![images - 2025-02-03T164213.395](https://www.desathinkural.com/wp-content/uploads/2025/02/images-2025-02-03T164213.395.jpeg)
இந்தியா சனவரி 26ஆம் நாள் 75ஆம் குடியரசு நாளைப் புதுதில்லியிலும், மாநிலங்களின் தலைநகரங்களிலும் சிறப்பான முறையில் விழா எடுக்கப்பட்டது.
இந்தியா குடியரசு நாடு மட்டுமன்று, ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும் அரசமைப்புச் சட்டம் பறைசாற்றுகின்றது.
மதம் சார்ந்த நிகழ்வுகளை அரசே முன்னின்று நடத்தலாமா?
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இத்தகைய நிகழ்வுகளை மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கலாமா?
இதனால் யாருக்குப் பலன்?
யாருக்குக் கேடு? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
கும்ப(ல்) மேளா நிகழ்வுகளில் ஏற்படும் உயிர்ச்சேதங்கள் உட்பட இயற்கை வளங்களை அழிக்கும் பேராபத்துகளைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையல்லவா?
![](https://www.desathinkural.com/wp-content/uploads/2025/02/images-2025-02-03T164332.855.jpeg)
6 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று பல ஆறுகள் பாயும் பகுதிகளில் கும்ப(ல்) மேளாக்கள் நடத்தப்படுகின்றன.
வேதங்களில் இது பற்றிக் குறிப்புகள் உள்ளன என்று பலர் பல கதைகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர்.
ஒன்றை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.
மானுட நாகரிகம் தோன்றிய காலம் முதல் பாயும் ஆறுகள்தான் வேளாண் துறைக்கு, தூய்மையான குடிநீருக்கு வாழ்வாதாரங்களாக அமைந்தன.
இன்றும் அமைந்து வருகின்றன.
![](https://www.desathinkural.com/wp-content/uploads/2025/02/images-2025-02-03T164242.584.jpeg)
ஆறுகள் பாயும் ஹரிதுவார், பிராயக்ராஜ், நாசிக், உஜ்ஜயின் போன்ற நகரங்களில் மூடநம்பிக்கைகளை ஊட்டி வளர்க்கும் நிகழ்வுகள் போற்றப்படுகின்றன.
தமிழ்நாட்டிலும் கும்பகோணத்தில் குளக்கரையில் மகாமகம் என்ற பெயரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
1945இல் நடைபெற்ற மகாமக நிகழ்வின் போது திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா (அக்காலக்கட்டத்தில் வெளி வந்த “அண்ணாவின் சொல்வன்மை” என்று நூலில்,)
“மகாமக காலத்தில் மகாமக ரிஷிகள் வருவார்கள். ஆடையின்றி வருவோர் பலர், அரையாடையோடு வருவோர் பலர், கும்பகோணம் குளத்தில் குளித்தால் சொர்கம் செல்லலாம், மோட்சம் அடையலாம் என்று சொல்வோர் பலர்.
ஆனால் கும்பகோணம் முனிசிபாலிடி அறிவிப்பைக் கண்டு சிலராவது விழித்துக் கொள்ள வேண்டாமா?
மகாமக குளத்தில் நீரின் பாதுகாப்பிற்காக குளோரின் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டுள்ளது.
கும்பகோணம் நகரைச் சுற்றி காலரா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெருக்களின் ஓரங்களில் பூச்சிக்கொல்லி (Dichloro diphenyl trichloroethane-DDT) பரப்பப்படுகின்றன. பயப்பட வேண்டாம் மக்களே, வாருங்கள் மக்களே, வாருங்கள் மகாமகத்திற்கு என்று கும்பகோண முனிசிபாலிடி எச்சரிக்கை அறிவிப்புகளும் அங்கே இடம் பெற்றுள்ளன.
இதற்குப் பெயர்தான் புனித நீராடலா? புனிதர்கள் கால்பட்ட உடனே நோய்கள் காணாமல் போகவில்லையே. பகுத்தறிவோடு சிந்தியுங்கள். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் களம் காணுங்கள்” என்ற அறிவைத் தூண்டும் அறிஞர் அண்ணாவின் அருமையான ஒரு உரை இடம் பெற்றிருந்தது.
கும்ப(ல்) மேளாக்களால் நாட்டிற்கோ, பொருளாதாரத்திற்கோ என்ன பயன்?
ஆனால், கும்ப(ல்) மேளாவிற்காக நாட்டு மக்களின் வரிப்பணம் பல ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்படுகின்றன.
சங்கிகள் குறிப்பிடும் இந்துக்கள் மட்டும்தான் இந்தியாவில் வரி செலுத்துகிறார்களா?
இந்தியாவில் புத்தம், இசுலாம், கிறித்தவம், சீக்கியம் போன்ற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மக்கள்தொகையில் 20 விழுக்காட்டிற்கு மேல் உள்ளனர்.
இம்மதத்தினரும் நேர்முக, மறைமுக வரிகளைச் செலுத்துகிறார்கள் அல்லவா?
போதிய கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ளனர்.
மானுட மேம்பாட்டுக் குறியீடுகளின் (2022) அடிப்படையில் இந்தியாவின் கடைசி மூன்று மாநிலங்களாக உத்திர பிரதேசம், ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இத்தகைய நிலையில் உத்திரபிரதேச பாஜக மாநில அரசுக் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.5435 கோடி ரூபாய் அளவிற்குக் கும்ப(ல்) மேளாவிற்கு ஒதுக்கியுள்ளது.
ஒன்றிய பாஜக அரசு ரூ.2100 கோடி ரூபாய் அளித்துள்ளது. இத்தனை கோடிகள் செலவிட்ட பிறகு கும்ப(ல்) மேளாவால் நாட்டில் உற்பத்தி பெருகுமா? நோய்கள் குறையுமா? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.
![](https://www.desathinkural.com/wp-content/uploads/2025/02/images-2025-02-03T164320.246.jpeg)
2025 சனவரி 13 தொடங்கி பிப்ரவரி 25 வரை 45 நாட்கள் கங்கை, யமுனை ஆறுகள் சந்திக்கும் இடத்தில் கோடிக்கணக்கான மக்கள் கும்பல் கும்பலாகக் குளிக்கின்றனர்.
இன்னொரு பொய்யும் இதில் மறைந்திருக்கிறது. சரசுவதி என்கிற நதியும் இங்கு வந்து சந்திக்கிறதாம். புவியியல் ஆய்வுகளில் இந்த நதி எங்கிருந்து உற்பத்தி ஆகிறது என்று யாராவது குறிப்பிட்டுள்ளார்களா?
பாயும் ஆறுகளின் வேகத்தைவிட விரைந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து மக்களை மடமையில் வீழ்த்துகிற சங்கிக் கூட்டங்கள் நடத்தி வரும் பரப்புரைகளை வேறு எந்த நாட்டிலும் காண முடியுமா?
2025 சனவரி 14ஆம் நாள் தொடங்கிய இந்தக் கும்ப(ல்) மேளாவில் 80 லட்சம் மக்கள் இந்த இரு ஆறுகளிலும் குளிக்கத் தொடங்கினர்.
45ஆம் நாளின் முடிவில் 40 கோடி மக்கள் ஒட்டுமொத்தமாகக் குளித்திருப்பார்கள் என்று கணக்கிடப்படுகிறது.
பிரயாக்ராஜ் நகரில் சுற்றிப் பல கிலோ மீட்டர்களுக்கு ஏராளமான தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுத் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒன்றிய அரசின் அகில இந்திய வானொலி; நாள்தோறும் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் இது ஒரு பெரும் பண்பாட்டு விழா என்று கயிறு திரிக்கிறது.
ஆனால் சனவரி 29 அமாவாசை அன்று இந்தப் பண்பாட்டு விழாவில் இந்தியா கண்டதென்ன?
30க்கு மேற்பட்டவர்கள் கும்பல் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டனர்.
60க்கு மேற்பட்டோர்
படுகாயமடைந்துள்ளனர்.
இதுதான் சங்கிகள் காணும் பண்பாடு!
இதைப் பற்றி சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது ஒன்றிய அமைச்சர்கள், அரசியல், திரையுலகப் பிரபலங்கள் குளிப்பதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்ததனால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பாவி மக்கள் இறந்தனர். மேலும் குளிக்கச் சென்ற பல இலட்சம் ஏழை, எளிய மக்கள் கும்ப(ல்) மேளா பகுதிக்குப் பல கீலோமிட்டர்கள் நடைப்பயணமாக வந்தும் அவர்கள்; தடுத்து நிறுத்தப்பட்டனர் என்ற செய்திகளையும் குறிப்பிட்டுள்ளன.
நாகா சாமியார்கள், மனித மாமிசத்தை உண்ணும் அகோரிகள், கழுத்தில் மண்டை ஓடுகளுடன் கூடிய சாமியார்கள், நிர்வாணச் சாமியார்கள் ஆகியோர் கும்ப(ல்) மேளாவிற்குப் படையெடுத்து அந்தப் பகுதியில் அருவருக்கத்தக்க வகையில் அவர்கள் போடும் ஆட்டம் பாட்டங்கள் பற்றி நாள்தோறும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
அவர்களின் தோற்றங்களைப் பார்த்தால் அவர்கள் குளித்தது கடந்த கும்ப(ல்) மேளாவில்தான் என்பதை அறிய முடிகிறது.
கும்ப(ல்) மேளா குளியல் தொடங்கிய அதே நேரத்தில், விண்வெளியில் தனித்தனியாக அனுப்பிய இரண்டு செயற்கைக் கோள்களை சனவரி 16 அன்று வான் வெளியில் இந்திய வான்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக இணைத்தது.
விண்வெளி ஆய்வில் இணைப்பு நிகழ்வை நிகழ்த்திய அமெரிக்கா, இரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக நான்காவது நாடாக இந்தியா இச்சாதனையைப் படைத்துள்ளது.
மத மாயையின் பெயரில் மூட நம்பிக்கை என்னும் முட்டாள்தனத்தின் உச்சியில் அமர்ந்து இது போன்ற சுகாதாரக் கேடுகளை உருவாக்கும் கும்ப(ல்) மேளாக்களை மேற்கூறிய மூன்று நாடுகளில் காண முடியுமா?
அல்லது அந்த நாடுகளின் அரசுகள் இதுபோன்று சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நிகழ்வுகளை ஊக்குவிக்கின்றனவா? என்பதை மக்களும் ஒன்றிய அரசும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
முந்தைய கும்ப(ல்) மேளாக்கள் நடத்தப்பட்டதால் ஏற்பட்ட பலன்கள் என்ன?
2021ஆம் ஆண்டு கொரானா பெருந்தொற்றுத் தாக்கிய போது, பாஜகவின் ஒன்றிய மாநில அரசுகள் தகுந்த பாதுகாப்போடு புனித நீராடல் நிகழ்ச்சி ஹரித்துவாரில் தொடரும் என்று அறிவித்து நடத்தின.
பல இலட்சம் பேர் புனித நீராடிய சில நாட்களுக்குப் பிறகு ஒரு இலட்சம் மக்கள் கொரானா நோயால் தாக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து 4 இலட்சம் பேர் புதிதாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கங்கை ஆற்றில் ஏராளமான பிணங்கள் மிதந்ததை ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால் இச்செய்திகள் அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்டன. சான்றாக, மற்ற நாடுகளில் கொரானா பரவிய காலக்கட்டத்தில் எத்தகைய நடவடிக்கைகளை அரசுகள் எடுத்தன. ஜப்பான் நாட்டில் 2020இல் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி ஓராண்டிற்குப் பின்புதான் நடைபெற்றது.
உலக அளவில் அதிக மாசடைந்த பத்து ஆறுகளில் கங்கையும், யமுனையும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
பிரதமர் மோடி 2014இல் பதவி ஏற்றப் பிறகு கங்கையைத் தூய்மைப்படுத்துவோம் என்று முழங்கினார். இதுவரை ஒன்றிய அரசு 22000 கோடி ரூபாயைத் தூய்மைப்படுத்தச் செலவிட்டுள்ளது.
ஆனால் கும்ப(ல்) மேளா நடக்கும் பிராயக்ராஜ் நகரின் பல பகுதிகளில் கங்கையில் கழிவு நீர், தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுகள் இன்றளவும் கலக்கப்பட்டு நீரில் உள்ள மாசின் அளவு உயர்ந்து வருகிறது.
இத்தகைய உண்மைகளைப் பல சமூகச் செயல்பாட்டு அமைப்புகள் பல வகையான மாசு கூறுகளைக் கண்டறிந்து தரவுகளோடு சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றன. இவற்றை உத்திரபிரதேசத்தின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்துள்ளது.
அதே போன்று 2024 அக்டோபர் மாதப் பெரு மழையின் போது புது தில்லியில் யமுனை ஆறு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, பல்வகையான இரசாயன கழிவுகள், மாசுகள் இருந்தன என்பதைப் பல ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன. இதன் தொடர்பாகத்தான் சிலநாட்களுக்கு முன்பு புது தில்லியில் தேர்தல் பரப்புரையின் போது ஆம்ஆத்மியின் தலைவர் கெஜ்ரிவால் யமுனை ஆற்றில் அமோனியா அதிக அளவில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதை உரிய நேரத்தில் தடுத்ததனால்தான் யமுனை நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் பல ஆயிரம் மக்கள் உயிரிழப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில் பிப்ரவரி இறுதியில், பல கோடி மக்கள் கங்கை யமுனை ஆறுகளின் இணைப்பில் கும்ப(ல்) மேளா மத மாயைக்குளியல் போடுவதால் பெருமளவிற்கு நீரானது மாசடைந்துவிடும்.
இதன் தொடர்பாகச் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், அமைப்புகளும் 2013 சனவரி 14 அன்று அன்றைய அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) நடந்த கும்ப(ல்) மேளா குளியலால் நதி நீர் பெருமளவிற்கு மாசடைந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கும்ப(ல்) மேளாவிற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட ஆற்று நீரை ஆய்வுக்கு உட்படுத்தின. கும்ப(ல்) மேளா குளியலுக்குப் பிறகு உயிர்க்கொல்லி இரசாயன மாசுகள் அதிகரித்தன என்பதை இவ்வமைப்புகள் பல தரவுகளோடு வெளியிட்டன.
இத்தகைய பின்னணியில் அறிவியல் கண்ணோட்டத்தோடும், நதி நீர் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடும் செயல்பட்டு வரும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஏற்கனவே மாசடைந்து வருகின்ற கங்கை, யமுனை நதிகளின் நீரானது கும்ப(ல்) மேளா குளியலுக்குப் பிறகு மேலும் மாசடையும் என்று குறிப்பிடுகின்றன.
மேலும், இந்நதிகளில் வாழ்ந்து வரும் அரிய தாவர, நீர்வாழ் உயிரினங்களின் பெரும் எண்ணிக்கையில் அழிந்துவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளன.
இத்தகைய அறிவியல் கூறுகளை எல்லாம் சில ஊடகங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் கும்ப(ல்) மேளாவிற்கு வரும் கூட்டத்தைப் பெரிதுபடுத்தி உலகில் நடைபெறாத ஓர் அதிசயம் நடைபெறுவது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தைப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் புகுத்தி வருகின்றன.
இந்த மகா கும்ப(ல்) மேளா இயற்கைக்கு எதிரானது. கால நிலை மாற்றங்களால் ஏற்படும் அழிவுகளை மேலும் விரைவுபடுத்தும். பல்லுயிரின வளர்ச்சிக்குப் பெரும் கேடுகளை விளைவிக்கும்.
மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளை வளர்த்து மக்களின் கல்வி, அறிவியல் சிந்தனைகளைச் சிதறடிக்கும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ‘அடிப்படைக் கடமைகள்’ 51ஏ(எச்) பிரிவில் சுட்டப்பட்டுள்ள “சீர்திருத்தம், ஆய்வு எண்ணம், மனிதாபிமானம், அறிவியல் மனப்பான்மை” ஆகிய உயர் நெறிகளுக்கு முற்றிலும் எதிராக அமையும் என்பதை நடந்து முடிந்த கும்ப(ல்) மேளாக்களைப் பற்றிப் பல ஆய்வுத் தரவுகள் மெய்ப்பித்து விட்டன.
செயற்கை நுண்ணறிவும், எண்ணுருவும் மேலோங்கி உலக நாடுகள் அறிவியல் வளர்ச்சியில் போட்டியிடும் இக்காலத்தில் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடுகளைக் குவிக்கும் இத்தகைய கும்ப(ல்) மேளாக்கள் நாட்டிற்குத் தேவையா?
பேராசிரியர் மு நாகநாதன்
(பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை)