தமிழ்நாடு தேசிய கட்சி- கொள்கை அறிக்கை- பாகம்- 1


ஒரு நாட்டின் தெளிவான வரலாறுதான் அதன் மக்களுக்கு தங்களின் உரிமை ,சுதந்திரம் ,பற்றுறுதி ஆகியவற்றுக்கான அடிப்படையாக விளங்குகிறது.தற்போதைய சமூகத்தின் உள்ளடக்கத்தையும் வெளிப்பாடுகளையும் தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் கடந்த கால வரலாற்றை குறைந்தபட்சம் அதன் முக்கிய திருப்புமுனைகளாக அமைந்த தருணங்களை தெளிவாக அறிவது அடிப்படைத் தேவையாகிறது. மன்னர்களின் வரலாறே சமுக வரலாறாக வழங்கப்பட்டதற்கு மாறாக உழைக்கும் மக்களின் வரலாற்றிற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படவேண்டும். அதன் அடிப்படையில் இந்திய, தமிழக வரலாறு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

இன்று நிலவுகின்ற சமுக,பொருளாதார ,நிலவுடைமைக்கான காரணிகளை விளங்கிக் கொள்ள ,
இந்திய,தமிழக வரலாற்றில்  ஆதிக்கம் செலுத்திய இருபோக்குகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

தெற்கே நாயக்கர்களின் விஜயநகர பேரரசின் ஆதிக்கமும் வடக்கே பேஷ்வாக்களின் மராத்திய அரசின்  விரிவாக்கமும் இந்திய சமுக ,அரசியல் சூழ்நிலைமைகளை புரட்டிப்போட்ட முக்கியமான இரு வரலாற்று நிகழ்வுகளாகும்.
இவை இரண்டுமே முகமதிய ஆட்சியாளர்களின் ஆதிக்க விரிவாக்கத்தை எதிர்த்து  இந்துத்துவத்தை அடிப்படையாக கொண்டெ எழுந்த அரசுகளாகும்.சமுகநிலைப்படிநிலையின் உச்சத்தில் தங்களை தாங்களே இருத்திக் கொண்ட பார்ப்பனர்களும் ,அவர்களின் பார்ப்பனிய சிந்தனையும் அரசியல் அதிகாரத்தின் உச்சத்தை நோக்கி பயணித்த வரலாறே இந்நிகழ்வுகளின் சாரம்.

1308-ல் மதுரையை ஆண்ட மாறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்த பிறகு,அவனது வாரிசுகளான வீரபாண்டியன்,சுந்தரபாண்டியன் இடையே ஆட்சியை பிடிக்க வாரிசுரிமை சண்டை உருவானது.பாண்டிய இளவல் சுந்தரபாண்டியன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினான்.மாலிக்கபூர் தலைமையிலான கில்ஜியின் படை 1311-இல் மதுரையை கொள்ளையடித்தது. மாலிக்கபூருக்கு பின் 1314-ல் குஸ்ரூ கானால் மதுரை மீண்டும் தாக்கப்பட்டது. 1323 -ல்
முகமது பின் துக்ளக்கால் மதுரை வெல்லப்பட்டு  வெல்லப்பட்டு டெல்லி சுல்தானியத்தின் 23 வது மாகாணமாக பிணைக்கப்பட்டது. கி.பி 1335-ல் டெல்லி சுல்தானியத்திடம் இருந்து மதுரை மாபார் என்ற சுதந்திர அரசாக உருவெடுத்தது.
கி.பி. 1335- கிபி 1378 வரை மதுரையை மாபார் சுல்தானியத்தின் ஆட்சியே நடந்து வந்தது.

கிபி 1336 இல் விஜயநகரப் பேரரசை உருவாக்கியவர்களான முதலாம் அரிகரர் முதலாம் புக்கரின் மகன்  குமார கம்பணரே மாபாரை வென்று விஜயநகரப் பேரரசுடன் இணைத்தார்.தென்னிந்தியா முழுவதும் விஜயநகர அரசின் மேலாதிக்கத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்டபோது, மதுரையை பேரரசின் பகுதியாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது

நரச நாயக்கர் ஆட்சி காலத்தில் மதுரையில் (கிபி 1493- 1506) விஜயநகர ஆதிக்கம் வலுப்பட்டது, எனினும் விஜயநகரத்துக்கும் மதுரைக்கு இடைப்பட்ட தூரமும் பாண்டியர்களின் தொடர் எதிர்ப்பும் மதுரை நாயக்க அரசுக்கு பெரும் சவால்களாக இருந்தன
கிருஷ்ண தேவராயர் (கிபி 1509- 1530) நாகம நாயக்கரை அவரது பிரதிநிதியாக அனுப்பினார்

மதுரைக்கு வந்த நாகம நாயக்கர் நிர்வாகத்தை சீரமைத்தார்.தனது செல்வாக்கை பெருக்கிக்கொண்டார். பேரரசை எதிர்க்கும் அளவுக்கு வந்தார்
நாகம நாயக்கரை அடக்க நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கரை அனுப்பினார் கிருஷ்ணதேவராயர் . தன் தந்தையை தோற்கடித்த விசுவநாத நாயக்கரிடம் மதுரை ஆட்சி பொறுப்பை கிருஷ்ணதேவராயர் ஒப்படைத்தார்
விசுவநாத நாயக்கர் தனது அமைச்சர் அரியநாத முதலியின் துணையோடு பாண்டியர்களையும் அவரது ஆதரவாளர்களையும் ஒடுக்கினார் நாயக்கர் ஆட்சியில் அனைத்து நிலங்களும் அரசருக்கு உரியது என பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு நாயக்கர், ரெட்டியார், நாயுடு ,முதலியார்களுக்கு அளிக்கப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த நாடு முறையில் இருந்துவந்த நிலப்பரப்புகள் பாளையங்களாக பிரிக்கப்பட்டு பாளையக்காரர்களின் ஆட்சிக்கு உட்படுத்தினர். நிலங்கள் பறிக்கப்பட்ட தமிழ்க்குடிகளை அவர்கள் நிலத்திலேயே அடிமைப்படுத்தினர்.

பிராமணர், நகரத்தார் வேளாளர்கள் நாயக்க அரசுடன் சமரசமாக சென்றனர். போர்த்தொழில் செய்தவர்களும் ஏர்த்தொழில் செய்தவர்களும், நிலமற்றவர்களாக மாற்றப்பட்டதுதான் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.
தங்களிடம் இருக்கும் சிறுஅளவிலான நில உடமை காரணமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வரலாறு நெடுக நிலவுடைமையாளராக இருந்து வருவதாக கருதுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதியிலிருந்து நிலமற்றவர்களாகவும் உயர்சாதியினருக்கும் இடைச்சாதியினருக்கும் ஏவல்புரிபவர்களாகவும் தான் வாழ்ந்து வந்தனர் எனக்கருதுவதும்  வரலாற்று உண்மைகளுக்கு முற்றிலும் மாறான தப்பெண்ணங்களாகும். ஆளுவோருக்கு உரித்தான சில குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே நிலம் படைத்தவர்களாக இருந்தனர். பிற சாதிகள் அனைத்தும் நிலமற்றவைகளாகத்தான் இருந்தன.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் நிலங்களின் மூலம் கிடைக்கும் நிலவரி வருவாயை அதிகரிக்க அதிக நிலங்களை விளைச்சலுக்கு ஈடுபடுத்திட நடவடிக்கை எடுத்தது. ஜமீன்தாரி ,ரயத்துவாரி முறைகள் செயல்படுத்தப்பட்டன. உபரி நிலங்கள் பிரித்தளிக்கப்பட்டன.
சில குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டுமே இருந்த நிலவுடமை பிறசாதிகளுக்கும் கிடைக்கக்கூடியதாக மாறியது. நிலங்கள் அனைத்தையும் விளைச்சலுக்கு கொண்டு வரும் நடவடிக்கை குத்தகை விவசாயமுறை உருவாகிட வழிவகுத்தது. அப்போழுதும் கூட ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றப்பட்டவர்களுக்கு நிலம் கிடைத்துவிடக்கூடாது என்பதில் பிற அனைத்து பிரிவினரும் கவனமாக செயல்பட்டனர்

ஒடுக்கப்பட்ட மக்களின் ஆராத்துயரத்தை போக்கிட திரமென்ஹீர் எடுத்த முயற்சியால் அளிக்கப்பட்டது தான் பஞ்சமி நிலங்கள்.அந்த பஞ்சமி நிலங்களை கூட ஆதிக்க சாதியினர் வஞ்சகமாக பெருமளவில் கைப்பற்றி கொண்டதே வரலாறு
உண்மையை உயர்த்தி பிடிக்கும் ஒரு சில ஆய்வாளர்களைத்தவிர பெரும்பாலான வரலாற்றியலாளர்களும் அரசியலாளர்களும் இந்த உண்மையான வரலாற்றுப் பின்னணியைப் பற்றி மூச்சுவிடக்கூட மறுக்கின்றனர். உண்மையான வரலாற்றை கிளறினால் நாளது தேதிவரை நாங்கள் கூறிவந்த வரலாற்று புரட்டுகளுக்கும் இன்று நிலவிக் கொண்டிருக்கும் அதிகார அடுக்குக்கும் ஆபத்தாகி விடும் என அஞ்சுகின்றனர்.

தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்கப்படவேண்டும் என்றால் அதன் வரலாறு மீட்கப்படவேண்டும்.உண்மை வரலாறு உணரப்பட்டால்தான் இங்கு வாழும் மக்கள் தங்கள் உரிமையையும் ,சுதந்திரத்தையும்,தன்மானத்தையும் மீட்பதற்கு ஆயத்தமாகுவர்.அதுவே இதுநாள்வரை தங்களை கவ்வியிருக்கும் அனைத்துவித ஓடுக்குமுறைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும். ஆதிக்க சாதிகளோடு இணைந்து ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் இடைநிலைச்சாதி ஒடுக்குமுறையாளர்களையும் அதுவே விடுவிக்கும்.

தெற்கே நாயக்கர் ஆட்சியின் வழியே அதிகார அடுக்கின் உச்சத்தை நோக்கி உயர்ந்த பிராமணர்கள்,வடக்கே மாராத்திய ஆட்சியின் வழியே அதனை சாதித்தனர்.முகலாய ஆட்சியின் விரிவாக்கத்திற்கு முட்டுகட்டை போட்டு எழுந்த சிவாஜியின் மராத்திய அரசு,சிவாஜிக்குப்பின் தளர்ச்சிகண்டது.
சிவாஜியின் மராத்திய அரசில் பேஷ்வா (தலைமை அமைச்சர்களாக) க்களாக சித்பவன பிராமண வகுப்பினர் அதிகார மையமாக அணிவகுத்தனர்.

மராத்திய ஆட்சியின் வீழ்ச்சியை தொடர்ந்து பேஷ்வாக்கள் அரசுக்கு தலைமை தாங்க தொடங்கினர்.பூனாவை தலைநகரமாகக் கொண்ட பேஷ்வாக்களின்  அரசு வேகமாக விரிவடைய துவங்கியது.இன்றைய மகாரஷ்டிரா,குஜராத்,மத்தியப்பிரதேசம்,உத்திரப்பிரதேசம்,ஜார்கண்ட்,உத்தரகாண்ட் மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் நேரடி ஆட்சியும் பீகார்,பஞ்சாப், மேற்குவங்க பகுதிகளில் திறை வசூலித்தும் வந்தனர்.சில சமயம் மராத்திய அரசின் எல்லை ஆப்கானிஸ்தான் வரை நீண்டிருந்தது.

மராத்திய அரசின் அதிகார மையமாக விளங்கிய சித்பவண பிராமணர்களின் கையில் ,அரசதிகாரம்,பொருளாதாரம் ,நிலயுடமை ஆகியவற்றின் கட்டுபாடும் குவிந்து கிடந்தது.நொறுங்கிய முகலாய ஆட்சியின் முடிவிலே எழுச்சி பெற்ற பேஷ்வாக்களின் ஆட்சிபகுதியாக இருந்த வடமாநிலங்கள் அனைத்திலும் அன்று முதற்கொண்டு இன்றும்கூட சித்பவன பிராமணர்களே ஆட்சியாளர்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.

இந்துக்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிறுத்திக்கொண்ட மராத்திய சித்பவன பிராமண பேஷ்வா அரசு வட இந்தியாவின் முக்கிய பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது சித்பவன பிராமணர்களின் கருத்தியலும்,செல்வாக்கும் ,அதிகாரமும் அந்த பகுதிகளில் நிலைபெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கைப்பற்றப்பட்ட புதிய பிரதேசங்களில் ஆட்சி நீடித்து நிற்க அந்த பகுதி மக்கள் தங்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யாமல் இருக்க மதத்தை  ஆட்சியாளர்கள் ஒரு யுக்தியாக பயன்படுத்துகின்றனர். மன்னர் கடவுளின் பிரதிநிதியாக இருப்பார் அல்லது அவர் கடவுளாகவே மாறிவிடுவார்.சாமானிய மக்கள் கடவுளுக்கு அஞ்சி ,பயபக்தியோடு இருப்பதால் மன்னர்களுக்கு எதிராக கலகக்குரல் எழுப்பாமல் ,தங்கள் மீது திணிக்கப்பட்ட இழிநிலையை ஏற்றுக்கொண்டு வாழவும் மதங்கள் போதிக்கின்றது.

வரலாற்றில் மேல்,கீழ் சாதிகள் என்பது ஆக்கிரமிப்பாளன், ஆக்கிரமிக்கப்படுபவன் ஆகியவர்களுக்கான வரலாறு என்பதாகவே பார்க்கப்படவேண்டியது உள்ளது.தன்னிடம் ஆயுத பலம் இருந்தாலும் ஆக்கிரமிப்பாளன் புதிய பகுதியில் சிறுபான்மையாக இருப்பது அவனிடம் எப்போதும் அச்ச உணர்வு இருந்து வர காரணமாக அமைகிறது .அதன் பொருட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் பழைய ஆட்சியாளர்களின் மீது கோபம் கொண்ட சில சமுகப்பிரிவுகளுக்கு  பதவிகள் ,நிலங்கள் கொடுத்து அவைகளை தன்வசப்படுத்துவதோடு பழைய ஆட்சியாளர்களை கட்டுபடுத்துவதையும் ,எழுச்சி கொள்ளா வண்ணம் அடக்குவதையும் அச்சமுகப்பிரிவுகளுக்கு கைமாற்றி விடுகின்றனர். தங்களுக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பினை இந்த சமுகப்பிரிவுகளும் தவறாமல் பயன்படுத்திக்கொண்டனர் .இதற்கு பிறகு முரண்பாடு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ,ஆக்கிரமிக்கப்பட்டவர்களுக்குமானது என்பது மாறிப்போய் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் பிரித்தாளப்பட்ட சமுகப்பிரிவுகளிடையே என்பதாக திசைமாறி நிலைத்து விடுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் இந்த முரணை  தங்கள்  முழு கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு அவர்கள் வசதிக்கேற்ப  வளர்க்கவோ, தணிக்கவோ, ஊதிப்பெருக்கவோ,மடைமாற்றம் செய்யவோ செய்தனர்.இது சாதிய படிநிலையில் சில மாற்றங்களையோ,அல்லது தலைகீழ் மாற்றங்களையோ கொண்டு வரவும் செய்தது.மக்கள் பழைய வரலாற்றை மறந்திட புதிய திரிக்கப்பட்ட வரலாறுகள் திணிக்கப்பட்டன.இதுவரை ஏற்றத்தில் இருந்தவர்கள் இழிநிலைக்கு தள்ளப்பட்டனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு  உதவியவர்கள் ஏற்றம் பெறுகிறார்கள்.நிலங்கள் பறிக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இந்த நிலவுடமை மாற்றங்களை உறுதிப்படுத்த,
நியாயப்படுத்த,புனிதப்படுத்த மதங்கள் தன்னுடைய பரிபூரண ஆசியை வழங்கியது.

இவை அனைத்தும் குறிப்பிட்ட பகுதியின் சமுக பொருளாதாரத்தையும் ,வரலாற்றையும் மாற்றி அமைத்துவிடுகிறது.இரண்டு தலைமுறைகளுக்கு பின்னர் மண்ணுக்கு சொந்தமானவர்களின் வரலாறு திரிந்து மறைக்கப்பட்டு  ஆக்கிரமிப்பாளர்களுக்கு உகந்த வகையில் வரலாறு எழுதப்படுகிறது.அதுவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு அனுசரணையான சமுகப்பிரிவுகளின் ஆதரவோடும்,கண்காணிப்போடும் நிலைத்து நீடிக்கவும் செய்யப்படுகிறது.

பரந்த பிரதேசத்தை உள்ளடக்கிய வடமாநிலங்கள் இன்று தங்கள் சொந்த தாய்மொழிகளை இழந்து ,மறந்து இந்தி பேசும் மாநிலங்களாகவும், ஆரிய பிராமண கருத்தியலை தாங்கி பிடிப்பவையாகவும் மாறியிருப்பதன் பின்னணி அந்தப்பகுதிகளை இன்றும் ஆள்வது மராத்திய பேஷ்வா அரசின் வழித்தோன்றல்கள்தான் ,அதாவது சித்பவன பிராமணர்கள்தான். வடமாநில மக்களின் நலனுக்காக என்று தோற்றமளிப்பது அனைத்தும் மராத்திய சித்பவன பிராமணர்களின் நலனை காப்பதற்காகத்தான்.இவைதான் வடமாநில அரசியலின் பின்னே ஒளிந்து கிடக்கும் அரசியல்.ஆதிக்கங்களுக்கு எதிராக பல்வேறு கலகக்குரல்கள் எழுந்தாலும் இறுதியில் அவை கொடூரமாக நசுக்கப்பட்டன. இவர்களால்தான் நாம் அடிமைப்பட்டோம் என்ற வரலாறே தெரியாமல் அவர்களின் தலைமைக்கு கட்டுபட்டு பறிக்கப்பட்ட தங்கள் நிலங்களில் வரலாற்றை இழந்த வடமாநில பூர்விக மக்கள் அடிமையாக வாழ்ந்து வருகிறார்கள் .இதே சித்பவன பிராமணர்கள்தான் பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தோற்றுவித்தனர்.வடமாநிலங்கள் முழுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதிக்கம் செலுத்துவதற்கு  அடித்தளமும்,பின்னணியும்,பலமுமாக விளங்குவது மராத்திய அரசின்  இந்த 300 ஆண்டு கால ஆட்சியே.

ஒவ்வொரு கூலித்தொழிலாளியும் முதலாளியின் கருணையினாலும்,தயவினாலும் வாழ்ந்து வருவதாக கருதி வந்த உலகிலே, உழைப்புதான் செல்வத்தை படைக்கிறது,தொழிலாளியின் உழைப்பை சுரண்டுவதன் மூலம்தான் முதலாளி செல்வம் படைத்தவனாகிறான்.”நான் முதலாளியின் தயவிலே வாழவில்லை ,என் தயவிலே வாழும் முதலாளிதான் என்னை அநியாயமாக சுரண்டி என் ஏழ்மைக்கு காரணமாக இருக்கிறான் “, போன்ற உண்மைகளை தொழிலாளி வர்க்கம் புரிந்துக்கொண்ட போதுதான் தன்னை ஒடுக்குகின்ற முதலாளி வர்க்கத்தை எதிர்த்து போராடுவதற்கான கருத்தியல் ஆயுதத்தை தொழிலாளி வர்க்கம் பெற்றது.மார்க்சியம் கண்டடைந்து உலகிற்கு உணர்த்திய இந்த உண்மையின் உக்கிரத்தில்தான் பல தேசங்களில் புரட்சி சாத்தியமாயிற்று.இல்லையென்றால் வரலாறு புரட்டர்களின் கதைகளை கொண்டு நிரப்பப்பட்டு உழைக்கும் மக்களின் உரிமைகள் நிரந்தரமாக கல்லறைகளில் புதைக்கப்பட்டிருக்கும்.அதைப்போலவே நீ அடிமை, தாழ்ந்தவன் என்று தமிழ்நாட்டில் வரையறுக்கப்பட்டிருக்கும் பல சமுகங்களின் உண்மையான வரலாறு மீட்கப்படுமானால் அவர்களும்  தளைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு அது ஒரு கருத்தாயுதமாக பயன்படும்.

தமிழ்நாட்டின் கடந்த 2000 ஆண்டுகால வரலாறு கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.பெரும்பாலான ஆய்வுகள் வெற்று வரலாற்று பெருமைகளை பறைசாற்றும் வகையிலும்,கற்பனை திறன் கொண்டும் புனையப்பட்டிருக்கிறதே தவிர மக்கள் வாழ்நிலையை ஆய்வு செய்து எழுதப்பட்டவை அல்ல.தமிழ்நாட்டின் வரலாறு குறித்த ஆழமான ,விரிவான,நேர்மையான ஆய்வுகளை  முன்னெடுக்க வேண்டும்.அது தமிழ்நாட்டின் அரசியல் வழியினை வகுப்பதற்கான அடிப்படையில் ஒன்றாக இருக்கும்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *