அதானி ஊழல்கள் மீது நடவடிக்கை கோர ஜனவரி 5 வள்ளுவர் கோட்டத்தில் நடக்க இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் அரூண் IPSஐ கண்டித்து அறப்போர் அலுவலகத்தில் கண்டன கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 150 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். கண்டன உரைகள், முழக்கங்கள், நாடகம், பாட்டு போன்ற பல வழிகளில் வன்மையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டது.
அதானி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கண்டு தொடைநடுங்கி போராட்ட அனுமதியை மறுத்த தமிழக அரசை கண்டித்தும், அரசியல் சாசனத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்ட முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரூண் IPS ஐ கண்டித்தும், ஜனநாயக குரலொலியை முடக்க நினைக்கும் ஸ்டாலின் அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மன்னராட்சி நடத்துவதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார். அதானி ஊழல்களை பாதுகாக்கவே முதல்வர் ஸ்டாலின் இந்த வேலையயை செய்துள்ளார். ஜூலை மாதம் அதானி வந்த பொழுது எந்தெந்த அமைச்சர்கள் அதானியை சந்தித்தார்கள் என்னென்ன சமரசம் பேசப்பட்டது என்ற கேள்விகள் முதல்வர் ஸ்டாலினை நோக்கி அறப்போர் இயக்கம் வலுவாக இன்று கேட்டோம்! நிலக்கரி இறக்குமதி ஊழலில் சோலார் ஊழலில் அதானி மீது FIR போடாமல் சமரசம் செய்யும் அரசசி அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!
இத்துடன் அறப்போரின் அதானி ஊழல் மீதான 6 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. அவை கீழே!
- அதானி நிலக்கரி இறக்குமதி ஊழல்கள் போன்ற பல ஊழல்களால், மின்சார வாரியங்களில் நாம் இழந்த பணத்தை மத்திய, மாநில அரசுகள் அதானி போன்ற ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்டு எடுத்து, நமது மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.
- இந்தியாவின் துறைமுகம், விமான நிலையம் போன்ற இந்தியாவின் சொத்துக்களை ஒவ்வொன்றாக அதானிக்கு விற்கும்,ஏகாதிபத்திய கொள்கையை மத்திய மோடி அரசு கைவிட வேண்டும்.
- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 3000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் செய்துள்ளார் அதானி. அறப்போரின் இந்த புகார் மீது மு.க. ஸ்டாலினின் மாநில அரசு உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
- இதே போல் இந்தியா முழுவதும் உள்ள மின்சார வாரியங்களில் பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள நிலக்கரியை இறக்குமதி செய்வதில் ஊழல் செய்துள்ளார் அதானி. இதன் மீது மோடியின் மத்திய அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
- அதானியின் சூரிய ஆற்றல் மின்சாரம் விநியோகம் செய்ய ரூ 2000 கோடிக்கு மேல் மின்சாரவாரிய பொது ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக, அமெரிக்க அரசால் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் நேரடியாக நம் மின்சார கட்டணம் தான் அதிகரிக்கும். இந்த லஞ்ச புகார் மீது இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
- அதானி உலக பணக்காரர் ஆவதற்காகவும், அதானி ஊழல்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றவும் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்வதை, மத்திய மோடி அரசு கைவிட வேண்டும். மற்ற பெரு நிறுவனங்களை அதானிக்கு விற்பதற்காக, அந்நிறுவனங்கள் மீது விசாரணை அமைப்புகளை ஏவி விடுதல், அழுத்தம் கொடுத்து அந்நிறுவனங்களை அதானி அபகரிக்க உதவுதல், அதானிக்கு விற்கும்பொழுது வங்கி கடன்களை பெரியளவில் தள்ளுபடி செய்து, அந்த நிதிச்சுமையை சாதாரண மக்கள் தலையில் சுமத்துதல் போன்ற செயல்பாடுகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும்
ஜெயராம் வெங்கடேசன்
ஒருங்கிணைப்பாளர் – அறப்போர் இயக்கம்
Ph: 9841894700