
சாதிய வன்கொடுமைகளும் தாக்குதல்களும் ஆணவக்கொலைகளும் நடைபெறும்போதெல்லாம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்; ‘இதுதான் பெரியார் மண்ணா?’ என்று பரிகசிக்கிறோம்; ஆளும் திராவிடக் கட்சிகளைக் குற்றம் சாட்டுகிறோம். நிச்சயம் இவையெல்லாம் தேவைதான். அரைநூற்றாண்டுக்கும் மேல் தமிழ்நாட்டை ஆண்டுள்ள திராவிடக்கட்சிகள் இதற்குப் பதில் சொல்லும் பொறுப்புள்ளவை என்பதில் சந்தேகமில்லை. இட ஒதுக்கீடு, மக்கள் நலத்திட்டங்கள் என்பவை மட்டுமே பட்டியலின, பழங்குடியின மக்களை முன்னேற்றிவிட முடியாது; அவை மட்டுமே சமூகநீதி கிடையாது என்பது உண்மை. அதேபோல் இட ஒதுக்கீடும் மக்கள்நலத்திட்டங்களும் வாழ்வு மேம்பாட்டுக்கும் பிரதிநிதித்துவத்துக்கும் உதவுமே தவிர அவையே சாதி ஒழிப்புக்கும் சமத்துவத்துக்கும் முழுக்காரணமாக அமைந்துவிடாது.
இத்தகைய விமர்சனங்களை முன்வைக்கும் அதேநேரம், சமீபகாலமாக சாதியமனநிலைக்கும் வன்முறைக்குமான காரணங்கள் குறித்தும் தளம் குறித்தும் யோசிக்கவேண்டும்.
புத்தகவாசிப்பு என்பது குறைந்து சமூகவலைத்தளங்களே அதிகம் செல்வாக்கு செலுத்தும் காலத்தில் சாதிவெறி, மதவெறிக்கருத்துகள் மிகவேகமாகப் பரவுகின்றன. குறிப்பாக இவற்றில் பெரும்பான்மை பொய்ச்செய்திகள், ஆதாரமற்ற அவதூறுகள் என்பதில் சந்தேகமில்லை. மாற்று இயக்கங்களின் சிறுவெளியீடுகளால் அரசியல் உணர்வு பெற்றவர்கள் இருந்த ஒருகாலமிருந்தது. இப்போதோ வாட்ஸ்-அப் மூலம் அரசியல்’ கற்கும் தலைமுறைதான் அதிகம். ஒரு தெருமுனைக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, காவல்துறை அனுமதி பெற்று, நிதி திரட்டி நடத்தி முடிவதற்கு ,முன் ஒரு பொய்யான வாட்ஸ்-அப் செய்தி வேகமாகப் பரவிவிடுகிறது.
பெரியார் இடைநிலைச்சாதிகளின் தலைவர் என்று விலகல்வாத தலித்தியவாதிகள் விமர்சிக்கிறார்கள். ஆனால் இன்று இடைநிலைச்சாதிச்சங்கங்களில் பெரும்பாலானவை பெரியார் வெறுப்பு, திராவிட எதிர்ப்பு கொண்டவை. இந்துத்துவத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொண்டவை. சமூகவலைத்தளங்களின் மூலம் இந்தச் சாதிய அமைப்புகள் ஆண்ட பரம்பரைக் கதைகளைப் பரப்பி சாதியப்பெருமித வெறியூட்டுவதுடன் ‘இட ஒதுக்கீடு என்றாலே அது எஸ்.சி மக்களுக்குத்தான்’, ‘திராவிடக்கட்சிகள் தங்கள் சாதிகளுக்குத் துரோகம் செய்துவிட்டன’ என்றே பரப்புரை செய்கின்றன. அப்புறம் திராவிடக்கட்சிகள் ஊழல் கட்சிகள், ஈ.வெ.ரா தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்துகொண்டார் என்பதுபோன்ற முழுப்பொய், அரைகுறை உண்மைகளைப் பரப்புகிறார்கள். நம்முடைய பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப வாட்ஸ்-அப் குழுமங்களில் இத்தகைய கருத்தியலின் தாக்கம் பெற்ற ஒரே ஒருவரையாவது சந்தித்து மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது என்பதுதானே எதார்த்தம்!
இந்துத்துவ அரசியல் இதை மிகச்சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. ஒருபுறம் திராவிட அரசியலுக்கு எதிரான விலகல்வாத தலித்திய மற்றும் சாதிய தமிழ்த்தேசிய விமர்சனங்களைப் பயன்படுத்திக்கொள்கிறது. இன்னொருபுறம் பெரும்பான்மைச் சாதிகளிடம் சாதிப்பெருமிதம், சிறுபான்மையினர் வெறுப்பு, இந்துமதவெறி, திராவிட மற்றும் கம்யூனிச எதிர்ப்பை விதைக்கிறது. சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
‘சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தலித்துகளைச் சேர்க்காததற்கு எதிராக பெரியார் ஒன்றுமே செய்யவில்லை’ என்று விலகல்வாத தலித்தியவாதியான ஏ.பி.ராஜசேகரன் காலச்சுவடில் எழுதிய கட்டுரையை அப்படியே பிரதியெடுத்து, இந்துத்துவவாதியான ம.வெங்கடேசன் ஒரு நாளிதழில் எழுதினார். (பிறகு கலி.பூங்குன்றன் அதே நாளிதழில் அதற்கு மறுப்பெழுதினார் என்பது வேறுவிஷயம்). ம. பொ.சி ‘திராவிடர்கள்’ குறித்துப் பேசியதை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திலேயே மேற்கோள் காட்டிப்பேசுகிறார்.
தலித் தரப்பிலிருந்தோ தமிழ்த்தேசியத் தரப்பிலிருந்தோ பெரியார் மீதும் திராவிட இயக்கம் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களில் நியாயமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ‘இந்துத்துவவாதிகள் அதைப் பயன்படுத்துவதால் நாங்கள் விமர்சிக்கவே கூடாதா?’ என்று அவர்கள் கேட்டால் நிச்சயம் அது நியாயமான கேள்விதான். ஆனால் அவர்கள் திராவிட அரசியலை விமர்சிப்பதில் காட்டும் முன்னுரிமையை இந்துத்துவ அரசியலை விமர்சிப்பதில் காட்டுவதில்லை என்பதையும் உணர வேண்டும்.
ஒருபுறம் திராவிட இயக்கத்தைத் தலித்துகளுக்கு எதிராகக் காட்டும் இந்துத்துவவாதிகள்தான் இன்னொருபுறம் இடைநிலைச்சாதிகளிடம் திராவிட அரசியல் அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு தலித்துகளுக்குச் சாதகமாகச் செயற்படுவதாகவும் பரப்புரை செய்கின்றனர். ‘சாதிமறுப்புத் திருமணத் தம்பதிகளுக்கு நிதியுதவி’ என்னும் தமிழ்நாடு அரசுத்திட்டத்தில் தம்பதியில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்’ என்னும் நிபந்தனை கலைஞர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. ஆனால் ‘இந்த உதவித்தொகை அதிகரிக்கப்படும்’ என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை முன்வைத்து, ‘நாடகக்காதலைத் தி.மு,க வளர்க்கிறது’ என்று 2021 சட்டமன்றத் தேர்தலின்போது பா.ஜ.கவினர் பிரச்சாரம் செய்தனர். ஒருபுறம் ‘பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்திருக்கிறது’ என்று புகார் கொடுப்பதன் மூலம் தலித்துகளுக்கு ஆதரவாகக் காட்டிக்கொள்வது, இன்னொருபுறம் மோகன் ஜி படத்துக்கு முன்வரிசையில் அமர்ந்து ஆதரவு கொடுப்பது என இரட்டைவேடத்தை இந்துத்துவாதிகள் மேற்கொள்கின்றனர். இந்த இந்துத்துவத்தின் ஆதரவுடன்தான் இப்போது வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பெரும்பான்மை சாதிவெறி வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதை உணரவேண்டும்.
இன்னொருபுறம் திராவிட அரசியலையும் கம்யூனிஸ்ட்களையும் தலித் அறிவுஜீவிகள் விமர்சிப்பதைப்போல் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் தலித் இயக்கத்தலைவர்களையும் ஆளுமைகளையும் விமர்சிக்கவேண்டும். இவர்கள்தான் இந்துத்துவ அரசியல் இரட்டைவேடத்தின் காப்பாளர்கள். மிகச்சிறந்த உதாரணம், ‘மாமன்னன்’ படம் குறித்து சமீபத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி வெளியிட்ட வீடியோ.
‘ரத்தினவேலு’ மீம்ஸ்களையும் வீடியோக்களையும் அகற்ற பகத் பாசில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்’ என்ற வினோதமான கோரிக்கையை முன்வைத்ததுடன் அவர் பேச்சில் பல ஆபத்தான அம்சங்களிருந்தன.
‘தேவர்மகன்’ குறித்து கமலை நோக்கி மாரி செல்வராஜ் எழுப்பிய கேள்விகளுக்கு உதயநிதிதான் காரணம், பட வியாபாரத்துக்காக அவர் இப்படி செய்கிறார் என்று குற்றம் சாட்டியதுடன் ‘ரத்தினவேலு வீடியோ’ மூலம் சாதிவெறியை ஊட்டுவதற்கும் உதயநிதியும் திமுகவும்தான் காரணம், ஓ.டி.டியில் பரபரப்படைவதற்கு இதைச் செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் ‘சாதியமோதலைத் தூண்டுவதே மாரிசெல்வராஜ் படங்கள்தான்’ என்றும் குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி ‘எல்லாச்சாதியினரும்ஒற்றுமையாகத் தமிழர்களாகவும் இந்துக்களாகவும் திரளாமல் இருக்கவே இது மேற்கொள்ளப்படுகிறது’ என்றும் சொல்லியிருந்தார். ‘கொடியங்குளம் சம்பவத்துக்குப் பிறகு மதம் மாற ஒடுக்கப்பட்ட மக்கள் தயாரானபோது அதைத் தடுத்து நிறுத்தியது தான்தான்’ என்றும் பெருமைபட தெரிவித்திருந்தார். ‘தென்மாவட்டங்களில் இப்போது சாதி வேறுபாடெல்லாம் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக சாதிவேறுபாடில்லாமல் வாழ்கின்றனர்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வது எதார்த்தமில்லை என்பதற்கு நாங்குநேரியே சாட்சி.
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, சமத்துவக்கருத்துகளைப் பரப்பவேண்டியது முன்னெப்போதைவிடவும் இப்போது அவசியம். இதற்கு அரசு, பள்ளிக்கல்வித்துறை, முற்போக்கு இயக்கங்கள் என எல்லோரும் முயற்சிகள் எடுக்கவேண்டும். ஆண்டசாதி, அறிவுக்குடி, புராணக்கதைகள், தொன்மம், மாற்றுக்கதையாடல்கள் என எதன் பேராலும் சாதிப்பெருமிதத்தை இடைநிலைச்சாதிகள், ஒடுக்கப்பட்டவர்கள் என யார் முன்வைத்தாலும் அது சாதியை உறுதி செய்வதில்தான் முடியும்.