மக்களுக்காகத்தான் அரசே ஒழிய, அரசுக்காக மக்கள் அல்ல!
குமரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறி உள்ள இந்த அரிய வகை மணல் குவாரி (தாது மணல் குவாரி) யால் எண்ணற்ற பாதிப்புகளை மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள நிலையில், பல்வேறு உண்மை நிலைகளை மறைத்துக் கொடுத்துள்ள, 376 பக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் இல்லாத நிலையில்,…
தமிழ்நாடு அரசு மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் – கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா. முகிலன் அவர்கள் கரூரில் பேட்டி!
குமரி மாவட்டம் தக்கலையில் அக்டோபர்’1-ம் தேதி 2,827 ஏக்கர் (1144.06 ஹெக்டர்) பரப்பளவில் நடக்க இருக்கும், கதிர்வீச்சு தன்மையுடைய அரிய வகை மணல் (தாதுமணல்) குவாரி கருத்து கேட்பு கூட்டத்தை, தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்
கரூர் மாவட்டத்தில்
குப்பம் விவசாயி ஜெகநாதன் படுகொலை போல் இன்னொரு படுகொலை நடக்காமல் தவிர்க்க, கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத கனிமக் கொள்ளையை தடுத்த புன்னம் விவசாயி சாமிநாதன் குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குக என ஆதாரங்களோடு….
இன்று 24-09-2024 செவ்வாய் மதியம் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப் பட்டது.
இந்த நிகழ்வில், தாது மணல் கொள்ளை நூல் ஆசிரியரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான இரா. சா.முகிலன்,சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர் குணசேகரன், சட்ட விரோத கல்வாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ந. சண்முகம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சு. விஜயன், லா பவுண்டேஷன் வாசுதேவன், விடுதலைச் சிறுத்தைகள் ரகுமான் சமூக செயல்பாட்டாளர் மோகன்ராஜ், சட்ட விரோத கனிமக் கொள்ளை எதிர்ப்பு செயல்பாட்டாளர் சுகந்திரன் சட்ட விரோத கல் குவாரி உரிமையாளரின் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான புன்னம் விசுவநாதன் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினர் பங்கேற்றனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டவிரோதமான முறையில் அறிவிக்கப்பட்டு நடக்கும் குமரி மாவட்ட தாது மணல் குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்!
கனிமக் கொள்ளையை தடுக்கும் – சமூக சொத்தை பாதுகாக்கும், சமூக செயல்பாட்டாளர்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்குக!
@ இரா. சா.முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
ந. சண்முகம்,
ஒருங்கிணைப்பாளர்,
சட்ட விரோத கல்வாரி எதிர்ப்பு இயக்கம்
97919-79786
சு. விஜயன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கப்பட்ட மனு கீழே…
பல்வேறு விதிமீறல்களுடனும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முழுமையான அறிக்கையை (EIA) தமிழில் தராமலும், அனைத்து ஆவணங்களையும் மறைத்து நடத்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனையாக தாது மணல் குவாரி மாறி உள்ள நிலையில், குமரி மாவட்டம் தக்கலையில் அக்டோபர்’1-ம் தேதி 2,827 ஏக்கர் (1144.06 ஹெக்டர்) பரப்பளவில்,நடத்த இருக்கும், கதிர்வீச்சு தன்மையுடைய அரிய வகை மணல் (தாதுமணல்) குவாரி கருத்து கேட்பு கூட்டத்தை, தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மனு
அனுப்புதல்:
இரா. சா. முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
ந. சண்முகம்,
சு. விஜயன்,
ஒருங்கிணைப்பாளர்கள்,
சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்,
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்,
47, பசுபதி லேஅவுட்,
கரூர்-1
97919-78786
24-09-2024
பெறுதல் :
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழியாக,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கரூர்
பொருள்: பல்வேறு விதிமீறல்களுடனும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முழுமையான அறிக்கையை (EIA) தமிழில் தராமலும், அனைத்து ஆவணங்களையும் மறைத்து நடத்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனையாக தாது மணல் குவாரி மாறி உள்ள நிலையில், குமரி மாவட்டம் தக்கலையில் அக்டோபர்’1-ம் தேதி 2,827 ஏக்கர் (1144.06 ஹெக்டர்) பரப்பளவில்,நடத்த இருக்கும், கதிர்வீச்சு தன்மையுடைய அரிய வகை மணல் (தாதுமணல்) குவாரி கருத்து கேட்பு கூட்டத்தை, தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மனு
வணக்கம்.
குமரியில், தக்கலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அக்டோபர்-1, 2,827 ஏக்கரில் (1,144.06 ஹெக்டேர்) பரப்பளவில் புதிய தாது மணல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்கள் முழுக்க மீனவ மக்களுக்கு, தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கும் மோனோசைட் சிர்கான், இலுமனைட், ரூட்டைல், சில்லுமினேட் மற்றும் கார்னெட் என்ற அரிய வகை கனிமங்களால் ஏற்கனவே அணுக்கதிர் இயக்க பாதிப்பால் புற்றுநோய், மலட்டுத்தன்மை, தைராய்டு மற்றும் சிறுநீரக பாதிப்பு என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்கனவே ஏற்படுத்தி வரும்,
அணுக் கனிம சுரங்கம், புதிதாக குமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்தில் 6 கிராமங்களில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
வருகின்ற, அக்டோபர் 1-2024 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மிடாலம்- A கிராமம் , மிடாலம்-B கிராமம் , இணையம் புத்தன்துறை கிராமம், ஏழுதேசம் -B (EZHUDESAM), ஏழுதேசம் -C, கொல்லங்கோடு – A கிராமம், கொல்லங்கோடு – B கிராமம் ஆகியவற்றில், 2,827 ஏக்கரில் (1,144.06 ஹெக்டேர்) பரப்பளவில் புதிய தாது மணல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கருத்து கேட்பு கூட்டம் வரும் 01-10-2024 காலை 11.00 மணிக்கு, குமரி மாவட்டம், பத்மநாபபுரம் கோட்டம், தக்கலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே, கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்கள் முழுக்க உள்ள மீனவ மக்களுக்கு, கடலோரங்களிலேயே அமர்ந்து, நடந்து, வலைகளை உலர்த்தி வாழ்விடத்தை அமைத்து வாழ்க்கை நடத்தும் மீனவ மக்களுக்கு தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கும் மோனோசைட் சிர்கான், இலுமனைட், ரூட்டைல், சில்லுமினேட் மற்றும் கார்னெட் என்ற அரிய வகை கனிமங்களால் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்பட்டு நெய்யூர் புற்றுநோய் மருத்துவமனையில் இப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே தாது மணல் அள்ளுவதில் இருந்து பிரித்தெடுக்கும் முறை வரை, ஏற்படும் அணுக்கதிர் வீச்சு பாதிப்பால் புற்றுநோய், தைராய்டு மற்றும் சிறுநீரக பாதிப்பு என ஏற்படுத்தி வரும் நிலையில், அணுக் கனிம சுரங்கம், புதிதாக குமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்தில் 6 கிராமங்களில் சுமார் 2,827 ஏக்கர் பரப்பளவு அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே 2013 காலகட்டத்தில் தமிழ்நாடு முழுக்க இயங்கிய, இயங்க சுரங்க அனுமதி பெற்ற (நெல்லை – குமரி – தூத்துக்குடி – திருச்சி – மதுரை) இருந்து செயல்பட்ட 78 தாது மணல் குவாரிகளின் மொத்தப் பரப்பளவு அதிகபட்சமாக 1,100 ஏக்கர் மட்டுமே இருந்தது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் அணுகனிம சுரங்கங்கள், அதிகபட்சமாக 250 ஏக்கர் என்று மட்டுமே இருந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரே நேரத்தில், ஒரே பகுதியில் அதிகபட்சமாக 2,827 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் முடிவு மிகப் பெரிய அதிர்ச்சியை மீனவ மக்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள சமூக அக்கறை உள்ளவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளது..
தமிழ்நாட்டில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக தாது மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோரப் பகுதிகளில் தாது மணல் இருப்பது போல, கேரள அரபிக் கடல் கடலோர பகுதிகளிலும் தாது மணல் இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் தமிழ்நாட்டில் நடந்தது போல சட்டவிரோத தாது மணல் குவாரி அமைத்து கொள்ளை நடந்தது என்பது மிகக் குறைவே.
எனவே குமரி மாவட்டத்தில், இந்திய அருமணல் ஆலை IREL (INDIA) நிர்வாகத்தால் நடத்தப்படும் தாது மணல் குவாரிகளால் எண்ணற்ற பாதிப்புகள் அதனால் பொதுமக்கள் அடையும் துன்பம், குறிப்பாக மீனவ மக்கள் அடையும் வேதனை அளவிட முடியாத நிலையில் இருக்கும் போது, புதிதாக அமைக்கப்படும் தாது மணல் குவாரி அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் ஏற்பட இருக்கும் பாதிப்புகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள கருத்து கேட்பு கூட்டம், நியாயமாக நடைபெறாது என்பதை ஆதாரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் உள்ள தமிழ்நாட்டில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விரிவான அறிக்கை (EIA) தமிழில் இல்லா கொடுமை:
காரணம், கருத்து கேட்பு கூட்டத்திற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் 376 பக்கங்கள் கொண்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விரிவான அறிக்கை (EIA) ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டு உள்ளது.
முதலில் தமிழ்நாட்டில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும், அறிக்கை தமிழில் இல்லை. தமிழில் அறிக்கை இல்லாத பொழுது அனைவரும் இதை படித்து புரிந்து கொண்டு எவ்வாறு கருத்து சொல்ல முடியும்.
ஏற்கனவே 2020-இல், ஒன்றிய அரசு கொண்டு வந்த, சுற்றுச்சூழல் கருத்து கேட்பு கூட்டம் பற்றியான முன் வரைவு தமிழில் வெளியிடாமல் இருந்த பொழுது நீதிமன்றம் சென்று தமிழில் வெளியிடப்பட்டது என்பது வரலாறு. அன்று இன்றைய ஆளும் கட்சியாக உள்ள திமுக தமிழில் வெளியிடக் கோரி இதை எதிர்த்து போராடியது.
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின், 2021-ல், கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சுல்தான் பேட்டை ஒன்றியம், வாரப்பட்டி மீனாட்சி ரீரோலர் இரும்பு தொழிற்சாலை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முழுமையாக தமிழில் வெளியிடப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, கருத்து கேட்டு கூட்டம் நடத்த முடியாமல் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக, கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
2022, ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை கிராமத்தில், தமிழ்நாடு அரசு நிறுவனமான டாமின் நிறுவனத்தின் கிரானைட் குவாரி கருத்து கேட்பு கூட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முழுமையாக தமிழில் வெளியிடப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, கருத்து கேட்டு கூட்டம் நடத்த முடியாமல் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக, கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
2012, செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் பணப்பட்டி கிராமம் 2 கல் குவாரி கருத்துக் கேட்பு கூட்டம் அறிக்கை தமிழில் வெளியிடவில்லை என்று எங்கள் புகார் காரணமாக, முன்கூட்டியே, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரால் ரத்து செய்யப்பட்டது.
2012-ல், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், கல் குவாரி கருத்துக் கேட்பு கூட்டம் அறிக்கை தமிழில் வெளியிடவில்லை என்று எங்கள் புகார் காரணமாக, முன்கூட்டியே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் ரத்து செய்யப்பட்டது.
2012-ல், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிராமத்தில் கல் குவாரி கருத்துக் கேட்பு கூட்ட அறிக்கை, தமிழில் வெளியிடவில்லை என்று எங்கள் புகார் காரணமாக, முன்கூட்டியே திருப்பூர் மாவட்ட ஆட்சியரால் ரத்து செய்யப்பட்டது.
ஆங்கிலத்தில் உள்ள அறிக்கையில் உள்ள விபரங்களை, இங்கு அதிகாரத்தில் உள்ள ஆட்சிப் பொறுப்பில் உள்ள பலராலும் படித்து புரிந்து கொள்ள முடியாத நிலையில், இதன் பாதிப்பை 30 ஆண்டுகாலம் எதிர்கொள்ள வேண்டிய எளிய மீனவ மற்றும் உழைப்பாளி மக்கள் எவ்வாறு படித்து புரிந்து கொள்ள முடியும். கருத்துச் சொல்ல முடியும்.
ஏற்கனவே சட்ட ஒழுங்கு பிரச்சனையாக தாது மணல் குவாரி மாறி உள்ள நிலையில்,
தமிழில் விரிவான அறிக்கை இல்லாமல் நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கையில் இணைப்பாக 45 வகையான ஆவணங்களுக்கு பதிலாக வெறும் 5 ஆவணங்கள் மட்டும் உள்ள அவல நிலை :
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கையில், அனைத்து துறை அதிகாரிகளின் சான்றுகளோடு இணைப்பாக 45 வகையான ஆவணங்கள் இருக்க வேண்டும்.
ஆனால், 45 வகையான ஆவணங்களுக்கு
பதிலாக வெறும் 5 வகையான ஆவணங்கள் மட்டுமே உள்ளது.
இதனால் முழுமையான உண்மையான விபரங்கள் அறிந்து கருத்து எதுவும் சொல்ல முடியாத நிலை உள்ளது.
இணைப்பு ஆவணங்களில்,
1). priciess area communication letter
2). Mining plant approved by AMD
3).Baseline monitoring photos
4).Hydrological study
5). Lab record
என ஐந்து வகை ஆவணங்கள் மட்டுமே உள்ளது.
இந்த தாது மணல் குவாரி அமைப்பதற்கான, அரசு விதிகள் (site criteria ) தொடர்பான எந்த விவரங்களும், அது தொடர்பான அதிகாரிகளின் தடையின்மை சான்றும் எதுவும் இல்லை.
எனவே, ஏற்கனவே குமரி மாவட்டம் முழுக்க மீனவ மக்கள் இதை எதிர்த்து தற்போது போராடிவரும் நிலையில், ஆவணங்களிலும் முழுமையாக கொடுக்காமல் பல்வேறு உண்மைகளை மறைத்து, உண்மைகளை அறிய முடியாமல் செய்து அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
எனவே, குமரி மாவட்டத்தில் நடக்க இருக்கும் அரிய வகை மணல் குவாரி தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக இந்த அரிய வகை மணல் குவாரி மாறி உள்ள நிலையில், தாது மணல் குவாரியால் எண்ணற்ற பாதிப்புகளை மக்கள் உணர்ந்துள்ள நிலையில், பல்வேறு உண்மை நிலைகளை மறைத்துக் கொடுத்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை கொடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு இந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
மக்களுக்காகத்தான் அரசே ஒழிய, அரசுக்காக மக்கள் அல்ல! என்ற அடிப்படையில்,
இந்த மக்களை பாதிக்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த மனுவை, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆன தங்களின் வழியாக அனுப்ப கேட்டு கொள்கிறோம்
இப்படிக்கு,
.
(இரா.சா.முகிலன், ந.சண்முகம்
சு. விஜயன்)
Leave a Reply