும், அவதூறுகளையும் தூண்டி விடுகின்றனர்.
தெலுங்கன், மலையாளி, கன்னடன் என்ற கீழ்த்தரமான இனத்துவேசத்தை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எத்தனிக்கின்றனர்.
நாம் தமிழர் என்ற பெயரை உருவாக்கி தமிழரை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்ட சி.பா.ஆதித்தனார் அவர்கள் பெற்ற பிள்ளைகளும் அவர்களின் நிறுவனங்களும் இன்று ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வின் ஊதுகுழல்களாக மாறியிருக்கின்றனர். திராவிட கருத்தியலை எதிர்ப்பவர்கள் இயல்பாகவே சாதிய, இந்துத்துவ முகாமிற்குள்தான் தஞ்சமடைகிறார்கள்.
மக்களுக்குரிய தமிழ்த்தேசியம் பல்வேறு தரப்புகளுக்கிடையில் ஒற்றுமையை கட்டுவதன் மூலமே தனக்கான இலக்குகளை அடைய முடியும். திராவிட கருத்தியல் போன்ற முற்போக்கான சீர்திருத்த கருத்தை எதிர்க்கும் இந்த தமிழ்த்தேசியவாதிகளின் போக்கு தமிழக மக்களை துண்டாடுவதற்கும், துண்டாடி இந்துத்துவத்திற்கும், இந்தியாவிற்கும் சேவை செய்வதற்கும்தான் இட்டுச்செல்லும்.
திராவிட இயக்கம் சீர்திருத்தங்களை மேற்கொண்ட ஒரு இயக்கம். அந்த சீர்திருத்த இயக்கத்தின் கொள்கைகள் பல முற்போக்கு தமிழ்த்தேசியம் படைப்பதற்கு உறுதுணையாகவே இருக்கின்றன. .நட்பு சக்திகளின் மீதான ஆரோக்கியமான விமர்சனம் என்பது வேறு, அழித்துவிட வேண்டும் என்ற வெறியோடு வன்மம் கொள்வது வேறு..
நட்பு சக்திகளையெல்லாம் எதிரிகளாக மாற்ற தேசிய இன ஓர்மைக்காக பாடுபடும் எந்த இயக்கமும் முயலாது. இந்த பிற்போக்கு சக்திகள் அதற்கான முயற்சியில் இருக்கிறார்களென்றால் இவர்கள் நிச்சயம் தமிழ்த்தேசத்திற்காக உழைக்கவில்லை, இந்திய தேசத்திற்கு விசுவாசமாக செயல்படுகிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.