தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கினாலும் நவம்பர் மாதத்தில்தான் தீவிரமடைந்தது. கடந்த நான்கு தினங்களாகத் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. மாநிலத்தின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வெகு வேகமாக நகரமயமாகிவருகிறது. நகரங்கள் கட்டிடங்களாலும் சாலைகளாலும் உருவாக்கப்பட்டவை. நீராலும் மின்சாரத்தாலும் இயங்குபவை. ஆனால், நமது நகரங்களால் பெருமழையை எதிர்கொள்ள முடியவில்லை.
புத்தாயிரமாண்டுக்குப் பிறகு சென்னை 2004-லும், மீண்டும் 2015-லும் பெருவெள்ளத்தை எதிர்கொண்டது.
சென்னையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. ஒரு கன மழைக்கே சென்னை வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. மக்கள் படகுகளில் பயணிக்க வேண்டிய நிலை வந்துவிடுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, புறநகர் பகுதிகள் என சென்னை பெருநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
ஏரிகள் சூழ்ந்த சாலைகள்
சென்னையில் பல ஏரிகள் காணாமல் போனதும் வெள்ளத்திற்கு காரணமாக இருக்கிறது. பெருநகராட்சி என்ற சொல்லப்படுகிற இன்றைய சென்னை முந்தைய காலத்தில் ஏரிகளாகவும் விவசாய நிலங்களாகவும் இருந்தன. நகரமயமாக்கம், வடிகால்கள் முறையாக அமைக்கப்பட்டு அதற்கு வழிவிட்டு அமைய வேண்டும்.
ஆனால் அப்படி அமையவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சாலையின் விரிவாக்கத்திற்காக வடிகாலை சுருக்கி இருக்கிறார்கள். தண்ணீர் செல்லும் அளவிற்கு வடிகால்கள் இல்லை. அயனாபுரம் ஏரி, பெரம்பூர் சித்தேரி ஏரி, மேடவாக்கம் ஏரி போன்றவை காணாமல் போயிருக்கின்றன.
அந்த ஏரிகளில் தங்க வேண்டிய தண்ணீர்தான் அங்கே தங்க வழியில்லாமல் ஒட்டுமொத்த சென்னையையும் ஏரியாக மாற்றியிருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.
சமீபத்தில் கூட வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என்றும் மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால், அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. நீர் நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.
நீர் நிலைகள் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் தேவைதான். ஆனால், அதற்காக நீர் நிலைகளையும், வனப்பகுதிகளையும் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் அழித்துவிடக்கூடாது.
சென்னையில் பாதிக்கப்பட்ட ஏரிகள்:
வில்லிவாக்கம் ஏரி.. 1972-ஆம் ஆண்டு இதன் பரப்பளவு 214 ஏக்கராக இருந்தது.
இப்போது 20 ஏக்கராக அதன் எல்லையைச் சுருக்கிக் கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ‘சிட்கோ’ தொழிற்பேட்டையும், சிட்கோ நகரும் இந்த ஏரிக்கரையில் விரிவடைந்ததே இதற்குக் காரணம்.
2005-இல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பெரும்பாலான வெள்ள நீரை இந்த ஏரிதான் தக்கவைத்தது. அதனால், பெரிய பாதிப்புகள் இப்பகுதியில் அப்போது ஏற்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் இந்த ஏரி பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் 2015 -இல் வெள்ளநீரை இந்த ஏரியில் தேக்க முயற்சித்தபோது சிட்கோ நகரை 15 நாள்கள் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
கொரட்டூர் ஏரி: 600 ஏக்கர் பரப்பளவில் இந்த நன்னீர் ஏரி விரிந்துள்ளது. நீர்வளம் மிக்க இந்த சதுப்பு நிலப் பகுதி பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குப்பைக் கொட்டும் இடமாக மாறியுள்ளது. சதுப்புநிலத்தைச் சுற்றி இடைப்பட்ட மண்டலப் பகுதி இல்லாததால் குடியிருப்புப் பகுதிகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. அதனால், சதுப்பு நிலத்தின் எல்லைகள் குறைந்து வருகின்றன.
நாராயணபுரம் ஏரி: பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி 200 அடி ரேடியல் சாலையாலும், பேட்மிண்டன் திடல், கோயில் போன்றவற்றாலும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. இந்த ஏரியின் கொள்ளளவு உயர வேண்டுமெனில் ஆகாயத் தாமரைகள் நீக்கப்பட வேண்டும்.
கீழ்க்கட்டளை – நாராயணபுரம் ஏரிகளை இணைக்கும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மையான அகலம் 60 அடி. ஆனால், தனியார் குடியிருப்புகள் கால்வாயின் அகலத்தை 40 அடியாகக் குறைத்து ஆக்கிரமித்துள்ளன.
பல்லாவரம் பெரிய ஏரி: மேற்கு குரோம்பேட்டை, கிழக்கு குரோம்பேட்டையைப் பல்லாவரம் பெரிய ஏரியில் இணைப்பதற்கு 2 பெரிய நீர்க் கால்வாய்கள் உள்ளன. இதில் கட்டபொம்மன் கால்வாய் 33 அடியிலிருந்து 7 அடி நீளமாக குறையும் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. துர்கை அம்மன் கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு வரை நீளும் இந்தக் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பே இப்பகுதிகளில் வெள்ளம் வருவதற்குக் காரணம். குரோம்பேட்டையைப் பல்லாவரம் பெரிய ஏரியுடன் இணைக்கும் கால்வாய்கள் 30 முதல் 60 அடி வரை அகலமாகக் காணப்பட்டன.
இந்நிலையில் குரோம்பேட்டைப் பகுதியில் இருக்கும் ஏரியின் 70 சதவீதப் பரப்பு குடியிருப்புகளாக மாறியுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: 60 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்தச் சதுப்பு நிலத்தின் இப்போதைய பரப்பு 1,500 ஏக்கர்தான். பள்ளிக்கரணைக்கும், வேளச்சேரிக்கும் இடைப்பட்ட இப்பகுதி 2015 டிசம்பர் வெள்ளத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். நிபுணர்கள் இப்பகுதி குடியிருப்புகளுக்கு உகந்ததில்லை என்று தெரிவித்தாலும், தொடர்ந்து இப்பகுதியில் பெரிய குடியிருப்புகள் எழுப்பப்படுகின்றன.
திருப்பனந்தாள் ஏரி: திருப்பனந்தாள் ஏரியையும் அடையாறையும் இணைக்கும் கால்வாய் மிக மோசமாக கட்டடங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்தக் கால்வாயில் நீரோட்டம் ஏறக்குறைய முழுமையாக தடைப்பட்டுள்ளது.
சிட்லபாக்கம் ஏரி: பாசனத்துக்குப் பயன்பட்டு வந்த சிட்லபாக்கம், செம்பாக்கம் ஏரிகளில் இருக்கும் நீர், செம்பாக்கம், அஸ்தினாபுரம் பகுதி உள்ள நீர் தொட்டிகளில் நிரப்பப் பயன்படுத்தப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக, இந்த ஏரிகள் குப்பைகள், மருத்துவமனைக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. இதனால் 80 ஏக்கர் பரப்பளவில் இருந்த சிட்லபாக்கம் ஏரி 40 ஏக்கராக குறைந்துள்ளது.
நடவடிக்கை எடுக்குமா அரசு?
தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்கும் ஏரிகள் சுரண்டப்பட்டதிற்கும் சம்மந்தம் இல்லாமல் இல்லை. நிலத்தடி நீரின் அளவை உயர்த்த உதவும் இந்த ஏரிகளை மக்களும் அதிகாரிகளும் முறையாக பராமரித்து இருந்தால், தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை உருவாகியிருக்காது என்பதே நிதர்சன உண்மை.
ஆனால் இவை அனைத்தையுமே அரசாங்கம் பார்த்து கொண்டும், அனுமதி வழங்கி கொண்டும்தான் இருக்கிறது.
2019 ஆண்டில் பெரிய ஏரியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு தண்ணீர், கழிவு நீர் வசதியை பல்லாவரம் நகராட்சி அளித்துள்ளது.
ஏரிகளின் கட்டுப்பாடு பொதுப்பணி துறையிடம் இருந்தாலும், மறுசீரமைப்பு வேலைகளுக்கு தடையில்லா சான்றிதழை பல்லாவரம் நகராட்சி பொதுப்பணி துறையிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. “இரண்டு ஏரிகளையும் சீரமைக்கும் பணி நகராட்சியிடம் தான் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை,” என்கிறார் அத்துறையினை சேர்ந்தவர்கள்.
2016 ஆம் ஆண்டு முழு சீரமைப்பு பணிகளையும் முடிக்க நகராட்சி உறுதி அளித்தது. பல்லாவரம் மற்றும் கீழ்கட்டளை ஏரிகளை சீரமைக்க டிசம்பர் 2017ல் மாநில அரசு பதினைந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. மேலும், பல்லாவரம் ஏரியில் உள்ள குப்பைகளை முறையாக அகற்ற ஏழு கோடி ரூபாய் ஒதுக்கியது.ஆனால், அடிப்படை தொடக்கமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை; கீழ்கட்டளை ஏரி இன்னும் தூர்வாரப்படவில்லை.
ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.இந்த வழக்குகள் குறித்து ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் அரசுக்கு நோட்டீஸ் கொடுத்து, வழக்குகள் நடைபெற்றுதான் வருகின்றன. ஆனால் எரிகள் மீதான ஆக்கிரமிப்பு குறைந்தபாட்டிலை.
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தை தமிழக அரசு கடந்த 2007ம் ஆண்டு கொண்டுவந்தது.
இந்த சட்டத்தின்படி தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை அளவீடு செய்து அது சம்பந்தமான பதிவேடுகளை தயாரிக்க வேண்டும். வருவாய் ஆவணங்கள் அடிப்படையில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் கண்டறியப்பட்டு அவை மீண்டும் கையகப்படுத்தப்பட வேண்டும்.
அவற்றை ஆவணங்களில் உள்ள கணக்குகளின்படி அளவீடு செய்ய வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகியும் இந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.இவற்றை தற்போது அமல்படுத்த வேண்டும்.
கடந்த 2017-18ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்கக் குறிப்பின்படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவற்றில் 14,098 ஏரிகள் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த துறையின் கீழ் உள்ள 21 துணை மண்டலங்களில் உள்ள ஏரிகள் சர்வே செய்யப்படவில்லை.
கீழ் பாலாறு துணை மண்டலம், திருவள்ளூர் கொசஸ்தலை ஆறு மண்டலம், உள்ளிட்ட மண்டலங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஏரிகளில் மட்டுமே சர்வே செய்யப்பட்டுள்ளன.
சர்வே செய்யப்பட்டுள்ள இடங்களில் கூட அரசு அரை மனதுடன், உரிய முறையில் இல்லாமல் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமே என்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது. ஏரிகளின் பரப்பு, ஆக்கிரமிப்புகள் குறித்த சரியான தகவல்களைக் கூட அரசு தெரிவிக்க மறுக்கிறது.இவை அனைத்தும் சரியான முறையில் நடக்க வேண்டும்.
இவ்வாறு ஏரிகளை ஆக்கிரமித்து அதன் வழிகளில் செயற்கையாக நாம் ஒரு வழி அமைக்கும் போது இயற்கை அதன் இடத்தை தேடி தானே வரும் போது அது கொடுக்கக் கூடிய இடர்பாடுகளை சந்தித்தே ஆக வேண்டும்!
நகரப்பகுதியிலுள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி மற்றும் பொதுப்பணித்துரை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.இதனை தற்போது அமைந்துள்ள திமுக அரசும் உறுதிபடுத்த வேண்டும்!
-தமிழினி சகுந்தலா