ஜெர்மனி நாட்டின் கிட்டங்கி ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கயிறுகளில் மோனோசைட் மண்துகள்கள் இருப்பதை 1905-ஆம் ஆண்டுவாக்கில் ஷோம்பர்க் (Schomberg) என்கிற ஜெர்மானியர் கண்டுணர்ந்தார். அந்தக் கயிறுகள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி எனுமூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதைக் கண்டுபிடித்து, ஜெர்மனி நாட்டவர் இங்கே வந்தனர். அந்தக் காலக்கட்டத்தில் மோனோசைட் கனிமத்தின் அங்கமான தோரியம் என்பது வாயு விளக்குகளில் தீப்பிழம்பை மூட்டும் வலைகள் (gas mantle) தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. விரைந்து செயல்பட்ட ஜெர்மன் நாட்டவர் 1911-ஆம் ஆண்டு திருவிதாங்கூர்-கொச்சி அரசின் ஒத்துழைப்புடன் மணவாளக்குறிச்சியில் மணல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினர். பின்னர் மின்சாரம் பரவலாக பயன்படுத்தப்பட்டபோது, வாயு விளக்குத் தொழில் நலிவடைந்தது. அத்துடன் மோனோசைட் கனிமத்தின் தேவையும் குறைந்தது.
முதல் உலகப் போரின்போது ஜெர்மானியர்கள் வசமிருந்த தாதுமணல் தொழிலை பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றினர். இந்திய விடுதலைக்குப் பிறகு 1956-ஆம் ஆண்டு மணவாளக்குறிச்சி ஆலையை தமிழ்நாடு அரசு ஏற்றெடுத்தது. தமிழகத்திலும், கேரளத்திலும் இயங்கிக் கொண்டிருந்த பல்வேறு மணல் ஆலைகளை ஒன்றிணைக்க இந்திய அரசு “திருவிதாங்கூர் தாதுமணல் நிறுவனங்கள்” எனும் அமைப்பினை உருவாக்கியது. பின்னர் கடந்த 1965-ஆம் ஆண்டு மேற்படி நிறுவனம் “இந்திய அரியவகை மணல் ஆலை” (Indian Rare Earths Limited) எனும் பெயரில் இயங்கத் தொடங்கியது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் பல கிராமங்களில் இந்த ஆலை கால்பதிக்கத் திட்டமிடுகிறது. கிள்ளியூர் வட்டத்தில் அமைந்திருக்கும் கீழ்மிடாலம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு எனும் ஐந்து கிராமங்களில் 1144.06 ஹெக்டேர் (2,827 ஏக்கர்) நிலப்பரப்பில் மோனோசைட், சிர்கான், இல்மனைட், ரூடைல், சிலிமானைட், லுகோக்சின், சிர்கான், கார்னெட் போன்ற அரியமணல் வகைகளை அகழ்வு செய்வதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் திட்டமிடுகின்றன. (கடற்படுகையில் அமைந்திருப்பவை தவிர்த்த) அனைத்து கனிமங்களும் மாநில அரசின் சொத்துக்கள் என்று பார்க்கப்படுவதால், மாநில அரசுகளே வணிக உரிமங்கள் வழங்குகின்றன. ஆனால் கனிமங்கள் அனைத்தையும் ஒழுங்கமைக்கும் மற்றும் மேம்படுத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுடையதாகவே இருக்கிறது.
தற்போது அணுக்கனிமச் சுரங்கத் திட்டம் எனும் கவர்ச்சியான ஒரு பெயரைச் சூட்டிக்கொண்டு இவர்கள் களமிறங்குகிறார்கள். மணவாளக்குறிச்சி ஆலை போதிய மூலப்பொருட்கள் இல்லாமல், கடந்த பத்தாண்டுகளாக நாற்பது விழுக்காடுக்கும் குறைவான நிறுவுதிறனோடு இயங்குவதால், இந்த விரிவாக்கம் கையிலெடுக்கப்படுகிறது. சுரங்கம் என்று அழைக்கப்பட்டாலும், புல்டோசர் மற்றும் டிப்பர் லாரிகளின் உதவியோடுதான் இந்த திறந்தவெளி மணற்கொள்ளை நடக்கப் போகிறது. அகழ்வு செய்யப்படவிருக்கும் நிலங்களை உரிமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்து, பதினோரு மாத காலம் மணல் அகழ்வுப் பணிகளை ஒரு புறமும், தாது நீக்கிய மணலை இட்டுநிரப்பும் பணிகளை இன்னொரு புறமும் ஒருசேர நடத்துவார்களாம். அதன் பின்னர் உரிய பங்களிப்புத் தொகையோடு அந்நிலங்கள் உரிமையாளர்களுக்கே மீண்டும் திருப்பிக் கொடுக்கப்படுமாம்.
இத்திட்டத்தின் காரணமாக மக்கள் இடம்பெயரத் தேவையில்லையாம். அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் அகற்றப்படமாட்டாவாம். நாளொன்றுக்கு 5,000 டன் மணல் வீதம், ஓராண்டில் 15 லட்சம் டன் மணல் அகழ்வு செய்யப்படுமாம். இந்த அகழ்வு நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறுமாம். சற்றொப்ப 6 கோடி டன் மணல் எடுக்கப்படுமாம். ஆச்சரியமான ஆச்சரியம் என்னவென்றால், மேற்படி நடவடிக்கையால் நிலத்தடி நீரில் எந்த பாதிப்பும் நிகழாதாம், யாருக்கும் நோய்கள் எவையும் வராதாம், எந்தவிதத் தீங்கும் நிகழாதாம்.
ஆனால் உண்மை என்ன? இந்த தாதுமணற் கொள்ளைத் திட்டம் மக்களுக்கும், பிற உயிர்களுக்கும், கடலுக்கும், ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்புக்களை உருவாக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
[1] சுற்றுச்சூழல் நாசமாகும்:
கன்னியாகுமரி மாவட்டத்தின் சூழியல் நலம் ஏற்கனவே மலையழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு, விளைநிலம் அழிப்பு என்பன போன்ற பிரச்சினைகளால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாதுமணல் திட்டம் கடற்கரை மற்றும் உட்பகுதிகளின் சூழியல் சமன்பாட்டைத் தகர்த்தழிக்கும். முதலில் கடற்கரையோரங்களில் வளரும் நீர் மற்றும் நிலத்தாவரங்கள் அழிக்கப்படும். இவற்றை அழிப்பதன் மூலம் வண்ணத்துப் பூச்சிகள், நண்டு, நத்தை, ஆமை போன்ற ஓட்டுடலிகள், பூச்சிகள், அவற்றின் குஞ்சுகள், முட்டைகள் போன்றவை அழித்தொழிக்கப்படும். பல உயிரினங்கள் கடற்கரையோரம் வந்து முட்டையிடுவதும், குஞ்சு பொரிப்பதும் தடுக்கப்படும். கடற்கரைகள் அழிக்கப்படுவதால், கடல் நீரோட்டங்கள் மாற்றப்படும். கடலுக்குள் அமைந்திருக்கும் கார்னெட் கனிமம் குவிந்திருக்கும் பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டால், கடல்வாழ் உயிரினங்களின் உயிரியல் பன்மயச் சூழல் அழிக்கப்படும்.
அரிய மணல்களைப் பிரித்தெடுக்க அதிகமாக தண்ணீர் தேவைப்படுவதால், கடல்நீரையும், (ஆழ்குழாய்களை நிலத்துக்குள் இறக்கி) நிலத்தடி நீரையும் உறிஞ்சி எடுப்பார்கள். அதேபோல, மணல் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், கடலில் விடப்படுகிறது. மணல் ஆலைக் கழிவுகள் கடலையும், நிலத்தையும், நிலத்தடி நீரையும், காற்றையும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன. கடல்நீர் மாசுபட்டு நஞ்சாக மாறுவதால், மீன்வளம் அருகிப் போகிறது. குமரி மாவட்ட மக்களின் வாழ்வுரிமைகள், வாழ்வாதார உரிமைகள் அனைத்தும் மிக மோசமாக பாதிக்கப்படும்.
[2] கடலரிப்பு மேலும் மோசமாகும்:
கன்னியாகுமரி மாவட்டம் எதிர்கொண்டு நிற்கும் பெரும் பிரச்சினைகளுள் ஓன்று கடலரிப்பு. கடலோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளைத் தொடர்ந்து இழந்து வருகிறோம். கடலோர கிராமங்களை இணைத்து நிற்கும் சாலை ஆங்காங்கே துண்டிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய மணல் அள்ளும் திட்டத்தால் கடல் அலைகளைத் தடுத்து பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய மணல் திட்டுக்கள், மணற்குன்றுகள் முற்றிலுமாக நீக்கப்படும். எனவே கடலரிப்புப் பிரச்சினை மேலும் மோசமாகும். ஏற்கனவே கடல்நீர் உட்புகுதல் பல கிராமங்களில் அன்றாட நிகழ்வாக மாறியிருக்கிறது.
ஆனால் அரசு மற்றும் தனியார் மணற்கொள்ளை நிறுவனங்கள் அறிவற்ற, அறிவியலற்ற முழுப் பொய்களைச் சொல்கிறார்கள். அகழ்ந்தெடுக்கும் மணலிலிருந்து தாதுக்கள் அடங்கிய ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக்கொண்டு, எஞ்சியிருப்பதை அந்தப் பகுதியிலேயேக் கொட்டி சரிசெய்து விடுவதால், கடலரிப்பு ஏற்படாது என்று ஒரு கதையை சிரிக்காமல் சொல்கிறார்கள். கடலரிப்பைத் தடுப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, கடலோரமெங்கும் கடலரிப்பு பாதுகாப்புச் சுவர்கள் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைத்திருக்கிறார்கள். தற்போதைய மணல் அள்ளும் திட்டத்தால் இக்கட்டமைப்பு முற்றிலுமாகத் தகர்த்தழிக்கப்படும்.
[3] வாழ்விடப் பாதிப்புக்கள் அதிகமாகும்:
குமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரை சுமார் 48 மீனவ கிராமங்களைக் கொண்டிருக்கிறது. மேற்படி கிராமங்களில் பனிரெண்டு லட்சம் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிசெய்யும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்விடப் பாதிப்புக்கள் அதிகரிக்கும். ஏற்கனவே கடற்கரைகள் காணாமற்போய் மீனவர்களின் படகுகளை நிறுத்துவதற்கு, உபகரணங்களை வைப்பதற்கு, வலைகளை உலர்த்துவதற்கு போதிய இடவசதி இல்லாமலாகிவிட்டது. கடல்நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்துத் தள்ளும்போது, மீனவ மக்கள் வாழ்விடங்களை இழக்கின்றனர்.
அதேபோல, கடற்கரை மணல் அகற்றப்படுவதால் கடல்நீர் உட்பகுதிகளுக்குள் ஊடுருவி குடிநீராதாரங்கள் அழிந்து, நிலத்தடிநீர் உப்பாகி, விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறி, விவசாயம் பெரும் பாதிப்படைகிறது. மேலும் மணல் ஆலைகளிலிருந்து பரவும் தூசியும், புழுதியும் தோட்டப்பயிர்கள் மீது படிவதால், அவை பூக்காமல், காய்க்காமல், விளைச்சல் குறைந்து, விவசாயம் நொடிந்து போகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் தென்னந்தோப்புக்கள் கருகி அழிகின்றன. பல விவசாயிகள் தங்களின் நிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்களை இழப்பதன் மூலம், தங்கள் சொத்துக்களையேப் பறிகொடுக்கின்றனர். விவசாயிகள் பலர் தங்களின் நிலத்தை குறைந்த விலைக்கு விற்பதற்கு மிரட்டப்படுவோமோ, தங்களின் நிலம் பறிக்கப்படுமோ என்கிற அச்சத்தோடு வாழ்கின்றனர். கடலோரமெங்கிலும் ஓங்கி வளர்ந்து, புயற்காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வல்லமைப் பெற்ற பனை மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், நம் மண்ணும், மக்களும் பாதுகாப்பு அரண் ஏதுமின்றி நிர்க்கதியாக நிற்கின்றனர். ஏற்கனவே விளைநிலங்களை வேகமாக இழந்துவரும் குமரி மாவட்டம் பாலைவனமாகும் நிலை விரைவில் எழும்.
[4] நோய்கள் பல்கிப் பெருகும்:
மேற்படி ஐந்து கிராமங்களில் அள்ளப்படும் மணல் 25-30 டன் டிப்பர் லாரிகளில் 12-17 கிமீ மற்றும் 30-35 கிமீ தூரம் பயணித்து மணவாளக்குறிச்சி ஆலைக்குக் கொண்டுசெல்லப்படும். மணல் அள்ளும்போதும், லாரிகளில் எடுத்துச் செல்லப்படும்போதும் எழும் புழுதி பொதுமக்களின் மூக்கு, கண், வாய் வழியாக உடலுக்குள் புகுந்து, நுரையீரல் மற்றும் ஈரல் பாதிப்புக்களை உருவாக்கும். குடிநீர் மாசுபாட்டால், ஏராளமானோர் சிறுநீரகப் பிரச்சினைகளால், தோல் நோய்களால், சுவாசக் கோளாறுகளால் துன்புறுவர். மணவாளக்குறிச்சி ஆலையின் அருகேயுள்ள பெரியவிளை எனும் கிராமம் “புற்றுநோயூர்” என்று ‘குங்குமம்’ வார இதழால் அழைக்கப்படும் அளவுக்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெரியவிளை, சின்னவிளை, கடியப்பட்டினம், கொட்டில்பாடு, மண்டைக்காடு புதூர், மணவாளக்குறிச்சி, பரப்பற்று, பருத்திவிளை உள்ளிட்ட அந்தப் பகுதி கிராமங்கள் அனைத்துமே புற்றுநோயால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன. மணல் ஆலையில் வேலைபார்க்கும் பல ஊழியர்கள் புற்றுநோயால் மரணமடைந்து வருகின்றனர். கடலோர, கடற்கரையோர ஊர்களில் வாழும் பெண்களில் பலருக்கு கருச்சிதைவு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கிராமங்களில் மனவளர்ச்சியற்ற குழந்தைகள் பிறப்பு விகிதமும் மிக அதிகமாக இருக்கிறது. தற்போதைய விரிவாக்கத் திட்டத்தால் மேற்படி நோய்கள் பல மடங்கு அதிகரிக்கும்.
[5] வேலை, வருமானம், பாதுகாப்பு குறித்தப் பொய்கள்:
அரசு மற்றும் தனியார் மணல் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கிறோம், நல்ல சம்பளம் வழங்குகிறோம் என்றெல்லாம் கதையளக்கிறார்கள். உண்மையில், கடலில் மீன்வளம் அருகிப் போவதால், ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்ளூர் வேலைகளை இழந்து, வேலைவாய்ப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். விவசாயிகளும் தங்கள் தொழிலை இழந்து வருமானமின்றி தவிக்கின்றனர். “எங்களால் கதிர்வீச்சு உருவாகவில்லை,” “நாங்கள் மணலை அள்ளிச் செல்வதன் மூலம் கதிரியக்கத்தைக் குறைக்கிறோம்” என்றெல்லாம் அளந்துவிடும் மணவாளக்குறிச்சி மணல் ஆலை நிர்வாகம், தம்முடைய ஊழியர்கள் கதிர்வீச்சுக்குள்ளாகும் அளவை “குறியீட்டு அட்டைகள்” (Film Badge) மூலம் அளந்து, அவற்றை மும்பையில் இயங்கும் அணுசக்திக் கழகத்துக்கு அனுப்பி, பரிசோதிக்கிறது. அதேபோல, கூலித் தொழிலாளிகள் தங்களுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டிருக்கும் சான்றிதழைச் சமர்ப்பித்தால், அவர்களின் மருத்துவச் செலவில் ஒரு பகுதியை வழங்குகிறது. மணல் அள்ளுவதால் எந்த பாதிப்புமே இல்லை என்றால், இவற்றை ஏன் செய்ய வேண்டும்?
[6] இந்த விரிவாக்கம் சட்ட விரோதத் திட்டம்:
முதலாவதாக, தமிழ்நாடு சிறுகனிமங்களின் விற்பனை விதிகள்—1959-ன் படி, தாதுமணல் குவாரிகளில் இயந்திரங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து எதுவுமில்லை என்று தொழிற்துறையின் அரசுச் செயலர் அனுமதி அழித்தால் மட்டுமே இயந்திரங்களை பயன்படுத்த முடியும். ஆனால் தற்போதைய விரிவாக்கத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை இயந்திரங்களை பயன்படுத்துவோம் என்று தெரிவிக்கிறது.
இரண்டாவதாக, கடற்கரை முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. வனநிலத்தை வனமல்லாத பயன்பாட்டுக்கு ஒதுக்குவது, அங்கே அழித்தொழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைத்துமே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றச்செயல்களாகும். ஆனால் மேற்படித் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறிப்பிட்ட ஐந்து கிராமங்களில் வனப்பகுதி எதுவுமேயில்லை என்று கடந்துசெல்கிறது.
மூன்றாவதாக, கனிமங்கள் எடுக்கப்படும் பரப்பில் குடிநீராதாரங்கள் இருந்தால், குடிநீர் வடிகால் வாரியத்திடம் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் தற்போதையத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை இப்படி ஒரு பிரச்சினையே எழவில்லை என்று தள்ளிவிடுகிறது.
நான்காவதாக, மக்களின் பாரம்பரிய உரிமைகள் (customary rights) மற்றும் வசதியுரிமைகள் (easement rights) போன்றவற்றின்படி, பொதுமக்களின் அன்றாட அனுபவத்தில் இருக்கும் எதையும் அழிக்கவோ, சிதைக்கவோக் கூடாது என்று பல நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியிருக்கின்றன. மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகள் மற்றும் வசதியுரிமைகள் மேற்படி தாதுமணற் கொள்ளைத் திட்டத்தால் மீறப்படுகின்றன.
ஐந்தாவதாக, கடற்கரையையொட்டிய 500 மீ தூரம் பாதுகாக்கப்பட்டப் பகுதி என்பதால் அங்கே எந்தவிதமானத் தொந்திரவுகளையும் செய்யக்கூடாது எனும் கடலோர ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை பற்றிய எந்தவிதமான விவாதமும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் காணப்படவில்லை.
[7] சட்டம் ஒழுங்கு பாதிப்படையும்:
தனியார் மணல் மாஃபியாக்களின் அன்பான கவனிப்பினாலும், அடக்குமுறைகளாலும், அடாவடித்தனங்களாலும் அரசு இயந்திரம் பெரும்பாலும் சரியாக வேலை செய்வதில்லை. வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை, கனிமம் மற்றும் புவியியல் துறை, வணிகவரித்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போன்ற துறைகளைச் சார்ந்த ஏராளமான அதிகாரிகள் மணல் நிறுவனங்களோடு நெருங்கிப் பழகி வேலை செய்கின்றனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பெரும்பாலான அரசியல்வாதிகளும்கூட அப்படித்தான். இந்த மாஃபியா கலாச்சாரம் நடப்புத் திட்டப் பகுதியின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்த உண்மை பலருக்கும் தெரியாது. அதாவது, கடந்த 2004-ஆம் ஆண்டு யூன் மாதம் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு தனியார் மணல் நிறுவனம் குமரி மாவட்டம் மிடாலம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும், அடியாட்களையும் களமிறக்கி மணல் அள்ள முற்பட்டது. ஆனால் அப்பகுதி மீனவர்கள் எதிர்த்துக் களமாடியபோது, அதனை சாதி-மதக் கலவரமாகச் சித்தரிக்க முயன்றார்கள் மாஃபியாக்கள். மிடாலம் கிராமத்தைச் சார்ந்த ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. மிடாலம் கிராமத்தின் மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நல்லவேளையாக, அனைத்துத் தரப்பு மக்களும் பக்குவமாகச் செயல்பட்டு, குமரி மாவட்டத்தின் சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் காத்துக் கொண்டார்கள். அதே மிடாலம் பகுதியைத்தான் இப்போது மணவாளக்குறிச்சி ஆலை கபளீகரம் செய்ய முயற்சிக்கிறது.
[8] சமூக அமைதியும், வளர்ச்சியும் கெடும்:
கல், கிரானைட், ஆற்றுமணல், தாதுமணல் என அனைத்துக் குவாரிகளிலும் அனுமதி வாங்கிய இடங்களில் மட்டுமின்றி, அருகமைப் பகுதிகளில், அரசு புறம்போக்கு மற்றும் வழிப்பாதைகளில் எல்லாம் அகழ்வுப்பணிகள் நடத்துவதும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அள்ளித்தோண்டி எடுப்பதும், அனுமதி நிபந்தனைகளைப் பட்டவர்த்தனமாக மீறுவதும் வாடிக்கையாக நடக்கும் விடயங்கள். மிகச் சிறிய தொகை ஒன்றை அரசுக்குச் செலுத்திவிட்டு, மிகப் பெரிய லஞ்சத் தொகைகளை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கொடுத்துவிட்டு, கோடி கோடியாகக் கொள்ளை லாபம் பார்க்கும் தொழில்தான் இந்த குவாரித் தொழில். இழப்பதற்கு நிறைய இருப்பதால் குவாரி அதிபர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள். சில தனியார் தாதுமணல் நிறுவனங்கள் கடலோர ஊர்களை இரண்டாகப் பிளந்து, கைக்கூலிகளை உருவாக்கி, வேலை எதுவும் செய்யாமலே அவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து, பொது அமைதியைக் கெடுத்து, அபரிமித வளர்ச்சியும், கொள்ளை லாபமும் பெறுகின்றனர். இன்னொரு பக்கம் குவாரிகளால் பாதிக்கப்படும் மக்கள் தங்களின் பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம், நினைவுகள், அடையாளம், எதிர்காலம் அனைத்தையும் இழந்து, ஏதிலிகளாகக் குடிபெயர நேருகிறது. இம்மாதிரியானச் சூழல் அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சிக்கும், சமூக அமைதிக்கும் உகந்ததாக இருக்க முடியாது.
[9] உலக நிலவரமும் உள்ளூர் கலவரமும்:
உலகம் முழுவதும் சுமார் 45 லட்சம் டன் தோரியம் இருப்பு உள்ளதாக பன்னாட்டு அணுசக்தி முகமை (IAEA) தெரிவிக்கிறது. இதில் மூன்றரை லட்சம் டன் இந்தியாவில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தோரிய வளம் மிகுதியாக உள்ளது (எஸ். ராஜாராம், தினமணி, 6.10.2007). தாதுமணல் கனிமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கோதையாறு, குழித்துறையாறு, வள்ளியாறு போன்ற ஆறுகளால் அடித்துக்கொண்டு வரப்பட்டு, கடல்நீரில் ஊறவைக்கப்பட்டு, கடல் அலைகளால் கடற்கரைகளில் குவிக்கப்படுகின்றன. இந்திய அணுசக்தித் துறை கார்னெட் என்கிற கனிமத்தை எடுப்பதற்கு மட்டுமே தனியாருக்கு அனுமதி வழங்கியது. ஆனால் கடந்த 32 ஆண்டு காலமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மோனோசைட் கனிமத்தை தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றன. இதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. கடந்த 1999-ஆம் ஆண்டிலிருந்து சில தனியார் நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.96,120 கோடி என்று பல்துறை வல்லுனர்கள் சிலர் 2013-ஆம் ஆண்டுவாக்கில் கணக்கிட்டனர் (இந்தியா டுடே, 28.08.2013).
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சவர எனுமிடத்தில் இயங்கும் கேரளா மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ் நிறுவனம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் இயங்கும் அதானியின் விழிஞ்ஞம் துறைமுகம், குமரி மாவட்டத்தில் இயங்கும் மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை, திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா, உடன்குடி அனல்மின் நிலையம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, சேதுசமுத்திரத் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், மிதக்கும் காற்றாலைத் திட்டம் என நம்முடைய தெற்குப் பகுதி கடலையும், கடலோரத்தையும் மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டு, மீனவர்களை முழுவதுமாக அப்புறப்படுத்தும் வேலைகள் கர்மசிரத்தையுடன் நடைபெறுகின்றன.
[10] இனி நாம் என்ன செய்ய வேண்டும்?
[] ஒரு நாட்டை உருவாக்குகிறவர்கள், கட்டிக்காப்பவர்கள் மக்கள் என்றால், அவர்களின் வாழ்வுரிமைகள், வாழ்வாதார உரிமைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்; பன்னாட்டு நிறுவனங்களுக்கோ, பெருமுதலாளிகளுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ அல்ல. எனவே நமது ஈடுபாடுகளை, தேவைகளை, உரிமைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வோம், அவற்றை அச்சமின்றி உரக்கச் சொல்வோம். நமது சிந்தனையிலோ, மொழியிலோ, செயல்பாடுகளிலோ வன்முறை ஏதுமின்றி பார்த்துக் கொள்வோம்.
[] இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், சனநாயகத்தன்மையோடும் நடத்தப்படுவதில்லை. “மக்கள் கேள்விகள் கேட்டார்கள், அதிகாரிகள் அற்புதமாக பதிலளித்தார்கள், அனைத்தும் சுபமாக நடந்தேறின, எனவே அனுமதி வழங்கலாம்” என்று அரசுகள் கேட்க விரும்புவதையே அதிகாரிகள் அறிக்கையாக எழுதித் தருகிறார்கள்.
[] மக்களின் சந்தேகங்களை நீக்குங்கள், அவர்களின் அச்சத்தைப் போக்குங்கள் என்றெல்லாம் சிலர் சப்பைக்கட்டுக் கட்டினாலும், நாம் வளர்ச்சி என்பது என்ன, யாருடைய வளர்ச்சி, எத்தகைய வளர்ச்சி, அதற்கு என்ன விலை என்பன போன்ற சில எளிய கேள்விகளுக்கு உரிய விடைகள் காண முற்படுவோம்.
[] இனயம் சரக்குப் பெட்டகத் துறைமுக எதிர்ப்புப் போராட்டம், கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுக எதிர்ப்புப் போராட்டம் போன்ற சாதி-மதம் கடந்த, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய, ஓர் அறவழிப் போராட்டத்தைக் கையிலெடுப்பதுதான் நம் முன்னால் இருக்கும் ஒரே வழி.
[] நம்முடைய கோரிக்கைகள்:
[1] மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை மற்றும் தனியார் மணல் ஆலைகளால் இதுவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்திருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை, மனித இழப்புக்களை, பல்லுயிர் தாக்கங்களை விரிவாக ஆய்வுசெய்து, ஒன்றிய, மாநில அரசுகள் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
[2] தற்போதைய மணவாளக்குறிச்சி ஆலை விரிவாக்கத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
[3] அக்டோபர் 1-ஆம் நாள் தக்கலையில் நடைபெறவிருக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு நிபந்தனைகளின்றி நீக்க வேண்டும்.
[4] நிலைபெறு வளர்ச்சி (Sustainable Development), நீடித்த நிலைத்த அகழ்வு (Sustainable Mining) போன்ற விடயங்கள் குறித்த பரந்துபட்ட தேசிய விவாதம் ஒன்றைத் தொடங்க வேண்டும்.
மீனவர் எழுச்சியே நம்மவர் வளர்ச்சி!
சுப. உதயகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்:
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
நாகர்கோவில்,