தமிழ் மொழிப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு;
தமிழ் மண் மற்றும் இயற்கை வளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு;
தமிழர் நம் தொன்மை, பண்பாடு, வரலாறு, அடையாளம், தனித்தன்மைகள் அனைத்தையும் காத்துக் கொள்வதற்கு;
நமது ஒட்டுமொத்த சமூக–பொருளாதார–அரசியல் மேம்பாட்டுக்கு, நல்வாழ்வுக்கு…
சுருக்கமாகச் சொன்னால், தமிழருக்காக, தமிழரால் நடத்தப்படும் தமிழரின் அரசும், அரசியலும் வேண்டும்!
அப்படியானால், தமிழரின் அடுத்தக்கட்ட அரசியலுக்கு யார் நமக்கு மிகவும் தேவை? சீமான்தானே?
உண்மை, நேர்மை, உறுதி, ஒழுக்கம் எதுவுமற்ற சீமான் தமிழரின் அடுத்தக்கட்ட அரசியலுக்கு எள்முனையளவும் உதவ மாட்டார்! அவர் தன்னை முதல்வராக்கிக் கொள்வதற்காக மட்டுமே பிரயத்தனப்படுகிறார். தன்னை நம்பிவந்த எத்தனை பேரை அவர் ஆளுமைகளாக ஆக்கினார்? தமிழினத்தின் மேம்பாட்டுக்காக அவர் இதுவரை செய்து முடித்திருக்கும் சாதனைகள் என்னென்ன? பெரும் சுழியமே பதிலாக அமைகிறது!
அவர்தானே ‘திராவிடம்–தமிழ்த் தேசியம்’ எனும் விழுமியங்களை எதிரெதிராக வைத்து இன்றைய கருத்துப்பரிமாற்றங்களை சாத்தியமாக்கியவர்?
இல்லை. அது ஈ.வி.கே. சம்பத் அவர்கள் காலத்திலேயே முக்கியத்துவம் பெற்ற ஒன்று. அண்மைக்காலத்தில் சீமானின் பங்களிப்பு கொஞ்சம் இருக்கிறதுதான். ஆனால் அவரது வாதங்களில், நிலைப்பாட்டில், கொள்கைகளில் உள்ள குழப்பங்களை, குளறுபடிகளை, பொய்களை, பித்தலாட்டங்களைப் பாருங்கள்.
திராவிட இயக்கங்களின் ஆதரவைப் பெற்று வளர்ந்தது; “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று புளுகியது; திமுகவும் நானும் பங்காளிகள் என்று உருகியது; உதயநிதிக்கு எதிராகப் பேசிய சாமியாரின் உயிருக்கு நூறு கோடி ரூபாய் விலை அறிவித்தது; பெரியாருக்கு ஆண்டுதோறும் விழா எடுத்தது; அண்மையிலேகூட பெரியாரை வியந்தேத்தி ஊரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டிக் கொண்டாடி மகிழ்ந்தது…
இம்மாதிரியான சுயநலவாத, சந்தர்ப்பவாத, பிழைப்புவாதப் பேச்சுக்களின், நிலைப்பாடுகளின் பட்டியல் மிக நீளமானது. ஒரு குடிகாரன் உளறுவதைப் போல, உளறிக்கொட்டுகிறார்.
அப்படியானால், நீங்கள் பெரியார் ஆதரவாளரா?
இல்லை. பெரியாரின் பல கருத்துக்களில், நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பெரியார் என்றொரு பெரிய ஆளுமை வாழ்ந்ததும், இயங்கியதும், தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் பங்களிப்புக்கள் செய்ததும் வரலாற்று உண்மைகள். இதை மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ முடியாது, கூடாது. குழந்தையை குளிப்பாட்டியத் தண்ணீரோடு, குழந்தையையும் வெளியே விட்டெறிவது மடமையிலும் மடமை!
இன்றைய நிலையில் தமிழர் நாம் எதிர்கொள்ளும் மாபெரும் ஆபத்து பார்ப்பனீய பாசிசம்! சனாதனம், வருணாசிரமம், மனுஅதர்மம் போன்ற மானுட எதிர்ப்புக் கோட்பாடுகள் கோலோச்சிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த என்னுடைய மூதாதையர் தீண்டத்தகாதவர்களாக மட்டுமல்ல, காணத்தகாதவர்களாகவும் நடத்தப்பட்டனர். எம்குலப் பெண்டிர் இடுப்புக்கு மேல் துணி அணியமுடியாத அசிங்கம் அரங்கேற்றப்பட்டது. அதாகப்பட்ட உயர்சாதியினரைப் பார்த்தால், தோளில் கிடக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, அல்லது முன்னங்கையில் தொங்கவிட்டு, குனிந்து நின்று, ”ஏமானே” ( எசமானனே!) என்று விளித்து நிற்கும் அவலம் நிலவியதாக என்னுடைய தாத்தாவே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
அப்படிப்பட்ட அயோக்கியத்தனம் மீண்டும் தலைதூக்க எத்தனிக்கும் இந்நாளில், பார்ப்பனீய பாசிசத்தை எதிர்த்து, கடுமையாகப் போராடி, அந்த அட்டூழியங்களை அம்பலப்படுத்தி அரசியல் செய்து, ஒரு பெரும் விழிப்புணர்வை உருவாக்கிய ஒரு தலைவனை, அவன் அரசியலை அப்படியேக் கைவிடு என்று சொல்வதில் ஒரு நரித்தனம், நயவஞ்சகம் இருப்பதாக நான் உணர்கிறேன். என்னுடைய மனித கண்ணியத்தை, மாண்புகளை, சமத்துவத்தை, சமூகநீதியை தக்கவைத்துக் கொள்ள களப்பணியாற்றிய பெரியாரைக் கைவிட நான் அணியமாக இல்லை. தமிழ் மக்களின் முதன்மை எதிரி அஞ்சுகிற, அலறுகிற, எதிர்க்கிற யாரையும், எதையும் நான் புறக்கணிக்க மாட்டேன், மாறாக பயன்படுத்திக் கொள்வேன்.
சீமானை வீழ்த்துவதற்கு பெரியாரை நாம் துணைக்கழைப்பது சரியா?
மடுவும் மலையும் ஒன்றல்ல. இவ்விருவரும் சமமானவர்கள் அல்ல. பெரியார் பெரும்பணிகள் ஆற்றியவர். மற்றவர் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாடறியும். விஜித்திரமான அந்தப் பட்டியல் மிக நீளமானது.
அதேநேரம், பெரியார்தான் தமிழர்தம் சமூக–பொருளாதார–அரசியல் வாழ்வின் அடிப்படை எனுமளவுக்கு அவரை உயர்த்திக்காட்டுவது, மிகைப்படுத்திப் பேசுவதும் ஏற்புடையதல்ல. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,” “யாதும் ஊரே யாவரும் கேளிர்,” “தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம்” என்பன போன்ற அசாத்தியமான தமிழர் அறமெனும் அஸ்திவாரத்தின் மீதுதான் பெரியார் தன் அரசியலை கட்டமைத்துக் கொண்டார். தமிழம் பெரியாரை உருவாக்கியதே தவிர, பெரியார் தமிழத்தை உருவாக்கவில்லை! மலையாள, கன்னட, தெலுங்கு நிலங்களில் பெரியார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரு திமுக அனுதாபி, உங்களுக்கு சீமான் மீது பொறாமை!
விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போகும்போது, இம்மாதிரியான கட்டுக்கதைகளை கடிதில் முன்வைப்பது கையாலாகாதவர்களின் அணுகுமுறை.
அறிஞர் அண்ணா சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் திமுகவைத் தோற்றுவித்த நாள் முதல், தன்னுடைய 89-வது வயதில் முழுமை அடையும் வரை என்னுடைய தகப்பனார் ஒரு திமுககாரராக இருந்தார், கட்சிக்காக அதிரடியாகச் செயல்பட்டார், அடிபட்டார், பலமுறை சிறை சென்றார். நான் விரும்பியிருந்தால், மிக எளிதாக என்னை திமுகவில் இணைத்துக் கொண்டிருக்க முடியும். அரசியல் வாழ்வில் உயர்ந்திருக்கவும் முடியும்.
ஆனால் திமுக மட்டுமல்ல, திராவிடக் கட்சிகள் அனைத்துமே திசைமாறிப் போய்விட்டன என்று நான் உறுதியாக நினைக்கிறேன். நூற்றாண்டு காலம் கோலோச்சிய திராவிட இயக்கம் தன்னுடைய அந்திமக் காலத்தை அடைந்துவிட்டது என்று நம்புகிறேன். இன்று பகுத்தறிவு படும் பாடுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சுயமரியாதை கார் டயர்களிலும், தலைவர் துதியிலும் மண்டியிட்டுக் கிடப்பதைக் கண்ணுறுகிறோம். தமிழர்களைக் காக்கவந்த தம்பிகளும், உடன்பிறப்புக்களும், இரத்தத்தின் ரத்தங்களும் கோடீசுவரர்களாக, குறுநில மன்னர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு வெதும்புகிறோம்.
தமிழ்த் தேசியம் பேசி ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று களத்திற்கு வந்தவர்கள் என்ன சாதித்து முடித்துவிட்டார்கள்? தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்களா? திமுக போல 50, 137, 184 என்று தொடர் வளர்ச்சி அடைந்தார்களா? புதிய இளம் தலைவர்களை உருவாக்கிவிட்டார்களா? சமூக மாற்றத்தைக் கொண்டு வந்தார்களா? அட, எல்லாவற்றையும் விடுங்கள், குறைந்தபட்சம் ஓர் அப்பழுக்கற்ற ஆளுமை என்றாவது அறியப்பட்டார்களா? எதைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்?
இந்த அக்கப்போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது?
Attention Deficiency Disorder (ADD) என்று ஒரு மனப் பிரச்சினை சிலருக்கு இருக்கிறது. பள்ளிக் குழந்தைகள் பலர் இதனால் துன்புறுவதைப் பார்க்க முடியும். அவர்கள் கத்துவார்கள், கை கால்களை உதறுவார்கள், திட்டுவார்கள், திக்குமுக்காடுவார்கள். சினிமா, அரசியல் போன்ற துறைகளிலும் சிலர் இந்த பிரச்சினையால் துன்புறுகிறார்கள். அவர்கள் வீட்டுக்குப் படையெடுப்போம், இருப்பிடத்தை முற்றுகையிடுவோம் என்பவை தவறான அணுகுமுறைகள். நாம் அப்படிச் செய்தால் நோயாளி உண்மையில் குதூகலிப்பார். அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது அவரை அயற்சி அடையச் செய்து அமைதிப்படுத்தலாம்.
உங்கள் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை என்ன?
ஆரியமும் வேண்டாம், திராவிடமும் வேண்டாம், தன்னலவாத தமிழ்த் தேசியமும் வேண்டாம்! தமிழ் மக்களின் வாழ்க்கையை, வளங்களை, வாழ்வுரிமைகளை, வருங்காலத்தைப் பாதுகாக்கும் ஒரு புதிய அரசியலைக் கட்டமைக்கப் போகிறோம். “நான் தலை, நீ வால்” என்பதல்ல எங்கள் வேலைப்பகிர்வுத் திட்டம். “நாங்கள் வேலைக்காரர்கள், தமிழ் மக்கள் எசமானர்கள்” என்பதே எங்கள் முறை! “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்கிறது தமிழர் வேதம். தோழர் தி. வேல்முருகன் எங்களின் தலைமைப் பணியாளராக வேலை செய்வார். நான் என்னையும் ஒரு வேலைக்காரனாக இந்தப் படையில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். வணக்கம்!
சுப. உதயகுமாரன்